அருமையானவர்களே, தேவன் ஆச்சரியமான வாக்குத்தத்தத்தை உங்களுக்கென்று வைத்திருக்கிறார். அவர், "நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்" (அப்போஸ்தலர் 2:17) என்று கூறுகிறார். ஆண்டவர் தமது ஆவியை உங்கள்மேல் ஊற்றுவதற்கு விரும்புகிறார். சத்துரு, அதைரியத்தையும் ஒடுக்குதலையும் ஊற்றுவதற்கு முயற்சிக்கும்போது, தேவன், "என் ஆவி உங்களை விடுதலையாக்கும்," என்று கூறுகிறார். அவரது ஆவியானவர் வரும்போது, நீங்கள் தீர்க்கதரிசனம் உரைப்பீர்கள். பயத்தோடு, தோல்வியோடு, பெலவீனத்தோடு பேசுவதற்குப் பதிலாக தேவன் உரைக்கிறார் என்று பேசுவீர்கள். பிதாவிடம் நீங்கள் பரிசுத்த ஆவியைக் கேட்டால் அவர் நிச்சயமாக தருவார் என்று இயேசு வாக்குக்கொடுக்கிறார் (லூக்கா 11:13). நீங்கள் அநாதை அல்ல. "பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன் ...ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு..." (லூக்கா 12:49,50) என்று அவர் கூறுகிறார். அந்த ஸ்நானம் அவர் தமது ஜீவனை கொடுப்பதைக் குறிக்கிறது. அவர் தம் ஜீவனை கொடுத்தார்; ஆவியின் வல்லமையால் மறுபடியும் எழுந்தார். இப்போது அதே ஆவியை, இலவசமாக உங்களுக்குள் ஊற்றுகிறார். ஏனெனில் சிலுவையில் அவர் அதற்கான கிரயத்தை ஏற்கனவே செலுத்திவிட்டார். தேவனுடைய ராஜ்யம், கல்யாண விருந்தைபோல் இருக்கிறது (மத்தேயு 24:1-14). அழைக்கப்பட்டோர் அநேகர் வர மறுத்துவிட்ட நிலையில் ராஜா தெருக்களில் உள்ளவர்களை அழைத்தார். அவ்வண்ணமாகவே, நீங்கள் தகுதியற்றவர்களாக, நிராகரிக்கப்பட்டவர்களாக உங்களை உணர்ந்தாலும் தேவன் உங்களை அழைக்கிறார். அழைக்கப்பட்டோர் அநேகர்; ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர். அன்பானவர்களே, நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள். அதனால்தான் இப்போது இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் வரும்போது, பரிசுத்தமாக வாழச்செய்வார். இயேசு, "பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது" (வெளிப்படுத்தல் 22:11,12) என்று கூறுகிறார். ஏன் பரிசுத்தம் வேண்டும்? இந்தப் பலனை பெறுவதற்காகவே வேண்டும். வேதம், "பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே" (எபிரெயர் 12:14) என்று கூறுகிறது. பரிசுத்தம், சமாதானத்திலிருந்து மற்றவர்களுக்கு பாய்ந்து செல்கிறது. மன்னிக்காமை, நம் ஜெபங்களை தடுக்கிறது (ஏசாயா 1:15; 1 யோவான் 3:15). ஆனாலும், இயேசுவின் இரத்தம் நம்மை சுத்திகரித்து, அன்புகூரவும் மன்னிக்கவும் உதவுகிறது (எபிரெயர் 12:24).
