"என் கொம்பை காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்தியிருக்கிறீர்", அன்பானவர்களே, தேவன் உங்களை உயர்த்தவிரும்புகிறார். அவர், சாம்பலில் இருந்தவர்களை மகா உயரங்களுக்கு உயர்த்துகிறார். துக்கமாயிருக்கிறவர்களை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணி, துக்கத்தை சந்தோஷமாக மாற்றுகிறார். "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்" (ஏசாயா 60:22) என்று வேதம் கூறுகிறது. இன்றைக்கு, "என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்" (சங்கீதம் 92:10)  என்ற வாக்குத்தத்தத்தை ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார். காண்டாமிருகம், சிங்கங்களை, புலிகளை, கழுதைப் புலிகளை தன்னுடைய கொம்பினால் விரட்டும்; சீறும் விலங்குகளை தன் கொம்பினால் முட்டி தூக்கும். அவ்வண்ணமாக, தேவன், உங்கள் சத்துருக்களுக்கு மேலாக எழும்பும்படி பெலத்தையும், கொம்பையும் கொடுக்கிறார்; நீங்கள் ஜெயம்பெறுவீர்கள்.
வேதம், "அவர் நம் தலைகளை உயர்த்துகிறவர்" என்று கூறுகிறது. வெட்கத்தினால், இழப்பினால், துக்கத்தினால், தனிமையினால் அல்லது பாவத்தினால் நீங்கள் தலை குனிந்திருக்கிறீர்களா? இன்றைக்கு தேவன், உங்கள் சத்துருக்கள் முன்பு உங்கள் தலையை எண்ணெயினால் அபிஷேகம்பண்ணி, உங்களுக்கு பந்தியை ஆயத்தம் செய்கிறார். அதுதான் தேவனுடைய பரிசுத்த ஆவியின் வல்லமை. "கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு". "ஆவியானவர், சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்". வேதம், "சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" என்றும் கூறுகிறது. காண்டாமிருகம், தன் கொம்பினால் விரோதிகளை அழிப்பதுபோல, தேவன் உங்கள் தலையை உயர்த்தி, எல்லா கட்டுகளையும், தாக்குதல்களையும் அழிக்கும்படியாக பரிசுத்த ஆவியின் வல்லமையால் உங்கள் கொம்பை அபிஷேகம்பண்ணுவார். ஆம், பரிசுத்த ஆவியானவர் உங்களை உயர்த்துவார்.

அன்பானவர்களே, அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். சகோதரி சாவித்திரி, தன் மகன் வருணை குறித்து சாட்சி எழுதியுள்ளார்கள். அவன் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, இளம் பங்காளர் திட்டத்தில் அவனை இணைத்தார்கள். அவன் மாநில அளவில் டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளங்கினான். 11ம் வகுப்பு படித்தபோது அவனுக்குக் காய்ச்சல் வந்தது. இயேசு அழைக்கிறார் நடத்திய மாணவர் பிரார்த்தனைக்கு அவர்கள் அவனை அழைத்து வந்தார்கள். என்னிடம் தனி பிரார்த்தனை செய்தார்கள். நான் ஜெபித்தவண்ணம், இயேசு அவனை குணப்படுத்தி, 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைக் கொடுத்தார். கல்லூரி படிக்கும்போது தீய நண்பர்களுடன் சேர்ந்து அநேக பாடங்களில் தோல்வியுற்றான். மொத்தம் 21 தாள்களில் தோல்வியடைந்திருந்தான். மீண்டும், அவர்கள் ஜெப கோபுரத்திற்கு அவனை அழைத்து வந்தார்கள். நான் ஜெபித்து, "உங்கள் மகன் பட்டப்படிப்பை முடிப்பான். மற்றவர்களுக்கு உதவியும் செய்வான்," என்று தீர்க்கதரிசனமாகக் கூறினேன். இரண்டே செமஸ்டர்களில் அவன் 21 தாள்களிலும் தேர்ச்சியடைந்தான். அவர்கள், "கற்பனை செய்து பார்க்கமுடியாத அற்புதம்" என்று கூறினார்கள். அவன் காருண்யா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பில் சேர்ந்தான். மூன்றாவது செமஸ்டரிலேயே ஹைதராபாத்தில் வேலை கிடைத்தது. தீர்க்கதரிசனம் நிறைவேறியது. இன்றைக்கு நன்றாக இருக்கிறான்; தேவனுடன் நடக்கிறான்.
அவ்வண்ணமாகவே, தேவன், பரிசுத்த ஆவியை உங்கள்மேல் ஊற்றி, உங்கள் தலையையும் உயர்த்துவார். இன்றைக்கு, உங்கள் தொழிலிலும் கல்வியிலும் உயருங்கள் என்று இயேசுவின் நாமத்தில் உரைக்கிறேன். இயேசுவின் நாமத்தில் நுழைவுத் தேர்வில் உயர்த்தப்பட்டு, வேலையையோ, மேற்படிப்பில் இடத்தையோ பெறுங்கள். உங்கள் குடும்பத்தில், பரிசுத்தத்தில், பொருளாதாரத்தில், ஆரோக்கியத்தில் உயர்த்தப்படுங்கள்; எல்லாருக்குள்ளும் உங்கள் பெயர் கனப்படுத்தப்படட்டும்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என் தலையை உயர்த்துகிறவராய், என் கொம்புக்கு பின்னாக நீர் பெலனாய் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் தாழ்விலிருந்தபோது, சாம்பலிலிருந்து என்னை தூக்கியெடுத்து சந்தோஷத்தால் முடிசூட்டினீர். இன்றைக்கு, காண்டாமிருகத்தின் கொம்பைப்போல என் கொம்பை உயர்த்துவதாக நீர் கொடுக்கும் வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்கிறேன். ஆண்டவரே, பரிசுத்த ஆவியின் தைலத்தினால் என்னை அபிஷேகியும். என் வாழ்க்கையிலிருந்து எல்லா வெட்கமும் துக்கமும் போராட்டமும் இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் அகன்று போவதாக. எனக்கு ஒரு பந்தியை ஆயத்தம்பண்ணி, ஜெயத்தால் என் தலையை உயரப்பண்ணும். எல்லா சத்துருக்களுக்கு மேலாகவும் நான் உயர்ந்து உமது சத்தியத்தில், விடுதலையில், வல்லமையில் நடக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.