அன்பானவர்களே, "தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்" (மத்தேயு 10:41) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாயிருக்கிறது. தேவனுடைய ஊழியர்களை நாம் கனம்பண்ணி, அவர்கள் மூலமாக வருகிற தேவ வார்த்தையை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, தமது தீர்க்கதரிசிகளுக்கு உரிய அதே பலனை கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார் என்பதை நமக்கு நினைவுப்படுத்துகிறார். தேவனுடைய அருட்கொடை, பாதுகாப்பு, ஆசீர்வாதம் ஆகியவையே தீர்க்கதரிசிக்குரிய பலனாகும்.வேதாகமத்தில் சாறிபாத் என்ற ஊரிலிருந்த ஏழை விதவை எலியாவை தன் வீட்டுக்கு அழைத்ததை பார்க்கிறோம். அவளிடம் கொஞ்சம் மாவும் எண்ணெயும் மட்டும் இருந்தபோதிலும், அவள் எலியா மூலமாய் உரைக்கப்பட்ட தேவ வார்த்தையை நம்பி, அவனுக்கு முதலாவது உணவு கொடுத்தாள். தேவன் அவளுடைய விசுவாசத்தை கனம்பண்ணினார். மாவு இருந்த பானையும் எண்ணெய் இருந்த கலசமும் ஒருபோதும் காலியாகவில்லை. தீர்க்கதரிசிக்குரிய ஜீவனுக்குரிய, வாழ்வதற்குரிய பலனை பெற்று அவளும் அவள் மகனும் பஞ்சகாலம் முழுவதும் வாழ்ந்தார்கள்.

இன்னொரு சம்பவத்தில் யோசபாத் ராஜா, தன் ஜனங்களிடம், "உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள்" (2 நாளாகமம் 20:20) என்று கூறினான். தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததினால் யூதா ஜனங்கள் தங்கள் சத்துருக்களிடமிருந்து விடுவிக்கப்பட்டனர். தேவனுடைய தீர்க்கதரிசிகள் மூலமாக உரைக்கப்பட்ட வார்த்தையை நாம் ஏற்றுக்கொண்டு, அவற்றின்படி நடந்தால், ஜெயமும் வெற்றியும் கிடைக்கும் என்பதை இது காட்டுகிறது. வேதம், "இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது" (வெளிப்படுத்தல் 19:10) என்று கூறுகிறது. தீர்க்கதரிசன வார்த்தை ஒவ்வொன்றும் இயேசுவை வெளிப்படுத்தி, அவரது வல்லமை நம் வாழ்வில் செயல்படுவதற்கான கதவை திறக்கிறது. தீர்க்கதரிசனம் வரும்போது,சாத்தானின் யோசனைகள் தோற்கடிக்கப்படுகின்றன; தடைகள் அகற்றப்படுகின்றன; ஆசீர்வாதங்கள் அருளப்படுகின்றன (வெளிப்படுத்தல் 12:10,11; லூக்கா 10:18). வார்த்தை நிறைவேற நேரம் எடுத்தாலும், தரிசனம் தாமதிக்காது; அது நடந்தே தீரும் என்று வேதம் கூறுகிறது (ஆபகூக் 2:3).

அன்பான தேவ பிள்ளையே, ஆண்டவர், தீர்க்கதரிசிக்குரிய பலனை நீங்கள் பெறுவதோடு தீர்க்கதரிசன கிருபைக்குள்ளாகவும் கடந்து செல்லவேண்டும் என்று விரும்புகிறார். தேவன், தம் பிள்ளைகளுக்கு அந்நிய பாஷையின் வரத்தை, வியாக்கியானம் பண்ணுகிற வரத்தைக் கொடுக்கிறார்; அது தீர்க்கதரிசனத்துக்குள்ளாக வழிநடத்துகிறது (1 கொரிந்தியர் 14:22). பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய வார்த்தையை பேசவும், அவரது சித்தத்தை உங்கள் வாழ்விலும் மற்றவர்கள் வாழ்விலும் உரைக்கவும் உதவி செய்கிறார். தீர்க்கதரிசனம் மூலம், இப்போது இல்லாத அருட்கொடை, சுகம், உறவு, திருப்புமுனை ஆகியவை தேவ வார்த்தையின் வல்லமை மூலம் உண்டாகும்படி உரைக்கப்படுகிறது. இன்றைக்கு இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். தேவ ஊழியர்களை கனம்பண்ணி, அவர்கள் ஊழியத்தை தாங்கி, அவர்கள் வார்த்தையை வரவேற்று, பாதுகாப்பு, அருட்கொடை, செழிப்பு, சமாதானம் ஆகிய தீர்க்கதரிசிக்குரிய பலனை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, தீர்க்கதரிசிக்குரிய பலன் என்னும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் ஊழியர்களை கனம்பண்ணவும், உம் வார்த்தையை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளவும் எனக்கு உதவி செய்வீராக.வேண்டியவற்றை, பாதுகாப்பை, செழிப்பை என் வாழ்வில் தந்தருள்வீராக. பரிசுத்த ஆவியின் தீர்க்கதரிசன கிருபையால் என்னை அபிஷேகிக்கவேண்டும் என்று இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.