அன்பானவர்களே, உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்" (யோபு 17:9) என்ற வசனத்தை தியானிக்கிறோம். இதை உண்மையாய் செய்த ஒரு மனுஷனை வேதத்தில் காண்கிறோம். அவன் தாவீது. "தாவீது வரவர பலத்தான்" என்று வேதம் கூறுகிறது (2 சாமுவேல் 3:1). எப்படி அவனால் அப்படி வளர முடிந்தது? சவுலை கொல்வதற்கான தருணம் தாவீதுக்கு வாய்த்தது. ராஜாவாவதற்கான தருணம் நெருங்கியது. ஆனால் சவுல், கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவனாக இருந்ததினால் தாவீது, அவனை உயிர்தப்ப விட்டான் (1 சாமுவேல் 24ம் அதிகாரம்). சவுலின் சால்வையின் ஓரத்தை அவன் வெட்டினாலும், தன் கையால் சவுலின் இரத்தம் சிந்தப்பட இடங்கொடுக்கவில்லை. கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவரின் இரத்தம் தன் கையால் சிந்தப்படுவதை தாவீது விரும்பவில்லை. தாவீது, தன் கைகளை சுத்தமாகக் காத்துக்கொண்டதால், அடுத்த அதிகாரத்திலே மேன்மேலும் பலத்தான் என்ற வாசிக்கிறோம்.
நம்முடைய கைகளையும் இருதயத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்? இதற்கான பதிலை சங்கீதத்தில் பார்க்கிறோம். "யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே" (சங்கீதம் 24:3,4). தேவனுக்கு முன்பாக நிற்பதற்கு, நாம் உத்தமமாக, சரீரபிரகாரமாக சுத்தமாக மட்டுமல்ல, நாம் செய்யும் எல்லாவற்றிலும் நேர்மையாக இருக்கவேண்டும். பொய் சொல்வது, ஏமாற்றுவது இவற்றை தவிர்த்து, உண்மையாக முயற்சிசெய்து, கருத்தாக, நேர்மையுடன் வேலை செய்யவேண்டும். இந்த காரியங்கள் நம் கைகளையும் இருதயத்தையும் சுத்தமாக காத்துக்கொள்ளும். என் தாத்தா இறுதியாக, "என் கைகள் சுத்தமாயிருக்கின்றன. என் இருதயம் சுத்தமாக இருக்கிறது. என் வார்த்தைகள் சுத்தமானவை. நான் இப்போது உலகில் எந்த மனுஷன் முன்பாகவும் தேவனுக்கு முன்பாகவும் நிற்க முடியும்," என்று கூறியது நினைவுக்கு வருகிறது. இப்படி கூறிய பிறகு அவர் தன் பரலோக எஜமானை சந்திக்கும்படி இவ்வுலகை விட்டு கடந்து சென்றார். அவர் விட்டுச்சென்ற மரபு இன்றைக்கும் தொடர்கிறது.
அவ்வண்ணமாக, நீங்கள், வேலையில், படிப்பில், உறவுகளில் உத்தமமாய் வாழும்போது தேவன் உங்களை கனப்படுத்துவார். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நேரத்தை, பணத்தை மிச்சம்பிடிக்குமாறு காரியங்களை செய்தாலும் நீங்கள் உண்மையாயிருங்கள். உங்கள் கைகள் சுத்தமாயிருக்கட்டும். உயரவேண்டுமென்று வஞ்சகமான வழிகளில் முயற்சிக்காதிருங்கள். உங்கள் உண்மையைக் காணும் தேவன், அனைவர் முன்பாகவும் உங்களை கனப்படுத்துவார். தாவீதை ராஜாவாக உயர்த்தினார். தேசத்தை ஆளும்படி பார்வோனுக்கு அடுத்த நிலைக்கு யோசேப்பை உயர்த்தினார். தேசத்தில் முக்கியமான பிரதானிகளுள் ஒருவனாக தானியேலை உயர்த்தினார். தைரியத்திற்காகவும் இருதயத்தின் சுத்தத்திற்காகவும் எஸ்தரை ஆசீர்வதித்தார். அவ்வண்ணமே தேவன் உங்களையும் கனப்படுத்துவார். உங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளும்போது, நீங்கள் வரவர பலப்பீர்கள்; உயருவீர்கள். உங்கள் சூழ்நிலைகள் எல்லாவற்றையும் ஆண்டவரிடம் ஒப்படையுங்கள். அவர் பொறுப்பெடுத்துக்கொள்வார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, சுத்தமான இருதயத்தோடும், சுத்தமான கைகளோடும் வாழும்படி என்னை அழைத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். யாரும் பார்க்காதபோதும் உத்தமமாய் நடப்பதற்கு எனக்கு உதவி செய்யும். குறுக்கு வழிகளில் செல்வதைக் காட்டிலும் நேர்மையாக இருக்கவும், சமரசம் செய்துகொள்வதைக் காட்டிலும் உண்மையை தெரிந்துகொள்ளவும் எனக்குக் கற்றுத்தாரும். என் கிரியைகள், உம்முடைய பரிசுத்தத்தை காட்டுவனவாய் அமையட்டும்; உமது சமுகத்தில் நான் பலத்தின்மேல் பலனடையட்டும். ஆண்டவரே, நான் சோதிக்கப்படும்போது என்னை பலப்படுத்தும். உமக்கு உண்மையுள்ளவனா(ளா)க இருப்பதால் என்னை கனப்படுத்தும். ஏற்ற நேரத்தில் நீர் என்னை உயர்த்துவீர் என்று நம்பி, என்னுடைய சூழ்நிலைகள் எல்லாவற்றையும் உம் கரங்களில் ஒப்படைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.