அன்பானவர்களே, இன்றைய தினம், தேவன் உங்களுக்கு ஞானத்தை அளிக்கும் நாளாகும். தேவன் தம்முடைய ஞானத்தை உங்கள்மேல் பொழிந்தருள விரும்புகிறார். "ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்" (நீதிமொழிகள் 28:26)என்று வேதம் கூறுகிறது.
இந்த உலகில் ஒருவரை உயரச் செய்வது ஞானமாகும். உலகபிரகாரமான ஞானமோ, மனுஷரின் ஞானமோ அல்ல; தேவனுடைய ஞானமாகும். தேவ ஞானம், உலக ஞானத்திலிருந்து வேறுபட்டதாகும். உலக ஞானமானது மற்றவர்களை மேற்கொண்டு, உங்களுக்கு நன்மைகளை சம்பாதித்துக்கொள்ள போதிக்கிறது; ஆனால், பெரும்பாலும் இதனால் மனம் புண்படும்; வெறுப்பு உண்டாகும். ஆம், மக்கள் உலகபிரகாரமான ஞானத்தினால் அதிகாரத்தை பெறுகின்றனர்; ஆனால், அதை எப்படி பயன்படுத்துகிறார்கள்? பலர் அதை மற்றவர்களை அழிப்பதற்கு, பயமுறுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர். உலக ஞானம் அழிக்கக்கூடியது; இறுதியில் தன்னை சார்ந்திருக்கிறவர்களை அது அழித்துப்போடுகிறது. மனுஷீக ஞானம் ஒருவரை ஒரு காலத்தில் உயர்த்தலாம்; ஆனால், பெரும்பாலும் அது பெருமையையும் சுயநலத்தையும் கொண்டு வருகிறது; வீழ்ந்துபோகவும் காரணமாகிறது. தேவ ஞானம் என்பது இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த ஞானமாகும். "அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது" (கொலோசெயர் 2:3) என்று வேதம் கூறுகிறது.
இயேசுவுக்கு இருந்த ஞானம் எது? ஆயிரக்கணக்கான ஜனங்கள் அவரை பின்பற்றியதை, அவர் ஜனங்களுக்கு உதவி செய்ததை, ஏழைகள்பேரில் கரிசனை காட்டியதை, கைவிடப்பட்டவர்களை அணைத்துக்கொண்டதை பொறாமை கொண்ட தலைவர்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அவர்கள் தங்கள் அரசு அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி, அவரை பொய்யாய்க் குற்றம்சாட்டி, சிலுவையிலும் அறைந்தனர். அத்துடன் நிற்கவில்லை. இயேசு, சிலுவையில் சரீர வேதனையை சகித்தபோது, அவர்கள் அவருக்கு முன்பாக நின்று, அவர்மேல் குற்றம் சாட்சி, கேலி செய்தனர். இயேசு என்ன செய்தார்? "நான் குற்றமற்றவன். என்னை காப்பாற்றுங்கள்," என்று கெஞ்சினாரா? அவர்களுடைய பொல்லாங்கான அதிகாரங்களுக்கு முன்பு தம்முடைய நியாயத்தை பேசினாரா? தம்மை சபித்தவர்களை, தம்முடைய தெய்வீக அதிகாரத்தை பயன்படுத்தி சபித்தாரா? இவை எதையும் அவர் செய்யவில்லை. இயேசு ஒருபோதும் மனுஷருடைய ஞானத்தையோ, அதிகாரத்தையோ சார்ந்திருக்கவில்லை. மாறாக, அவர் தேவ ஞானத்தை விளங்கப்பண்ணினார்.
