கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். "கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்" (சங்கீதம் 40:1). எவ்வளவு வல்லமையான வசனம்! பொறுமையாக இருப்பது ஒருபோதும், அதிலும் நம் உள்ளங்கள் உபத்திரவத்தில் இருக்கும்போது எளிதானதல்ல. பிரச்னைகள் நம்மை அழுத்தும்போது, உடனடி பதில்களுக்காக நாம் ஏங்குகிறோம். நம்முடைய வேதனைக்கு, குடும்ப போராட்டங்களுக்கு, பொருளாதார தேவைகளுக்கு சீக்கிரமாக தீர்வுகள் வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனாலும், தேவன் தம் ஞானத்தின்படி, தீமைக்காக அல்ல; நம் விசுவாசத்தை பெலப்படுத்தும்படி நம்மை காத்திருக்க அனுமதிக்கிறார். விசுவாசம், ஆழமாக வேர்விட்டு வளரக்கூடிய மண் பொறுமையாகும். தேவனுக்காக காத்திருக்க நாம் முடிவுசெய்யும்போது, நமது காலத்தை அவரது பூரண சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவருடைய வேளை வரும்போது, நிச்சயமாகவே அவர் நம் கூப்பிடுதலைக் கேட்டு, நமக்காக கிரியை செய்வார்.
வேதாகமம், எலியாவை பின்தொடர்ந்த எலிசாவை உதாரணமாகக் காட்டுகிறது. எலியா, பின்னாக நிற்கும்படி கூறிய பிறகும், எலிசா, தீர்மானத்துடன் அவனை தொடர்ந்தான்; தேவனுடைய அபிஷேகம் என்னும் ஆசீர்வாதத்திற்காக பொறுமையுடன் காத்திருந்தான். தன்னுடைய விடாமுயற்சியினால் அவன் ஆவியின் இரட்டிப்பான பங்கை பெற்றுக்கொண்டான். அவ்வண்ணமாக, தேவன், விடாமல் தம்மை பற்றிக்கொள்கிறவர்களை கனம் பண்ணுகிறார். அன்பானவர்களே, உங்கள் ஜெபங்களுக்கு பதில் கிடைக்க தாமதிப்பதாக நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அந்த தாமதம், மறுப்பு அல்ல என்பதை மறவாதிருங்கள். தேவன், சிறந்த பதிலை ஆயத்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார். பொறுமை பெலவீனமல்ல; அது விசுவாசத்தினால் மூடப்பட்ட பெலனமாயிருக்கிறது. நீங்கள் சிந்திய கண்ணீர் எல்லாவற்றையும் கர்த்தர் காண்கிறார்; எல்லா கூப்பிடுதலுக்கும் அவர் செவி கொடுக்கிறார். நிச்சயமாகவே குழிக்குள் இருந்து உங்களை தூக்கியெடுத்து, கன்மலையின்மேல் நிறுத்தி, புதுப்பாட்டை உங்கள் வாயில் வைப்பார்.
அன்பானவர்களே, ஒருவேளை இன்றைக்கு சுகத்திற்காக, வேலையில் திருப்புமுனைக்காக, பிள்ளைகளின் வாழ்க்கையில் மாற்றத்திற்காக, குடும்ப சமாதானத்திற்காக காத்திருக்கலாம். "அவர் என்னிடமாய் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்," என்று வாக்குத்தத்தம் உங்களைத் தேற்றுவதாக. இப்போதும், ஆண்டவர் மனதுருக்கத்தோடு உங்களிடமாய் திரும்புவார். அவர் ஒன்றுமில்லாததிலிருந்து புதியதொன்றை உருவாக்குவார். அவர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்; பொருளாதாரத்தை பெருகப்பண்ணுவார்; உறவுகளைச் சீர்ப்படுத்துவார்; பாவத்தின்மேல் உங்களுக்கு வெற்றியை தந்தருளுவார். மனந்தளராதிருங்கள். உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். உங்கள் பொறுமைக்கு பலன் கிடைக்கும். அவரது பிரசன்னத்தில் தொடர்ந்து தங்கி, "கர்த்தர் எனக்கு அடைக்கலம், என் கோட்டை, என் தேவன்; அவரை நான் நம்பியிருக்கிறேன்," என்று அறிக்கை பண்ணுங்கள். விரைவிலேயே உங்கள் துக்கம் ஆனந்தக் களிப்பாக மாறும்; உங்கள் காத்திருத்தல் தேவ வல்லமைக்கு சாட்சியாக மாறும்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, இன்றைக்கு நீர் அளித்திருக்கும் வார்த்தை என்னும் ஈவுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உமக்காக பொறுமையோடு காத்திருக்க எனக்குக் கற்றுக்கொடுப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, என் கூப்பிடுதலை கேட்டு, இரக்கமாக பதில் அளித்திடுவீராக. என் கண்ணீரை துடைத்து, சமாதானத்தினால் என் உள்ளத்தை நிரப்பும். என்னுடைய பொருளாதாரத்தை ஆசீர்வதித்து, எனக்கு இருக்கும் கொஞ்சமானவற்றை பெருகப்பண்ணுவீராக. என் பிள்ளைகளை தொட்டு, அவர்கள் இருதயத்தை உம் பக்கமாக திருப்புவீராக. என் வேலையிடத்தில் எனக்கு பதவி உயர்வையும் புதிய வாய்ப்புகளையும் அருளிச்செய்வாராக. பாவத்தின் கட்டிலிருந்து என்னை விடுவித்தருளும்; எனக்கு வெற்றியை தந்தருளும். என் குடும்பத்தின் மீது உம்முடைய ஆவியை ஊற்றி, எங்களை அன்பினால் இணைக்கவேண்டுமென்று இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.