அன்பானவர்களே, இது கர்த்தரின் உண்டுபண்ணின ஆச்சரியமான நாளாகும். நம்பிக்கை இழக்காதிருங்கள். "அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்" (ஏசாயா 9:6) என்ற வசனத்திலிருக்கும் தேவனுடைய ஆசீர்வாதத்தை பார்ப்போம். இயேசுவின் நாமத்தைக் குறித்து இந்த வசனம் கூறுகிறது. உண்மையாகவே, இயேசு வரும்போது நம் உள்ளங்களில் எல்லாமும் ஆச்சரியமாக மாறிவிடும். அவரது ஆறுதலும் மகிழ்ச்சியும் தரும் சமுகத்தை நாம் அனுபவிப்போம். அவர் நமக்கு அதிசயமானவராக, ஆலோசனை கொடுத்து, தாம் நமக்கென்று உருவாக்கியிருக்கும் சரியான பாதையில் நம்மை நடத்துவார். நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆச்சரியமான காரியங்களை நம் வாழ்வில் செய்யக்கூடிய வல்ல தேவன் அவர். நம்மைச் சுமப்பதோடு இந்த உலகில் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் நித்தியமாக, அதாவது பரலோகத்திலும் அருளக்கூடிய நித்திய பிதாவாக இருக்கிறார். அவர் பரலோகத்தையும் நமக்குத் தருகிறார். நம் வாழ்வில் பெரிய சமாதானத்தையும் திருப்தியையும் அருளுகிற சமாதானப் பிரபுவாக அவர் இருக்கிறார்.

ஆரம்பத்திலிருந்தே, அதாவது சீஷர்களை அழைத்து, தம்மை பின்பற்ற தெரிந்தெடுத்ததிலிருந்து, அவர் இவ்வாறே தம் சீஷர்களை நடத்தினார். அவர்கள் அனுதினமும் இயேசு தங்கள் வாழ்க்கையில் எப்படியிருக்க முடியும் என்பதை கண்டார்கள். நாம் அதை எண்ணி மிகவும் பொறாமை கொள்கிறோம் அல்லவா? அதேபோன்று இயேசு அனுதினமும் நம்முடன் நடந்தால் எவ்வளவு ஆச்சரியமாயிருக்கும் என்று எண்ணிப் பார்ப்போம்! தாங்கள் செய்துகொண்டிருந்ததை விட்டுவிட்டு அவரை பின்தொடருமளவுக்கு அவர் ஆச்சரியமானவராக இருந்தார். இயேசு தங்களுடன் இருப்பதால் அவர்கள் தைரியமாக உணர்ந்தார்கள்; தங்கள் வாழ்க்கைக்கு மெய்யான அர்த்தம் கிடைத்ததாக எண்ணினார்கள்.

அவர், அவர்களுக்கு அநேக ஆலோசனைகளைக் கூறியதோடு, பல காரியங்களை கற்பித்துக்கொடுத்தார். வல்லமையான தேவனான அவர் அற்புதங்களை அவர்களுக்கு செய்ததோடு, அவர்கள் மூலமாகவும் செய்தார். அவர்களுக்குத் தேவைப்பட்டவை அனைத்தையும் அருளிச்செய்த நித்திய பிதாவாக அவர் இருந்தார். அவர்கள் கண்களுக்கு முன்னரே புயலை அமர்த்திய சமாதானப் பிரபுவாக இருந்தார். உங்கள் வாழ்விலும் எல்லா சூழ்நிலையிலும் அவர் அப்படியே இருப்பார். நீங்கள் அவருடைய சீஷர். அவரை பின்பற்றுங்கள்; இப்போதே உங்கள் வாழ்க்கையில் அவரது நன்மையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மையல்லாமல் நான் என்ன செய்வேன்? நீர் அதிசயமானவர். ஆண்டவரே, இப்போது உம் ஆச்சரியமான சமுகத்தை அனுபவிக்கும்படியும், இரட்சணிய சந்தோஷத்தை பெற்றுக்கொள்ளும்படியும் செய்யும். நீர் என்னோடிருப்பதால் எனக்கு தைரியத்தைத் தாரும். என் உள்ளத்தில் நீர் கொடுக்கும் தைரியத்திற்காகவும், எல்லா பயத்தையும், சந்தேகங்களையும் விரட்டுவதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எனக்கு ஆலோசகராக இருப்பதற்காக உமக்கு நன்றி. நான் என்ன செய்யவேண்டும் என்றும், என்ன தீர்மானிக்கவேண்டும் என்றும், என் வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்றும் என்னை வழிநடத்தும். ஆண்டவரே, எந்த வேலையை நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்று எனக்குக் காண்பியும்; பெரிய பாதைகளை எனக்காக திறந்தருளும்; அந்தப் பாதைகளில் என்னை நடத்தி ஆசீர்வதித்தருளும். நித்திய பிதாவாகிய நீர் எனக்கு எல்லாவற்றையும் அருளிச்செய்யும். ஆண்டவரே, என் தேவைகள்பேரில் கரிசனை கொண்டு, என்னை ஆசீர்வதித்தருளும். உம் சமாதானத்தை அருளி பாக்கியத்தை தாரும். உடைந்த என் உள்ளத்தை குணமாக்கும்; எல்லா உபத்திரவங்களின் மத்தியிலும் என் இருதயத்திலும் குடும்பத்திலும் என் வாழ்வின் எல்லா பகுதியிலும் உம் சமாதானத்தைக் கட்டளையிடும். ஆண்டவரே நான் உம்மை ஏற்றுக்கொள்கிறேன் என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.