பிரியமானவர்களே, "அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக" (சங்கீதம் 20:2) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். வாழ்க்கையில் பலவேளைகளில், சம்பாத்தியம் தேவைகளுக்கே போதாத சூழலை சந்திக்கிறோம். வாடகை கொடுக்கலாம், கல்வி கட்டணங்கள் செலுத்தலாம், மாதாந்திர தவணைகளை கட்டலாம், கடனையும் செலுத்திவிட்டு இருக்கிற மீதிப்பணம் குடும்பத்துக்குப் போதாததாக இருக்கலாம். எவ்வளவோ முயற்சித்தும் போதுமானவை கிடைக்கவில்லையே என்று நீங்கள் எண்ணலாம். இதுபோன்ற சமயங்களில், தாம் தெய்வீக உதவியை அனுப்புவதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். அவருடைய  ஆதரவு மனுஷர்களிடமிருந்து வருவதல்ல; பரலோக தேவனின் சிங்காசனமான சீயோனிலிருந்து வரும்.

நாம் தேவன்மேல் நம்பிக்கை வைத்து, உண்மையாக வாழும்போது அவர் ஒருபோதும் நம்மை குறைவுபட விடமாட்டார். வேதம், "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலிப்பியர் 4:19) என்று கூறுகிறது. தம் பிள்ளைகளுக்கு ஏற்ற நேரத்தில் தேவைகளை சந்திக்க தேவன் போதுமானதற்கும் மேலானவராக இருக்கிறார் என்பதே இதன் பொருளாகும். தீர்க்க முடியாதவையாக தோன்றுகிறவற்றை கணப்பொழுதில் மாற்றிவிட தேவனால் முடியும். உங்களிடம் இருக்கும் கொஞ்சமானவற்றை, அப்பங்களையும் மீனையும் பெருகப்பண்ணினதுபோல, பெருகப்பண்ணி திரளாய் கொடுப்பதற்கு அவரால் கூடும். பயப்படவோ, அதைரியப்படவோ வேண்டாம். தேவன் உண்மையுள்ளவர்; அவர் உங்கள் தேவைகளையெல்லாம் நிச்சயமாய் அருளிச்செய்வார்.

ஆகவே, அன்பானவர்களே, இன்றைக்கு ஆண்டவரிடம் ஜெபிப்போம். கடனுடன், செலுத்தவேண்டிய தொகைகளுடன், தினசரி மளிகைப்பொருள்களுடன் நீங்கள் திணறிக்கொண்டிருந்தால் தேவன் ஓர் அற்புதத்தைச் செய்வார் என்று விசுவாசியுங்கள். அவர் பரத்திலிருந்து உங்களுக்கு ஒத்தாசை அனுப்பி ஆதரிப்பார். உங்கள் குடும்பத்துக்கு வேண்டியவற்றை அருளிச்செய்வார்; உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்; உங்கள் கைகளின் பிரயாசத்தை பெருகப்பண்ணுவார். முற்றிலுமாக அவரை நம்புங்கள். அப்போது, ஆசீர்வதிக்கும் அவரது கரத்தை, உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள். சீக்கிரமாகவே, ஏற்ற சமயத்தில் உங்கள் தேவைகளை சந்தித்து, தத்தளித்துக்கொண்டிருந்த உங்களை தேவன் தூக்கியெடுத்ததாக சாட்சி கூறுவீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என் தேவைகளோடு உம் முன்னே வருகிறேன். செலவுகளாலும் கடனாலும் நான் திணறிக்கொண்டிருக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஸ்தலத்திலிருந்து ஒத்தாசை அனுப்பும். சீயோனிலிருந்து ஆதரவு அளித்து என் தேவை எல்லாவற்றையும் சந்தியும். என் கையில் உள்ள கொஞ்சமானவற்றை பெருகப்பண்ணும். என் பிள்ளைகளின் கல்வி கட்டணங்களை, நான் செலுத்தவேண்டிய தொகையை, வாடகையை நேரத்துக்குக் கொடுக்க உதவும். கடன் பாரம் எல்லாவற்றையும் அகற்றி எனக்கு விடுதலை தாரும். என் குடும்பத்தை, என் பிள்ளைகளை, என் கையின் பிரயாசங்களை ஆசீர்வதித்தருளும். மகிமையிலே உம்முடைய ஐசுவரியங்களைக் கொண்டு என் தேவைகள் எல்லாவற்றையும் சந்திக்கவேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.