அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் அதிக மகிழ்ச்சியடைகிறேன். தேவனுடைய குடும்பத்தாராகிய நாம், நம்முடைய ஒரே தலைவராகிய அவருடைய சத்தத்தைக் கேட்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம். இன்றைக்கு அவர், "கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்" (சங்கீதம் 97:10) என்ற வசனத்தின் மூலம் நம்மோடு பேசுகிறார். வேறுவிதமாக சொல்வதானால், நாம் ஆண்டவரை அதிகமாய் நேசிக்கும்போது, தீமையை வெறுப்போம். நாம் தீமையைப் பின்பற்றுகிறதில்லை; அதுவே நம்முடைய ஆத்துமாவை காக்கிறதாயிருக்கிறது. இங்கு மாத்திரமே ஆண்டவர் நம்மை ஒன்றை வெறுக்கும்படி கூறுகிறார்; ஏனென்றால் அவர் தீமையை அவ்வளவு வெறுக்கிறார்; அது நம் வாழ்வில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்.
தீமை நமக்கு என்ன செய்யும் என்று அவர் அறிந்திருக்கிறார். ஆதியில் அவர் மனுஷனை தம்முடைய சாயலாக படைத்தபோது, அவனுடைய வாழ்க்கை மகிமையாக இருந்ததை பார்த்தார். மனுஷன், தேவனுக்கு மிக நெருக்கமாக நடந்தான்; அதிகாரமிக்கவனாக, பூமியை ஆளுகை செய்ய முடிந்தவனாக இருந்தான். தேவ ஆசீர்வாதங்கள் அவனை சூழ்ந்திருந்தன. பிறகு, தேவனையன்றி ஏதோ ஒன்றை அவன் ஏற்றுக்கொண்டபோது பாவம் அவனுக்குள் நுழைந்தது. அவன் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தேவன் நினைத்த கனியை பெற்றுக்கொள்ள விரும்பினான்; கீழ்ப்படியாமையை தெரிந்துகொண்டான். அந்த ஒரே செயல் சாபத்தை மனுஷன்மேல் கொண்டு வந்தது; அவனை தேவனிடமிருந்து பிரித்தது. மனுஷன் தேவ மகிமையிலிருந்து விழுந்துபோனதை தேவன் கண்டார்; ஆகவே, தீமை நம் வாழ்வில் இருப்பதை அவர் விரும்புவதில்லை.
ஆகவே, தேவன் மனுஷ உருவெடுத்தார்; தம் ஜீவனை கொடுத்தார்; இரத்தம் சிந்தினார்; பாவத்திலிருந்து நம்மை மீட்டார். அவர் பலியானதினால் நாம் அவருடன் இணைக்கப்பட்டோம்; எப்போதும் அவருடன் வாழ்கிறோம்; தேவனுடைய ஆசீர்வாதத்திற்குள் பிரவேசிக்கிறோம். நாம் முழு மனதுடன் தம்மை நேசிக்கவேண்டும் என்றும், இந்த ஆசீர்வாதத்தை பற்றிகொள்ளவேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இயேசு, உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக தகப்பன் வீட்டு வசதியை விட்டுவிட்ட இளைஞனை குறித்த உவமையை இதற்காகவே சொன்னார். தற்காலிகமானவையாக இருந்தாலும், பணம் செலவானதும் இந்த இன்பங்களை அழிந்துபோகும். அவனுடைய நண்பர்கள் விலகினர்; தகப்பன் இல்லாததினால் ஏற்பட்ட வெறுமையை அவன் அனுபவித்தான். தீமை, இதையே நம் வாழ்க்கைக்குள் கொண்டு வருகிறது. தேவன், "என்னை நேசி. தீமையை வெறுத்துவிடு. என்னுடைய வீட்டில் தங்கி, என்னுடைய ஐசுவரியத்தை அனுபவி," என்று சொல்லுகிறார். இதன் மூலம் அவர் உங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்கிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பரிசுத்தத்தின் அழகையும் தீமையின் ஆபத்தையும் எனக்கு காட்டுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மை அதிகமாய் நேசிக்கவும், நீர் வெறுக்கிறதை அதிகமாய் வெறுக்கவும் எனக்குக் கற்றுத் தாரும். பொல்லாங்கினின்று என் ஆத்துமாவை காத்து, எப்போதும் உம்முடைய சமுகத்தில் தங்கியிருக்க உதவி செய்யும். சிற்றின்பங்களினால் ஒருபோதும் பாதை மாறாதிருக்கவும், உம்முடைய நித்திய ஆசீர்வாதங்களை உறுதியாய் பற்றிக்கொள்ளவும் எனக்கு உதவும். நான் எப்போதும் உம்மோடு இருப்பதை தெரிந்துகொண்டிருப்பதால், பரிசுத்த ஆவியானவர், என்னை மறுபடியும் உம்மிடமாய் நடத்தட்டும்; உம்முடனான உறவை சீர்ப்படுத்தட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.