எனக்கு அருமையான தேவ பிள்ளையே, ஆண்டவரும் இரட்சருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்" (சங்கீதம் 36:8) என்ற வசனத்தை தியானிப்போம். எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம்! தேவன், தம் பிள்ளைகள் தம்முடைய வீட்டின் பரிபூரணத்தை அனுபவிக்கும்படியும், தம்முடைய பேரின்ப நதியில் பானம் பண்ணும்படியும் விரும்புகிறார். இதைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் உண்மையாய் அவரைத் தேட வேண்டும். தாவீது, மகா பெரிய ராஜாவாக இருந்தாலும் தன்னை தாழ்த்தி கர்த்தரை காலையிலும் மாலையிலும் இரவிலும் தேடினான். பொறுப்புகள், தேவ சமுகத்திலிருந்து தன்னை விலக்கி வைக்க அவன் அனுமதிக்கவில்லை. இன்றைக்கு அநேகர், "எனக்கு மிகுந்த வேலையிருக்கிறது; ஜெபிக்க நேரமேயில்லை," என்று சொல்கிறார்கள். ஆனால், அப்படிச் சொல்வதால் தேவனுடைய உச்சிதமான ஆசீர்வாதங்களை தவற விடுகிறார்கள்.

அன்பானவர்களே, வேதம், இயேசு தேவனுடைய குமாரனாக இருந்தபோதிலும் ஜெபத்தில் அதிக நேரத்தை செலவிட்டதை காட்டுகிறது. அதிகாலையில் அல்லது பின்னிரவில் அல்லது எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது அவர் பிதாவிடம் ஜெபித்தார். ஆகவேதான் அவரது வாழ்க்கையிலும் ஊழியத்திலும் அவ்வளவு வல்லமை காணப்பட்டது. வேதம், "சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" (சங்கீதம் 34:10) என்று கூறுகிறது. நாம் தேவனை தேடும்போது, அவர் நம் வாழ்க்கையை நன்மையினால் நிரப்புகிறார். அதற்கும் மேலாக, தேவன், "தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்" (ஏசாயா 44:3) என்று வாக்குப்பண்ணுகிறார். பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவதே மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். பரிசுத்த ஆவியானவரே கர்த்தராக இருக்கிறார்; அவர் நம்மை வழிநடத்துவார்; தேற்றுவார்; நம் வாழ்வில் தேவ திட்டத்தின்படி நடத்துவார்.

அன்பான பிள்ளையே, இன்றைக்கு நாம் ஒரு தீர்மானம் செய்வோம். தாவீதும் இயேசுவும் தினமும் ஜெபித்ததுபோல, காலையிலோ, இரவிலோ, வாய்க்கும்போதெல்லாம் நேரத்தை ஒதுக்கி ஜெபிப்போம். ஜெபம் ஒரு பாரமல்ல, ஒரு தேவ பிள்ளைக்கு பெரிதான சிலாக்கியம் அது. நாம் அவருடைய பிரசன்னத்தில் நேரம் செலவழித்தால், அவர் நம்மை பரிசுத்த ஆவியால் நிறைத்து, நேர்த்தியாக வழிநடத்துவார்; நம்மை மகிமையாக பயன்படுத்துவார். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமாகவும் ஜெபத்தின் மூலமாகவுமே இந்த உலகில் தேவனுடைய ஊழியங்கள் தொடரும். அவ்வண்ணமாகவே, நீங்கள் அவரிடம் அர்ப்பணிக்கும்போது தேவன் உங்களை வல்லமையாக பயன்படுத்துவார்.

ஜெபம்:
பரம தகப்பனே, உம்முடைய ஜீவனுள்ள வார்த்தைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, தினமும் உம்மை தேட வாஞ்சையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். எல்லா சாக்குபோக்குகளையும் சோம்பேறித்தனத்தையும் என் வாழ்க்கையை விட்டு அகற்றும். காலையிலும் பகலிலும் இரவிலும் ஜெபிக்க எனக்குக் கற்றுத்தாரும். ஆண்டவரே, என்னை உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பும். என் பிள்ளைகள் மேலும் சந்ததியினர் மேலும் உம்முடைய பரிசுத்த ஆவியை ஊற்றும். என் குடும்பத்தில் உம் ஆசீர்வாதங்கள் நதிகள்போல பிரவாகித்து ஓடுவதாக. உம்முடைய ராஜ்யத்தின் மகிமைக்கு பாத்திரமாய் என்னை பயன்படுத்துவீராக. உம்முடைய ஆவியினால் நேர்த்தியாக என்னை நடத்தவேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.