பிரியமானவர்களே, "உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்" (எசேக்கியேல் 36:11) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். உங்களை இரட்சிப்பது மட்டுமே ஆண்டவருடைய விருப்பமல்ல; உங்கள் வாழ்வின் எல்லா பகுதியையும் ஆசீர்வதிக்க அவர் விரும்புகிறார். அவர், "பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்" (3 யோவான் 2) என்று கூறுகிறார். அவர் செழிப்பின் தேவனாயிருக்கிறார். உங்கள் ஆத்துமா பரிசுத்தத்திலும், சரீரம் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை பரிபூரணத்திலும் செழிக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆகவே, உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. நீங்கள் உண்மையாக நடக்கும்போது, பாவத்திலிருந்து விலகியிருக்கும்போது, உங்கள் வாழ்க்கை நன்மையினால் நிரம்பும். வேதம், "துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும்... கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.... அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்" (சங்கீதம் 1:1-3) என்று கூறுகிறது.

யோசேப்பின் வாழ்க்கையைப் பாருங்கள் (ஆதியாகமம் 39ம் அதிகாரம்). அவன் சோதனைக்கு எதிர்த்து நின்று, தேவனுக்கு உண்மையாயிருந்தான். அவனுடைய பரிசுத்தத்தினால் கர்த்தர் அவனை மூன்று வழிகளில் செழிக்கப்பண்ணினார். முதலாவது, "கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்" (ஆதியாகமம் 39:2). இரண்டாவது, "(எஜமான்) யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்" (ஆதியாகமம் 39:4); மூன்றாவது, "கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்" (ஆதியாகமம் 39:5). இதுபோன்றே நீங்கள் தேவனை கனப்படுத்தும்போது, உங்கள் படிப்பு, வேலை, தொழில், குடும்பம் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படும். ஏற்றவேளையில் உங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் சமாதானம் விளங்கும். தேவனுக்கு நீங்கள் உண்மையாயிருப்பதினால், உங்கள் நிறுவனம் அல்லது ஊழியம் எதுவாயினும் செழிக்கும். பரிசுத்தம், ஞானம், தேவ தயவு எல்லாவற்றின் வழியாகவும் செழிப்பு பாய்ந்து வரும்.

இந்த ஆசீர்வாதத்தை நாம் எப்படி தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும்? தேவனுடைய வசனத்தில் பிரியமாயிருந்து நாள்தோறும் அதை தியானிக்கவேண்டும் என்பதே அதற்கான பதிலாகும் (சங்கீதம் 1:2). அவரது வசனம் உங்களை பரிசுத்தமாகக் காத்துக்கொண்டு, வெற்றி பெறுவதற்கான ஞானத்தை அளிக்கும். தேவ ராஜ்யத்தில் உங்கள் தசமபாகம், நன்கொடைகள், உதாரத்துவமான காணிக்கைகள் மூலம் விதைத்திடுங்கள். அது பன்மடங்கு பெருக்கத்தை அளிக்கும். ஈசாக்கு விதைத்தான். தேவன் நூறுமடங்கு பலனை பெற்றுக்கொண்டான் என்று வேதம் கூறுகிறது (ஆதியாகமம் 26:12,13). இறுதியாக, எல்லா செய்கைகளையும் கர்த்தரிடம் ஒப்படையுங்கள் (நீதிமொழிகள் 16:3). பாரங்களை உங்கள் தலையின்மேல் சுமக்காமல், அவரது அன்பை நம்புங்கள். கீழ்ப்படிதலோடு, விசுவாசத்தோடு, உதாரகுணத்தோடு நடந்தால், முன்பை காட்டிலும் செழிப்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என்னை செழிக்கப்பண்ணுவதாக நீர் வாக்குக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் ஆத்துமா பரிசுத்தத்திலும் சமாதானத்திலும் வாழ்ந்திருக்கப்பண்ணும். என் உடல் பெலனிலும் நற்சுகத்திலும் வாழ்ந்திருக்கப்பண்ணும். என் குடும்பத்தில் ஒருமனமும் சந்தோஷமும் செழித்திருக்கப்பண்ணும். என் படிப்பை, வேலையை, ஊழியத்தை வர்த்திக்கப்பண்ணும். என் கரத்தின் கிரியைகள் ஏற்ற சமயத்தில் கனி கொடுக்கும்படி அருள்புரியும். ஒவ்வொரு நாளும் உம் வசனம் எனக்கு ஞானத்தை அருளட்டும். உம் ராஜ்யத்தில் விசுவாசத்தோடு விதைக்க எனக்கு உதவி செய்யும். என் திட்டங்கள், பாரங்கள் எல்லாவற்றையும் உம் கரங்களில் ஒப்படைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.