அன்பானவர்களே, "இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்" (ஏசாயா 8:18) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். எத்தனை மகிமையான சத்தியம்! தேவன், சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு நம்மை அழைக்கவில்லை; ஆனால், தமது மகிமைக்காக அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் பிரகாசிக்கும்படி அழைத்திருக்கிறார். யோசுவா, "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" (யோசுவா 24:15) என்று அறிக்கையிட்டான். எல்லா குடும்பத்தினரும் செய்ய வேண்டிய அறிக்கை இது. குடும்பமாக ஆண்டவரைச் சேவிப்பது நாம் விட்டுச்செல்லக்கூடிய பெரிய சுதந்தரமாகும். அன்பானவர்களே, உங்கள் வீட்டில் இப்படி தீர்மானிப்பீர்களா? உங்கள் பிள்ளைகளோடு நின்று, "நாங்கள் ஆண்டவரையே சேவிப்போம்," என்று சொல்லுங்கள். குடும்பம், தேவனுக்கு தன்னை அர்ப்பணிக்குமானால், அது மறைக்கப்படக்கூடாத சாட்சியாக மாறும்.
ஆண்டவர் என்னை அழைத்ததை நான் நினைவுகூர்கிறேன். என் குடும்பத்தில் நான்தான் இளையவள். என் வீட்டில் எல்லோரும் ஜெபிக்கக்கூடியவர்கள். ஆனால் நான் ஒருபோதும் ஜெபித்ததில்லை. நான் விளையாட்டுத்தனமாக, கவனமற்றவளாக, ஆண்டவரைக் குறித்த எண்ணமற்றவளாக இருந்தேன். ஆனால், தமது மிகுந்த இரக்கத்தினால் ஆண்டவர் என்னை தெரிந்துகொண்டார். என்னை தம் பிள்ளையாக்கினார்; தமது மந்தைக்குள் சேர்த்துக்கொண்டார்; தமது வேளையில், என்னை வல்லமையான தேவ ஊழியரான என் கணவருடன் இணைத்தார். நாங்கள் இணைந்தே தேவனுக்கு ஊழியம் செய்தோம். என் வாழ்க்கை முற்றிலும் மறுரூபமானது. இன்றைக்கு என்னால், "இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்" என்று தைரியமாக சொல்லமுடியும். என்னுடைய பெலத்தினால் அல்ல; தேவ கிருபையின் அப்படியாயிருக்கிறது. எனக்கு அவர் செய்தவற்றை உங்களுக்கும் செய்ய முடியும். அவர் உங்கள் வீட்டை, உங்கள் பிள்ளைகளை, உங்கள் எதிர்காலத்தை தமது வல்லமைக்கும் மகிமைக்கும் சாட்சியாக இருக்கும்படி மாற்றுவார்.
அன்பான தேவ பிள்ளையே, எல்லா குடும்பமும் உபத்திரவங்களை, துக்கங்களை, சோதனைகளை எதிர்கொள்கிறது. ஆனால், வேதம், "உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்" (சங்கீதம் 91:1,2) என்று கூறுகிறது. ஆம், அவரது சமுகத்தில் தினமும் தங்கியிருப்பதே ஆசீர்வாதத்தின் இரகசியம். ஜெபித்தும் ஆராதித்தும் ஆண்டவரை கிட்டிச்சேருங்கள். அவர் உங்கள் குடும்பத்தை பாதுகாத்து உயர்த்துவார். நீங்கள் கூடிவந்து பாடி, தேவனை மகிமைப்படுத்துங்கள். அவரது ஆவியானவர் உங்கள் வீட்டை சமாதானத்தினால் நிரப்புவார். அன்பானவர்களே, இன்றைக்கு உங்கள் இருதயத்தை திறந்திடுங்கள். உங்கள் குடும்பத்தை இயேசுவுக்கு அர்ப்பணித்திடுங்கள். அவரது கிருபை உங்களை மூடி, இந்தத் தலைமுறையில் உங்களை அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் பிரகாசிக்கப்பண்ணுவார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, இன்றைக்கு உம்முடைய வார்த்தையை ஈவாக அருளுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய பிள்ளையாக இருக்கும்படியும், அற்புதமாக, அடையாளமாக வாழ்வதற்காகவும் என்னை அழைக்கிறதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உம்மைச் சேவிக்கிறதற்காக தெரிந்துகொள்ளப்பட்ட என் குடும்பத்தை ஆசீர்வதியும். சர்வவல்லவராகிய உம்முடைய பிரசன்னத்தின் நிழலில் என் வீட்டைப் பாதுகாத்தருளும். என் வீட்டாருக்கு சமாதானத்தை, ஒற்றுமையை, சந்தோஷத்தை தந்தருளும். என்னை நீர் மாற்றியதுபோல, உம்முடைய ஆவியின் வல்லமையால் என் குடும்பத்தை மறுரூபமாக்கியருளும். குடும்பமாக இணைந்து உம் நாமத்தை மகிமைப்படுத்த உதவும். இந்தத் தலைமுறையில் என் குடும்பம் உமக்கு மகிமையாக பிரகாசிக்கட்டும் என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.