அன்பானவர்களே, இன்றைக்கு தேவன் உங்கள் உள்ளத்தை, "நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; ...உங்கள் தேவன் ... அவர் வந்து உங்களை இரட்சிப்பார் " (ஏசாயா 35:4) என்ற தம் வசனத்தின் வாயிலாக ஜீவனுள்ள நம்பிக்கையால் நிரப்புகிறார். எவ்வளவு வல்லமையான வாக்குத்தத்தம்! பயம் நம் உள்ளத்துக்குள் வரும்போது, பாரமாகவும் வேதனையாகவும் உள்ளது. கெட்ட செய்திகளை, வியாதியின் அறிக்கையை, எதிர்காலம் நிச்சயமில்லை என்ற சூழ்நிலையை கேள்விப்படும்போது, நம் உள்ளம் அதிரத் தொடங்குகிறது. பயம், எதுவும் நடப்பதற்கு முன்னரே மோசமான நிலையை கற்பனை செய்துகொள்ள வைக்கிறது.

சிலவேளைகளில் நாம் முக்கியமான தேர்வுகள், மேற்படிப்பு அல்லது தொழில் குறித்த முடிவுகள், பொருளாதார நெருக்கடிகள், குடும்ப கவலைகள் இவற்றை எதிர்கொள்ள நேரிடும்போது நமக்குள் பயம் எழுகிறது. "நான் தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது?", "எனக்கு எதிர்காலம் இல்லாமற்போனால் என்ன செய்வது?", "எதுவும் நடக்காவிட்டால் என்ன செய்வது?" என்பது போன்ற கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறோம். அதுபோன்ற தருணங்களில், நம்பிக்கை தளர்ந்து பயம் வலிமையானதாக வளர ஆரம்பிக்கும். தேவன் நமக்கு உதவுவார் என்று விசுவாசிப்பதை நாம் நிறுத்தும்போது, பயம், நம் சிந்தனையையும் உணர்வுகளையும் மேற்கொள்ள தொடங்குகிறது. ஆனால், இன்று ஆண்டவர், தெளிவாக,  "பயப்படாதே," என்று நினைவுப்படுத்துகிறார். பயத்திற்கு நம் வாழ்க்கையைக் குறித்து முடிவு சொல்ல அதிகாரம் கிடையாது; தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கே உள்ளது. அவர், "உன்னை இரட்சிக்க உன் தேவன் வருவார்," என்று கூறுகிறார். அதற்கு தேவன் தூரமானவரல்ல என்பது அர்த்தம். உங்கள் சூழ்நிலைக்குள் விடுதலையை, சுகத்தை, திருப்பத்தை ஏற்படுத்த அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். எல்லாமே தாமதிப்பதாய் தோன்றும்போது, தேவன் தம் கரங்களில் இரட்சிப்பை ஏந்தியவராக வந்துகொண்டிருக்கிறார்.

அன்பானவர்களே, மற்றவர்களின் பாரத்தை நாம் சுமக்கும்போதும் நம் உள்ளங்களை பயம் ஆட்கொள்ள முயற்சிக்கிறது. ஒரு தகப்பனோ அல்லது தலைவரோ பலரைக் குறித்து கரிசனை கொண்டிருப்பதுபோல, நம் உள்ளம், குடும்பம், ஊழியம், வேலை, எதிர்காலம் இவற்றைக் குறித்த கவலையால் நிரப்பப்படும். ஆனால் தேவன், ஒருபோதும் நாம் தனியே பயத்தைச் சுமக்கவேண்டும் என்று எண்ணுவதில்லை. அவருடைய வார்த்தையைக் கொண்டு பயத்தை அகற்றுமாறு நம்மை அழைக்கிறார். நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது, தேவ வாக்குத்தத்தங்கள் நம் பயத்தைக் காட்டிலும் வலிமையானவையாக தோன்றுகின்றன. குழப்பத்திற்குள் சமாதானத்தையும், பெலவீனத்திற்குள் பெலனையும், பயத்திற்குள் நம்பிக்கையையும் அவரது வார்த்தைக் கொண்டு வருகிறது. ஆகவேதான் இன்றைக்கு இந்த வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்; உங்களை இரட்சிப்பதற்காக தேவன் வருவார். நாளைய நம்பிக்கை அல்ல; இன்றே நிச்சயமுண்டாகும். உங்கள் இருதயம் அவரது வார்த்தையில் இளைப்பாறுதல் காணட்டும். விசுவாசம் மறுபடியுமாக எழும்பட்டும். தேவன் உண்மையுள்ளவர்; அவர் நிச்சயமாகவே உங்களை மீட்பார்.

ஜெபம்:
அன்பு ஆண்டவரே, என்னை இரட்சிக்க நீர் வருவீர் என்ற விலையேறப்பெற்ற வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுள்ளத்தில் இருந்த எல்லா பயத்தையும் கலக்கத்தையும் பாரத்தையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். உம் சமாதானத்தால் என்னை நிறைத்து, என் விசுவாசத்தை பெலப்படுத்தும். என் கவலைகளைக் காட்டிலும் அதிகமாக உம் வார்த்தையை நம்புவதற்கு எனக்கு உதவும். ஆண்டவரே, உம் மகிமையின் சமுகத்துடன் என் வாழ்வின் எல்லா பகுதியினுள்ளும் வந்து என்னை விடுவித்தருளும். உம் மீட்பின் வல்லமை இன்று என் சூழ்நிலைக்குள் வெளிப்படட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.