ஆண்டவர் இன்றைக்கு, "நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்" (யோவான் 15:15) என்ற வசனத்தின் மூலம் உங்களோடு பேசுகிறார். எவ்வளவு சிலாக்கியம்! தேவன் தம் ஊழியனாக இருப்பதற்காக மட்டும் உங்களை அழைக்கவில்லை, மாறாக தம் சிநேகிதனாக இருப்பதற்காக அழைக்கிறார். ஒரு சிநேகிதன் இருதயத்தை, இரகசியங்களை, இன்னொரு சிநேகிதனின் திட்டங்களை அறிந்திருப்பான். கர்த்தர் தம் இரகசியங்களை உங்களுக்கு வெளிப்படுத்துவதாக, தம் சித்தத்தில் நடப்பதற்கு பெலப்படுத்துவதாக வாக்குக்கொடுக்கிறார்;  (ஆமோஸ் 3:7). வேதம், "சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்" (நீதிமொழிகள் 17:17) என்று கூறுவதுபோல, கர்த்தர் உங்களை நேசிப்பார்; ஆசீர்வதிப்பார்; பெருகப்பண்ணுவார் (உபாகமம் 7:13). ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டான். அவன் தீர்க்கதரிசனமாக தேவனுடன் நடந்ததால், அவன் பெற்றுக்கொண்ட வாக்குத்தத்தங்கள் இன்றைக்கு வரைக்கும் இஸ்ரேல் தேசத்தை தாங்குகின்றன. அவ்வண்ணமே, நீங்கள் ஒரு சிநேகிதனைப்போல தேவனுடன் நடந்தீர்களானால், அவர் தம் வாக்குத்தத்தங்கள் உங்கள் மூலமாகவும், உங்களுக்குப் பிறகு உங்கள் சந்ததி மூலமாகவும் நிறைவேற்றப்படும்.

தேவன், உங்களைச் சிநேகிதர் என்று அழைப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு தீர்க்கதரிசன அபிஷேகத்தை தரவும் விரும்புகிறார். வேதம், "கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்" (அப்போஸ்தலர் 2:17) என்று கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர், தானியேலுக்கு இரகசியங்களை வெளிப்படுத்தியதுபோல, எகிப்தில் நடக்க இருந்த பஞ்சத்தைக் குறித்து யோசேப்புக்கு ஞானத்தை கொடுத்ததுபோல, எதிர்காலத்தைக் குறித்து உங்களுக்கு வெளிப்படுத்துவார் (தானியேல் 2:28; ஆதியாகமம் 2:28).அவ்வண்ணமாகவே, நீங்கள் ஜெபிக்கிறதற்கும், ஆயத்தமாவதற்கும், மற்றவர்களை வழிநடத்தவும்படியாய் வருகிறவற்றை கர்த்தர் உங்களுக்குக் காட்டுவார். பயப்படாமல் இருக்கவும், தம் ராஜ்யத்தை பூமியில் ஸ்தாபிக்கவும் தம் சிநேகிதர்களைப் பெலப்படுத்தவும் தம் இருதயத்தை வெளிப்படுத்துவார். தேவனுடைய சிநேகிதனாகும் அழைப்பை நீங்கள் ஏற்கும்போது, அவருடைய இரகசியங்களை கேட்பதோடு மாத்திரமல்ல, குடும்பங்களுக்காக, சமுதாயங்களுக்காக, தேசங்களுக்காக பரிந்துபேசும் அவரது அதிகாரத்தையும் சுமப்பீர்கள்.

நம்முடைய காலங்களிலும் தேவன் தொடர்ந்து தம் திட்டங்களை தம் சிநேகிதர்களுக்கு வெளிப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் தரிசனங்கள், சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள் வழியாக தேசங்களை, இயற்கை நிகழ்வுகளை, சபை ஊழியத்தைக் குறித்து காண்பிக்கிறார். இந்த வெளிப்பாடுகள் நம்மை உயர்த்துவதற்காக அல்ல; எழுப்புதலை வரவேற்கும்படியாக ஜெபித்து நம்மை ஆயத்தப்படுத்துவதற்காகவும் அவை தரப்படுகின்றன. ஆபிரகாமுக்கும், தானியேலுக்கும், யோசேப்புக்கும் தேவன் தம் திட்டங்களை அளித்ததுபோல, உங்களுக்கும் தர விரும்புகிறார். தம்மோடு ஜெபிக்கிறதற்கு, பரிந்துபேசுகிறதற்கு, பூமியில் ஸ்தாபிக்கப்படும் அவரது ராஜ்யத்தில் பங்காளராவதற்கு சிநேகிதராகும்படி அவர் உங்களை அழைக்கிறார். சிநேகிதராக அவருடன் நடக்கும்போது, அவருடைய அன்பை அறிந்துகொள்வீர்கள்; அவருடைய சத்தத்தைக் கேட்பீர்கள்; அநேகரை ஆசீர்வதிக்கும்படியாக அவரது வல்லமையை சுமப்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என் உம் சிநேகிதன் என்று அழைப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய ஆவியினால் உம் இரகசியங்களையும் திட்டங்களையும் எனக்கு வெளிப்படுத்தும். மக்களுக்காகவும் தேசங்களுக்காகவும் பரிந்துபேசும்படி தீர்க்கதரிசன கிருபையால் என்னை அபிஷேகியும். அன்போடும் கீழ்ப்படிதலோடும் உமக்கு நெருங்கி நடக்க எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.