அன்பானவர்களே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் அருமையான நாமத்தில் வாழ்த்துதல்கள். "தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்" (சங்கீதம் 86:10) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். எவ்வளவு மகிமையான சத்தியம்! நம் தேவன், சாதாரணமானவரல்ல. மனுஷரால் கிரகிக்கக்கூடாத மகத்துவமான கிரியைகளைச் செய்யும் கர்த்தர் அவர். இதே சத்தியத்தை வேதத்தில் வேறு இடங்களிலும், "சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்" (உபாகமம் 10:17; வெளிப்படுத்தல் 15:3) வாசிக்கிறோம்.நம் தேவன், மகத்துவத்திலும் வல்லமையிலும் ஒப்பிட முடியாதவர். யோபு, "ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" என்று கூறுகிறான் (யோபு 5:9; 9:10).அன்பு தேவ பிள்ளையே, முந்தைய காலத்தில் பெரிய காரியங்களைச் செய்த நம் கர்த்தர், இன்றைக்கு உங்கள் வாழ்க்கையிலும் அவற்றைச் செய்ய வல்லவராயிருக்கிறார். அவரது வல்லமை குன்றிப்போகவில்லை. அவரது அன்பு மாறிடவில்லை. தமக்கு ஏற்றவேளையில் அவர் மகத்துவமான காரியங்களைச் செய்வார்.

வேதம், "அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து... போற்றுவார்களாக" (சங்கீதம் 107:8,21,31) என்று நமக்கு நினைவுறுத்துகிறது. ஆசீர்வாதங்கள் பெருகி வருகிற காலங்களில் மட்டுமல்ல; உபத்திரவங்களின் மத்தியிலும், கண்ணீரின் காலத்திலும் நாம் தேவனை ஸ்தோத்திரிக்கவேண்டும். நீங்கள் பாரப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, உடைக்கப்படும் வேளைகளிலும், நீங்கள் காணாதவகையில் உங்கள் சூழ்நிலையில் அதிசங்களைச் செய்து கொண்டிருக்கிறபடியால் அவரை ஸ்தோத்திரியுங்கள். அவர் எத்தனை முறை உங்களைப் பாதுகாத்தார்; குணமாக்கினார்; வேண்டியவற்றை அருளிச்செய்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். நன்றியுணர்வு உங்கள் உள்ளத்தை நிரப்பட்டும். வேதம், "ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது" (சங்கீதம் 136:4) என்று கூறுகிறது. இஸ்ரவேலர் பார்வோனின் சேனைக்கும் செங்கடலுக்கும் இடையே சிக்கிக்கொண்டபோது, கர்த்தர் பலத்த அற்புதத்தைச் செய்தார். அவர் கடலை பிளந்து, தம் மக்களை விரோதிகளிடமிருந்து ஓங்கிய புயத்தினால் தப்புவித்தார் (யாத்திராகமம் 14:17-31). அதே தேவன், இன்றைக்கும் ஜீவனோடிருக்கிறார்; என்றென்றுமாய் ஆளுகை செய்கிறார். அவரால் உங்களை எல்லா தீங்கிலிருந்தும், கட்டிலிருந்தும், இயலாதவற்றிலிருந்தும் விடுவிக்க முடியும்.

அன்பானவர்களே, இந்த மகத்தான தேவனை இன்று விசுவாசியுங்கள். செங்கடலைப் பிளந்த கர்த்தரால், மூடப்பட்டிருக்கும் கதவுகளை உங்களுக்காகத் திறக்கமுடியும்.உங்கள் துக்கத்தை சந்தோஷமாக, உங்கள் கண்ணீரை சாட்சிகளாக, உங்கள் பெலவீனத்தை பெலனாக மாற்ற அவரால் கூடும்.எதுவும் அவருக்குக் கடினமானதல்ல. தம் பிள்ளைகளுக்காக அவர் மகத்துவமான, ஆராய்ந்துமுடியாத காரியங்களைச் செய்கிறார். விசுவாசமும் நன்றியும் மாத்திரமே உங்களுக்குத் தேவை. அவர் கடந்த காலங்களில் பாராட்டிய இரக்கங்களுக்காக, உங்கள் முழு இருதயத்தோடும் அவரை ஸ்தோத்திரிக்கும்போது, புதிய அதிசயங்கள் உங்களுக்கு நடக்கும்.அவரது வாக்குத்தத்தங்கள்மேல் திடமாக நின்று, "என் தேவன் மகத்துவமானவர்; அவர் என் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்வார்," என்று தைரியமாக அறிக்கை பண்ணுங்கள்.

ஜெபம்:
அன்பு பரம தகப்பனே, மகத்துவமான, பெரிய தேவனாயிருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்க்கையில் நீர் செய்துள்ள ஆச்சரியமான காரியங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, நான் வேதனையையும் கண்ணீரையும் காணும்போதும் உம்மை துதிக்க எனக்கு உதவி பண்ணும். என் இருதயம் எப்போதும் நன்றியாலும் விசுவாசத்தாலும் நிறைந்திருப்பதாக. ஆண்டவரே, எனக்கும் என் குடும்பத்துக்கும் பெரிதானதும் பலத்ததுமான காரியங்களைச் செய்வீராக.மூடப்பட்ட எல்லா வாசல்களையும் திறந்து, வழியில்லாததாக காணப்படும் இடங்களில் வழியை உண்டாக்குவீராக.எல்லா சத்துருக்களுக்கும் மறைவான கண்ணிக்கும் என்னை விடுவிப்பீராக. என் வாழ்க்கையில் எல்லா பகுதிகளிலும் உம்முடைய ஆச்சரியங்கள் விளங்குவதாக.உம்முடைய சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும், பெலத்தாலும் அனுதினமும் என்னை நிரப்பவேண்டுமென்று இயேசுவின் அருமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.