ஒருவர் பரிசுத்த ஆவியை பெற வாஞ்சையோடு இருந்தார். ஆனால், அவரை பெற இயலவில்லை. அவரது போதகர் யாரிடமாவது சண்டையிட்டிருந்தால் ஒப்புரவாகும்படி கூறினார். தன் சகோதரியிடம் கோபப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அவர்களிடம் மன்னிப்பை கோரினார். திரும்ப ஜெபித்தபோது, உடனடியாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார். ஒப்புரவாகுதலும் மன்னித்தலும், நிரப்பப்படுவதற்கேதுவாக நம் இருதயங்களை ஆயத்தப்படுத்துகிறது. பரிசுத்த ஆவியானவர் மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி நம்மை பெலப்படுத்துகிறார். "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்" (ஏசாயா 60:22). படிப்பறிவில்லாத ஓர் இளம்பெண் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் பரிசுத்த ஆவியை பெற்றாள். பிறகு அவள் சபையில் துல்லியமாக தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கினாள். மக்கள் மனந்திரும்பினர். பரிசுத்த ஆவியானவருக்கு அவள் கீழ்ப்படிந்ததினால் சபை, ஆயிரங்களாய் வளர்ந்தது. அந்தப் பெண்ணை தேவனால் பயன்படுத்த முடியுமானால், உங்களையும் அவரால் பயன்படுத்த முடியும். தேவ ஆவியானவர், ஞானத்தையும் தயவையும் வளர்ச்சியையும் அளிக்கிறார். வேதம், "இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்" (லூக்கா 2:52) என்று கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பும்போது, நீங்களும் ஞானத்திலும் கிருபையிலும் விருத்தியடைவீர்கள். அலுவலகத்திலும் சமுதாயத்திலும் உள்ள பிரச்னைகளுக்கு தீர்க்கதரிசன தீர்வுகளை அவர் கொடுப்பார். உங்கள் மூலமாக பரிசுத்த ஆவியானவர் பேசுவதால் தலைவர்கள் உங்களை நோக்குவார்கள்.
இதைப் பெற்றுக்கொள்வதற்கு, நாம் சிறுபிள்ளைகளைப்போல நம்மை தாழ்த்த வேண்டும். இயேசு, "நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 18:3) என்று கூறியிருக்கிறார். தேவன், தம் இரகசியங்களை தாழ்மையுள்ளவர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (லூக்கா 10:21). குழந்தையைபோல அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்; அவர் உங்களை நிரப்புவார். எலிசாவைபோல தைரியமாக இரட்டிப்பான பங்கைக் கேளுங்கள் (2 இராஜாக்கள் 2:9). இந்தத் தலைமுறையின் குமாரரும் குமாரத்திகளும் தம்முடைய தீர்க்கதரிசன ஆவியினால் நிரப்பப்பட வேண்டும் என்று தேவன் வாஞ்சிக்கிறார். அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவர் இப்போது உங்களுக்குச் சமீபமாயிருக்கிறார். உங்களை நிரப்புவதற்கு, வழிநடத்துவதற்கு, மறுரூபப்படுத்துவதற்கு அவர் ஆயத்தமாயிருக்கிறார். உங்கள் இருதயத்தை திறந்து, "ஆண்டவர் இயேசுவே, எனக்காக மரித்ததற்காக, உயிரோடே எழுந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போது என்னை பரிசுத்த ஆவியினால் நிரப்பும்படி உம்மை கேட்கிறேன். என்னை பரிசுத்தமாக்கும்; உமது ஆலயமாக்கும்; மற்றவர்களை ஆசீர்வதிக்க உமது பிள்ளையாக பயன்படுத்தும்," என்று கேளுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பும்படி வேண்டுங்கள்; நீங்கள் மாற்றம் பெறுவீர்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, யாவர்மேலும் உம்முடைய ஆவியை ஊற்றுவதாக நீர் வாக்குப்பண்ணியிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். விலையேறப்பெற்ற ஈவாகிய பரிசுத்த ஆவியை நான் பெறுவதற்காக, எனக்காக சிலுவையில் மரித்து மறுபடியும் உயிரோடு எழுந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்று வந்து, என்னை பரிசுத்த ஆவியினால் நிரப்பவேண்டுமென்று தாழ்மையுடன் கேட்கிறேன். என் இருதயத்தை உம்முடைய இரத்தத்தினால் கழுவி, மன்னிக்கப்படாத சுவடுகளை அகற்றி, உம்மைப்போல் என்னையும் பரிசுத்தமாக்குவீராக. ஆண்டவரே, என்னை உம்முடைய ஆலயமாக்கும்; சத்தியத்திற்குள் நடத்தும்; உம்முடைய அன்பிலும் நீதியிலும் ஜீவிக்கும்படி என்னை பெலப்படுத்தும். என்னை உம்முடைய பிள்ளையாக, மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்கு, உம்முடைய வார்த்தைகளை தைரியமாக பேசுவதற்கு, இந்த உலகத்திற்கு உமது வெளிச்சத்தைக் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.