அன்பானவர்களே, நீங்கள் எப்போதும் தம் அருகிலேயே இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பலவேளைகளில் நம் தேவைகள் சந்திக்கப்படும்படி, நம் பிரச்னைகள் தீர்க்கப்படும்படி, நாம் ஆசீர்வாதம் பெறும்படிக்கு தேவன் நம் அருகில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். உங்கள் துணையை அவர் விரும்புகிறார் என்பதே சத்தியம். ஏதோ ஒன்றை பெற்றுக்கொள்வதாக மட்டும் நீங்கள் தம் பக்கத்தில் வராமல், கனத்தையும் அன்பையும் பெற்றுக்கொள்ளவும் அவர் சமுகத்தில் ஆனந்திக்கவும் வரவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். "நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்" (நீதிமொழிகள் 8:30). தேவன் தருகிறவற்றுக்காக அல்ல; அவர் யாராக இருக்கிறார் என்பதற்காக அவரோடு இருக்க விரும்புவதே மெய்யான நெருக்கத்தை விரும்பும் உள்ளமாகும். உங்களை துயரம் சூழ்ந்துகொள்ளும்போது, மக்கள் உங்களைத் தவறாய் புரிந்துகொள்ளும்போது, பணக்கஷ்டத்தை அனுபவிக்கும்போது, உணர்வுப்பூர்வமான வேதனையோடு இருக்கும்போது இயேசுவுக்கு அருகில் தங்குங்கள். அவரது சமுகத்தை மற்ற எல்லாவற்றையும்விட அதிகமாக நீங்கள் விரும்பும்போது, அவரது சமாதானம் உங்கள் இருதயத்தில் நிரம்பி வழியும். அவர் நாளுக்கு நாள் உங்களை தம் சந்தோஷத்தால் நிரப்புவார்; உலகத்தின் எந்த சக்தியாலும் அவரில் உள்ள உங்கள் பிரியத்தைத் திருட முடியாது.
"கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை" (சங்கீதம் 16:8) என்று தாவீது அழகாக விளக்குகிறான். உங்கள் கண்களை இயேசுவின்மேல் வைத்திருக்கும்போது, எப்போதும் அவர் அருகிலேயே இருக்கும்போது, நீங்கள் அசைக்கப்படமாட்டீர்கள். உங்கள் பெலன் அவரது சமுகத்திலிருந்து வருவதால், மனுஷரின் எந்த வார்த்தைகளும், எந்த ஏமாற்றங்களும், எந்த உபத்திரவமும் உங்களை அசைக்கமுடியாது. அந்த முறிக்கமுடியாத ஐக்கியத்தை உங்களுக்குத் தருவதற்கு தேவன் விரும்புகிறார். நீங்கள் எழும்பும்போது, "ஆண்டவரே, காலை வணக்கம்," என்றே கூறுவீர்கள். நீங்கள் நடக்கும்போது, அவரோடு பேசுங்கள். நீங்கள் வேலை செய்யும்போதே உங்கள் இருதயம் அவருக்குள் இளைப்பாறட்டும். வாழ்க்கையில் எல்லாமும் பரிபூரணமாக இருப்பதினால் அல்ல; ஆண்டவர் அருகில் இருப்பதாலேயே அவரது சந்தோஷத்தால் நிரம்பி உங்கள் வாழ்க்கை பிரியத்துக்குரியதாக மாறட்டும். உலகம் உங்களை மறந்தாலும், ஜெபங்கள் தாமதித்தாலும், இயேசுவின் சமுகம் உங்களுக்கு அருகில் இருப்பதே மிகப்பெரிய செல்வமாகும். அவரே உங்கள் போஜனமாகவும், உங்கள் தேறுதலாகவும், உங்கள் திருப்தியாகவும் மாறுவார். தாவீது, "நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்," என்று கூறுவதைப்போல சொல்ல முடியும். ஆத்தும பசியை அவரது சமுகம் தீர்க்கும்.
நீங்கள் தேவனை கிட்டிச்சேரும்போது, அவரது ஞானமும் ஆசீர்வாதமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழியும். "ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்" (நீதிமொழிகள் 8:12) என்றும், "கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்" (1 கொரிந்தியர் 1:24) என்றும் வேதம் கூறுகிறது. நீங்கள் அவரண்டையில் இருக்கும்போது, அவரது ஞானத்திலும் வல்லமையிலும் நடப்பீர்கள். அவரது சமுகத்திலிருந்து எல்லா நன்மையும் பூரணமுமான ஈவும் பாய்ந்து வரும் (யாக்கோபு 1:17). அவரோடு நீங்கள் தொடர்ந்து ஐக்கியத்தில் இருக்கும்போது, அதிக சமாதானம், புத்தி, ஆசீர்வாதத்தை உங்கள்மேல் பொழிவார். நீங்கள் எல்லாவற்றையும் அவரது பரலோக நோக்கில் காண தொடங்குவீர்கள். உங்கள் போராட்டங்கள், பாடங்களாகவும், உங்கள் கண்ணீர் சந்தோஷத்தின் விதைகளாகவும், உங்கள் காத்திருக்குதல் ஆராதனையாகவும் மாறட்டும். அன்பு தேவ பிள்ளையே, அற்புதங்களுக்காகவோ, ஆசீர்வாதங்களுக்காகவோ அல்ல; தமக்காக அவர் உங்களை தம்மண்டைக்கு அழைக்கிறார். எல்லாவற்றையும் விட அவரையே அதிகம் விரும்புங்கள். உங்கள் இருதயம், "ஆண்டவரே, நான் தொடர்ந்து உம்மண்டையே இருக்க விரும்புகிறேன்," என்று கூறட்டும். அப்போது அவரது சமுகம் ஒரு கேடகத்தைபோல உங்களைச் சூழ்ந்துகொள்ளும்; நீங்கள் ஒருபோதும் அசைக்கப்பட மாட்டீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என்னை அருகே அமர்த்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, நான் எப்போதும் உம் பக்கத்தில் இருக்க விரும்புகிறேன். உம்முடைய சமுகத்திலிருந்து என்னை விலக்கும்படி கவனத்தை சிதறச்செய்யும் எல்லாவற்றையும் அகற்றும். என் இருதயத்தை நாள்தோறும் உம் சமாதானத்தினாலும் பிரியத்தாலும் நிரப்பிடும். நீர் தருகின்றவற்றுக்காக அல்லாமல் நீர் யாராக இருக்கிறீர் என்பதற்காக உம்மில் அன்புகூர எனக்கு உதவும். உம்மீது கண்களை பதிக்கவும், ஒருபோதும் உலகத்தால் அசைக்கப்படாதிருக்கவும் எனக்குக் கற்றுத்தாரும். உம் ஞானமும் சமுகமும் என் வீட்டையும் வேலையையும் இருதயத்தையும் நிரப்புவதாக. ஆண்டவரே, என்னை உம்முடன் உறுதியான ஐக்கியத்திற்குள் இழுத்துக்கொள்வீராக. உம் சமுகத்தின் சந்தோஷத்தால் என் வாழ்வு நிரம்பி வழியட்டும் என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
இயேசுவின் செல்லப்பிள்ளை


தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now

