அன்பானவர்களே, இன்று கர்த்தர் உங்களிடம், "என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்" (யாத்திராகமம் 19:5) என்று கூறுகிறார். இயேசுவும், "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்" (யோவான் 14:15) என்று கூறியிருக்கிறார். நாம் தேவனில் அன்புகூர்ந்தால், அவரது கட்டளைகளைக் காத்துக்கொள்வோம். இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவார். நாம் அவரில் அன்புகூர்ந்து, அவரது கட்டளைகளைக் கைக்கொண்டால், அவரது சொந்த சம்பத்தாவோம். தேவன்மேல் அன்பு வைக்க நாம் கவனமாயிருக்கவேண்டும். தேவன், நம்மை அவரது சொந்த ஜனமாக தெரிந்துகொண்டிருக்கிறார்; நாம் எவ்வளவு பரிசுத்தமாக இருக்கவேண்டும்! வேதம், "கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே" (1 கொரிந்தியர் 6:20) என்று கூறுகிறது. உங்களுக்காக ஆண்டவர் சிலுவையில் தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார். அவரது இரத்தத்தால் நீங்கள் வாங்கப்பட்டீர்கள். நாம் எப்படி அவருக்கு விரோதமாக பாவம் செய்ய முடியும்? எப்படி அவரது இரத்தத்தின்மேல் மிதிக்க முடியும்? நீங்கள் தேவனுக்கென்று தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாயிருக்கிறீர்கள்.
கர்த்தர், "சகல ஜாதிகளுக்குள்ளும் நீங்களே என் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்," என்று கூறுகிறார். தேவன் நம்மை தெரிந்துகொள்ளும்போது, அவர் நம் வாழ்க்கைக்கென எல்லா ஆசீர்வாதத்தையும் கவனமாக தெரிந்தெடுக்கிறார். என் அப்பா, Dr.டி.ஜி.எஸ். தினகரனிடம், காருண்யா பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கும்படி, தேவன் பேசியபோது, தேவன்தாமே இடத்தைத் தெரிந்தெடுத்தார். என் அப்பா இடத்தைப் பார்க்கும்படி அலைந்துகொண்டிருந்தபோது, ஆண்டவர், மலைகள் சூழ்ந்த ஓர் அழகிய இடத்தைக் கனவில் அவருக்குக் காண்பித்தார். அப்படிப்பட்ட இடத்தை என் அப்பாவால் கண்டுபிடிக்காமல் இருந்தபோது, ஒருநாள் தேவ மனிதர் ஒருவர் ஆண்டவர் காண்பித்த அதே இடத்துக்கு அவரை அழைத்துச்சென்றார். அந்த இடத்தில்தான் தற்போது கோயம்புத்தூரில் காருண்யா அமைந்துள்ளது.
அது மலைகளால் சூழப்பட்டுள்ளது. அழகிய சூழலில் அமைந்த விவசாய நிலமாக இருந்தது. உணவுக்கோ, தண்ணீருக்கோ தட்டுப்பாடு இல்லாத இடம். மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலம். இன்று மெய்யாகவே காருண்யா பல்கலைக்கழகம் பல தேசங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் படிப்பதால் அவற்றுக்கும், இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கும் ஆசீர்வாதமாக விளங்குகிறது. நம் தேவன் எவ்வளவு மகத்துவமானவர். அப்படியே, ஆண்டவர் உங்களையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் காத்துக்கொண்டிருக்கும் காரியங்கள் வராவிட்டால் கவலையும் கோபமும் கொள்ளாதிருங்கள். தேவன் தம் களஞ்சியத்தில் எல்லா ஆசீர்வாதங்களையும் வைத்திருக்கிறார். நீங்கள் தேவன்பேரில் அன்புகூர்ந்தால், அவரது கட்டளைகள்பேரில் அன்பு வைத்தால், உங்கள்மேல் அவர் வைக்கும் நன்மை எத்தனை பெரிதாயிருக்கும்!
ஜெபம்:
பரம தகப்பனே, என்னை உமக்குச் சொந்த சம்பத்தாக தெரிந்துகொண்டிருப்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நீர் என்னை கிரயத்துக்கு வாங்கியிருக்கிறீர். நான் உமக்கு மட்டுமே சொந்தமானவன்(ள்). உம்மை மிகவும் நேசிக்கவும், உம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் உதவி செய்யும். என் இருதயத்தை பரிசுத்தமாகக் காத்துக்கொண்டு, உம் சத்தத்தை உணரும்படி செய்யும். உம்முடைய வேளையின்மேல் நம்பிக்கை வைப்பதற்கு எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். உம் சித்தத்தின்படியே என் வாழ்வில் எல்லா ஆசீர்வாதத்தையும் கொடுத்தருளும். என்னை முற்றிலும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். உம்முடைய மகத்தான கிருபைக்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


