அன்பானவர்களே, எல்லா காரியங்களிலும் வெற்றி பெறுவதற்கான கிருபையை தேவன் உங்களுக்குத் தருவாராக. "நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று வசனம் கூறுகிறது (1 கொரிந்தியர் 15:57). அவர் மரணத்தை அழித்து, பாதாளத்தின் மீது ஜெயம்பெற்றார். பெரிய சத்துருவான மரணத்தை இயேசு அழித்து வெற்றி பெற்றார். அவரால் மரணத்தை வெல்ல முடியுமானால், உங்கள் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலையையும் ஜெயங்கொள்ள முடியாதா? ஆம், அவர் உங்களைத் தூக்கியெடுப்பார்; நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலை எப்படியிருந்தாலும் வெற்றியாக வாழும்படி வைப்பார். "தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்" (சங்கீதம் 108:13) என்று வேதம் கூறுகிறது. தேவன் இம்மானுவேலாக நம்மோடிருக்கும்போது, வெற்றி நம்மை தொடரும். நம்மோடு இருக்கும்படியாக இயேசு வந்தார்; அவருடைய பெயருக்கு, 'தேவன் நம்மோடிருக்கிறார்' என்று அர்த்தமாகும்.

தேவன் உங்களோடிருக்கும்போது, கோபங்கொண்டு சத்துருக்களை நசுக்கி அல்ல; உங்கள் ஆசீர்வதித்து உயர்த்தி வெற்றியை தருவார். சமீபத்தில் ஒருவர் என்னிடம், தேவன் தம் பிள்ளைகள் துன்பப்படுவதற்கு ஏன் அனுமதிக்கிறார்? பொல்லாத மக்கள் பொய் சொல்வதற்கு, புறம்பேசுவதற்கு, பில்லிசூனியம் செய்வதற்கு, பணம் கேட்பதற்கு, குடும்பங்களை பிரிப்பதற்கு ஏன் அனுமதிக்கிறார்? என்று கேட்டார். நான், "தேவன் மக்களை அழிக்கும் வேலையைச் செய்வதில்லை. இயேசு, நியாயந்தீர்ப்பதற்கு அல்ல; இரட்சிப்பதற்கே வந்தார். அவர் எல்லா ஆத்துமாக்களையும் தம் பிள்ளைகளாக காண்கிறார்; அனைவருக்காகவும் மரித்தார். ஆகவே, தீமை செய்கிறவர்களை தேவன் அழிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதிருங்கள். அவர் மறுரூபமாக்குகிற, ஆசீர்வதிக்கிற வேலையை செய்கிறார். சத்துருக்கள் எழும்பும்போது, தேவன் அவர்களுக்கு முன்பு ஒரு பந்தியை ஆயத்தம்பண்ணி உங்கள் தலையை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுகிறார். அவர் உங்கள் பிள்ளைகளை, உங்கள் கரங்களை, உங்கள் வேலையை, உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறார்; உங்கள் சத்துருக்கள் அதைக் கண்டு தங்கள் பற்களைக் கடிப்பார்கள். இறுதியில் அவர்கள் மனந்திரும்புவார்கள்; தங்களைத் தாங்களே யூதாஸைபோல அழித்துக்கொள்வார்கள். இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸை தேவன் தம் வல்லமையினால் அழித்திருக்கலாம். ஆனால் இயேசு, "சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய்?" என்று கேட்டார். அவர்தான் இயேசு. தம்மைச் சபிக்கிறவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார். தமக்கு தீங்கு செய்கிறவர்களுக்காக அவர் வேண்டிக்கொள்கிறார். தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும்படி அவர் அழுதார். ஆனால், மனந்திரும்பாதவர்கள் யூதாஸைபோல தங்கள் கையின் கிரியையினாலே மடிந்துபோவார்கள்.

ஆகவே, உங்களுக்கு எதிராக வருகிறவர்களைக் கண்டு கவலைப்படாதிருங்கள். மாறாக, யோபைப் போல அவர்களுக்காக, அவர்களுடைய இரட்சிப்புக்காக ஜெபம்பண்ணுங்கள். தேவன் உங்களுக்கு இரட்டிப்பான ஆசீர்வாதத்தை தருவார்; உங்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றை திரும்ப தருவார் என்று நம்புங்கள். இதுவே உண்மையான வெற்றியாகும். தேவன் இப்படியே கிரியை செய்கிறார். அவர் உங்களுடன் இருக்கிறார்; உங்களைப் பெருகப்பண்ணுகிறார்; உங்களுடன் உன்னதங்களில் நடக்கிறார். ஒரு சிலர் உங்களை எதிர்க்கலாம்; ஆனால், உங்களை நேசிப்பதற்கு லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். இது என்னுடைய வாழ்க்கை அனுபவம். உங்கள் இருதயம் இயேசுவில் களிகூருவதாக. உங்கள் எதிரிகள் மனந்திரும்புவார்கள்; உங்களுக்கு நண்பராவார்கள் அல்லது தங்கள் வழியிலேயே விழுந்துபோவார்கள். நீங்களோ மகா உயரங்களுக்கு உயர்த்தப்படுவீர்கள்; ஏற்றவேளையில் பரலோகத்திற்குள் பிரவேசிப்பதற்கான கிருபையை பெறுவீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடன் இம்மானுவேலாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் மரணத்தை அழித்து, வாழ்க்கையின் எல்லா உபத்திரவங்களிலிருந்தும் எனக்கு வெற்றியை கொடுத்திருக்கிறீர். துன்மார்க்கத்தின், பொய்களின், துரோகத்தின் மத்தியிலும் நீர் எனக்கு நன்மையுண்டாக கிரியை செய்கிறீர் என்று நம்புகிறேன். ஆண்டவரே, என்னுடைய எதிரிகளுக்கு தீங்கு வரவேண்டும் என்று நான் விரும்பவில்லை; மாறாக, நீர் செய்ததுபோலவே அவர்கள் ஆசீர்வாதம் பெறவேண்டுமென்று அவர்களுக்காக ஜெபிக்கிறேன். மன்னிக்கிறதற்கு, தைரியமாய் சகிப்பதற்கு, என்னுடைய யுத்தங்களை நீரே நடத்துகிறீர் என்று விசுவாசிப்பதற்கு உம்முடைய கிருபையினால் என்னை நிரப்பும். உம்முடைய தைலத்தினால் என் தலையை அபிஷேகித்து, வாழ்க்கையில் நான் இழந்த எல்லாவற்றையும் திரும்ப தந்தருளும். பரலோகத்திற்கு வரும் வரைக்கும் உம்முடைய வெளிச்சத்தில் நடப்பதற்கு உதவி செய்யும். என்மேல் நீர் ஆழமான அன்புவைத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.