அன்பானவர்களே, தேவன், உங்கள் வாழ்க்கையில் ஒரு விளக்கை ஏற்றுவதற்கு விரும்புகிறார். "தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்" (சங்கீதம் 18:28) என்று வேதம் கூறுகிறது. இந்த உலகம் இருளுக்குள் கிடக்கிறது. பாவம், வறுமை, வியாதி, பொல்லாத மக்களால் வரும் ஒடுக்குதல், பிசாசினால் வரும் இருள் உள்ளிட்ட பலவித இருளால் சூழப்பட்டிருக்கிறது. ஆனால், இயேசு கிறிஸ்து, "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" என்று கூறுகிறார்.
உலகத்திற்கு ஒளியாயிருக்கிற இயேசுவை பின்பற்றுங்கள். இந்த உலகின் இருளுக்குள் பிரகாசமாய் ஒளிவீசும்படி, உங்கள் வாழ்க்கையில் அவர் ஒரு விளக்கை ஏற்றுவார். உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்; தேவனுடைய வெளிச்சம் உங்களுக்குள் காணப்படும். நீங்கள் இயேசுவின் பிள்ளை. ஆகவே, பயப்படாதிருங்கள். எல்லா இருளும் இன்றைக்கு இயேசுவின் நாமத்தில் உங்களை விட்டு அகலும்.
மதுரையை சேர்ந்த திருமதி இளையராணியின் சாட்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அவர்களுக்கு 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்த தம்பதியருக்கு ஒரு மகள் பிறந்தாள். ஆனால், திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் அவர்களது கணவர் மரித்துவிட்டார். ஆகவே, அவர்கள் தாங்கொணா துக்கமடைந்தார்கள். தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றார்கள். அவர்கள் தாயார், அவர்களை இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். சனிக்கிழமைதோறும் ஜெப கோபுரத்தில் நடக்கும் உபவாச ஜெபத்தில் அவர்கள் கலந்துகொண்டார்கள். தனக்கு நல்ல எதிர்காலத்தை தரவேண்டுமென்று ஆண்டவரிடம் அழுது ஜெபித்தார்கள். இளவயது விதவையான அவர்கள் பட்டதாரியாக இருந்தாலும் வாழ்வாதாரத்திற்காக போராடினார்கள்; அரசாங்க வேலையை பெற முயற்சி செய்தார்கள். ஆனால், வேலைக்கு விண்ணப்பிப்பதற்குக் கூட அவர்களிடம் பணமில்லை. தினமும் கண்ணீர் வடித்தார்கள். ஆனாலும், தொடர்ந்து ஜெப கோபுரத்திற்குச் சென்று இயேசுவின் நாமத்தில் ஊக்கமாக ஜெபித்தார்கள். அரசாங்க வேலைக்கு அவர்கள் கடைசி முயற்சி செய்தபோது, அவர்கள் ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. அவர்களுக்கு 32 வயதாகியிருந்தும், அவர்கள் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை கிடைத்தது. இப்போது, அவர்கள் மாதம் ரூ.40,000 ஊதியத்தில் பணிபுரிகிறார்கள். எவ்வளவு சந்தோஷம்! ஆம், தேவன், அவர்கள் இருளுக்குள் வெளிச்சம் பிரகாசிக்கும்படி செய்தார்; உங்களுக்கும் அவர் அப்படியே செய்வார்.
ஜெபம்:
பரம தகப்பனே, உம்முடைய தெய்வீக வெளிச்சத்தின் மீது நம்பிக்கையும் விசுவாசமும் நிறைந்த இருதயத்தோடு உம் முன்னே வருகிறேன். பாவம், வறுமை, சஞ்சலத்தின் இருளினூடாக என்னை வழிநடத்தும் விளக்காக நீர் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உம்முடைய பிரசன்னத்தின் பிரகாசம், என் வாழ்வில் எல்லா பக்கத்தையும் வெளிச்சமாக்குவதாக. எல்லா நிழலையும் அகற்றி, உம்முடைய அன்பின், கிருபையின் பிரசன்னத்தால் என்னை நிரப்புவீராக. உலகத்திற்கு ஒளியாக இருக்கும் இயேசுவை பின்பற்றுவதற்கு என்னை பெலப்படுத்தும். அவருடைய ஒளி என் வாழ்வில் பிரகாசிக்கட்டும். என்னுடைய பாரங்களை உம் முன்னே வைக்கிறேன். இருளின் தருணங்களில் நீர் இடைப்பட்டு அவற்றை மறுரூபப்படுத்தும். உம்முடைய வல்லமை எல்லா இருளையும் மேற்கொள்ளும் என்று நான் விசுவாசிக்கிறேன். உம்முடைய வெளிச்சம், புதிதாக நான் ஆரம்பிக்கும் எல்லா காரியங்களிலும் என்னை வழிநடத்தி, எனக்கு மீண்டும் சந்தோஷத்தை அளிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


