எனக்கு அருமையான தேவபிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்" (லேவியராகமம் 26:9) என்ற வசனத்தை தியானிப்போம். தேவனாகிய கர்த்தர் அருமையான வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார் அல்லவா? தேவன் ஒன்றை கூறினால் அதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். நோவாவின் நாட்களில் சகலமும் அழிக்கப்பட்டது. ஆனால் கர்த்தர், நோவாவையும் அவன் வீட்டாரையும் நோக்கி, "நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்" (ஆதியாகமம் 9:1) என்று கூறினார். பூமியில் ஒன்றும் இல்லாதிருக்கையில் தேவன் இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார்; அவர் கூறியவிதமாகவே அது நடந்தது. தேவன் ஒன்றை கூறினால், அதை நிறைவேற்றுவார்.
ஆகவே, தேவனுடைய வார்த்தைகளை நாம் வாசிக்கவேண்டும்; அவர் கூறியவை நிறைவேறும் என்று விசுவாசிக்கவேண்டும். வேதாகமத்தில் யாக்கோபுக்கு விரோதமாக அவன் தமையனான ஏசா எழும்பி அவனை அழிக்கத் தேடினான் (ஆதியாகமம் 32:12). ஆனால், தேவன் யாக்கோபை வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்று, பல பிள்ளைகளைக் கொடுத்து அவன் குடும்பத்தை ஆசீர்வதித்தார்; மிகுதியாக செழிக்கும்படி செய்தார். தேவனால் எல்லாவற்றையும், சகலவற்றையும் செய்ய முடியும். எல்லாக் காரியங்களிலும் நீங்கள் பெருகியிருப்பீர்கள் என்று வாக்குக்கொடுக்கிறார்; அதை உறுதியும் படுத்துகிறார் (2 கொரிந்தியர் 8:7; யாக்கோபு 1:4). "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலிப்பியர் 4:19).
அன்பானவர்களே, நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோல, உங்களை நேசிப்பதற்கு யாருமில்லாததுபோல உணரலாம். ஆனால், ஆண்டவரை நோக்கிப் பாருங்கள்; அவரை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார். நோவாவை சீர்ப்படுத்தியதுபோன்று, யாக்கோபை ஆசீர்வதித்ததுபோன்று தலைமுறை தலைமுறைக்கும் தம் உடன்படிக்கையை காத்துக்கொள்வார். அவர் உங்கள்மேல் தயவுகாட்டுவார்; உங்களை கனிகொடுக்கச் செய்வார்; பலுகப் பண்ணுவார்; உங்கள் வாழ்க்கையைக் குறித்து கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றுவார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நீர் என்மேல் கண்ணோக்கமாயிருப்பீர் என்ற அருமையான வாக்குத்தத்தத்தை தருவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என்னை எல்லாவற்றிலும் கனிகொடுக்கப்பண்ணும்; பலுகப்பண்ணும்; என்னுடனான உம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும். எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோல் காணப்பட்டாலும், மாறாத உம் வார்த்தையை நான் நம்புகிறேன். நோவாவையும் யாக்கோபையும் நீர் ஆசீர்வதித்ததுபோல், என் வாழ்க்கையையும் பரிபூரணத்தினால், சமாதானத்தினால், சந்தோஷத்தினால் ஆசீர்வதித்தருளும். என்னுடைய குறைவுகளையெல்லாம் மகிமையான உம்முடைய ஐசுவரியத்தினால் நிறைவாக்கி, என் வாழ்க்கையை உம்முடைய உண்மைக்கு சாட்சியாக மாற்ற வேண்டுமென்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன், ஆமென்.