தேவ ஞானமானது அன்புகூருவதற்கானது. வெறுப்பை அன்பினால் ஜெயிப்பதே தேவ ஞானமாகும். ஆம், அவரது ஞானம், உலக ஞானத்தினால் வருகிற வெறுப்புணர்வையும் சுயநலத்தையும் அவரது அன்பினால் அழித்துப்போடுகிறது. இயேசு சிலுவையில் தொங்கும்போது, "பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்," என்றார். தாம் மாத்திரமே மொத்த மனுக்குலத்திற்கும் இரட்சிப்புக்கான வழி என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே, தமக்கு தீங்கு செய்தவர்களுக்காய், "பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்," என்று வேண்டிக்கொண்டார். "எனக்கு மாத்திரமே மன்னிக்கும் அதிகாரம் இருக்கிறது. நான் மன்னிக்கவேண்டும்," என்று அவர் கூறினார். அதுவே தேவ ஞானம். அது அவரது அன்பின் மூலமாக வெளிப்பட்டது. சகல அதிகாரமும் இருந்தாலும், நாம் அனுபவிக்கிற பாடுகளை சகித்த அவரை, சத்துருக்களை மன்னிக்கிற அவரை நாம் தேவனாக கொண்டாடுகிறோம். அவருக்கு தீங்கு செய்தவர்களையும் அவர் மன்னித்தார். நாமும் ஆண்டவருக்கு விரோதமாக தவறு செய்தோம். நம்மை அவர் மன்னித்தார். அவருடைய மன்னிப்பின் மூலம் நாம் இயேசுவின் பிள்ளைகளானோம்.
நீங்களும் இயேசுவின் பிள்ளையாக மாறலாம். "உலக ஞானம் எனக்கு இருக்கிறது" என்று நீங்கள் கூறலாம். ஆனால், அந்த ஞானம் மற்றவர்களை புண்படுத்தவோ, நீங்கள் முன்னேறுவதற்காக மற்றவர்களை அழிக்கவோ காரணமானால் அது தேவ ஞானமல்ல. மனுஷீக ஞானம் உங்களுக்கு இருந்து, நீங்கள் உயரும்போது, சுயநலமும் பெருமையும் உங்கள் இருதயத்திற்குள் வருமானால் உங்களுக்கு சமாதானம் இருக்காது.
இன்றைக்கு இயேசுவின் ஞானத்தை கேளுங்கள். அவருடைய ஞானம் உங்களை சுகமாய்க் காத்துக்கொள்ளும். அவருடைய ஞானம் உங்களை தேவனுடைய பிள்ளையாக்கும். அவருடைய ஞானத்தினால் நீங்கள் ஆயிரக்கணக்கானோருக்கு ஆசீர்வாதமாக விளங்குவீர்கள்; எல்லோரும் உங்களை நேசிப்பார்கள். தேவன்தாமே உங்களுக்கு இந்தக் கிருபையை தருவாராக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, உம்மிடம் மாத்திரமே கிடைக்கும் ஞானத்தை தேடி, தாழ்மையுடன் உம் முன்னே வருகிறேன். உம்முடைய தெய்வீக அன்பினாலும், வெறுப்பையும் சுயநலத்தையும் ஜெயிக்கக்கூடிய ஞானத்தினாலும் என் இருதயத்தை நிரப்பும். உம்முடைய வழிகளில் நடக்கவும், பெருமையையும் உலகபிரகாரமான லட்சியங்களையும் புறக்கணிக்கவும் எனக்கு உதவும். உம்மை சிலுவையில் அறைந்தவர்களை நீர் மன்னித்ததுபோல, எனக்கு தீங்கு செய்தவர்களை மன்னிக்க எனக்கு போதித்தருளும். பிறருக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படியும், உம்முடைய அன்பையும் நேசத்தையும் பரப்பும்படியும் உம்முடைய ஞானம் என்னை வழிநடத்தட்டும். அழியக்கூடிய உலக ஞானத்தை அல்ல; உம்முடைய ஞானத்தையே நான் சார்ந்திருக்க உதவி செய்யும். வெறுப்புக்குப் பதிலாக அன்பையும், பெருமைக்குப் பதிலாக தாழ்மையையும், பொருளாசைக்கு பதிலாக சுயநலமின்மையையும் தெரிவு செய்யக்கூடிய கிருபையை எனக்கு அருளிச் செய்யும். உம்முடைய ஞானத்தினால் என்னை சுகமாய் காத்து, அனுதினமும் உம்மண்டை கிட்டிச் சேர்க்கவேண்டுமென உம்முடைய வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


