அன்பானவர்களே, வேதம், "கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்" (சங்கீதம் 89:15) என்று கூறுகிறது. யூத மக்கள் இந்த கெம்பீரசத்தத்தைக் குறித்து அறிவார்கள். யூத புத்தாண்டின்போது எக்காளங்கள் முழங்கும்; அது கெம்பீர சத்தத்தின் நாளாக அமையும். புத்தாண்டின்போது மட்டுமல்ல; அவர்கள் எந்தப் பண்டிகை கொண்டாடினாலும் முதலாவது எக்காளத்தை முழங்குவார்கள். ஆகவேதான் வேதம் அவர்களை பாக்கியவான்கள் என்று கூறுகிறது. யூத மக்கள், தேவனை பெருங்குரலில் துதிப்பார்கள். புத்தாண்டு தினத்தன்றும் எக்காளத்தை உரக்க முழங்குவார்கள். புத்தாண்டை அவர்கள் பத்து நாட்கள் கொண்டாடுவார்கள்; பத்தாவது நாளில் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, கர்த்தருக்கு முன்பாக மனந்திரும்புவார்கள். அப்படியானால் அந்த ஆண்டு முழுவதும் கர்த்தருடன் நடக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். அப்படியே நாமும் கர்த்தருக்கு முன்பாக நம் பாவங்களை அறிக்கையிட்டால், பரிசுத்த ஆவியானவருடன் நடக்க முடியும்.

கிறிஸ்து இயேசுவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் (கலாத்தியர் 5:24). அடுத்த வசனத்தில் வேதம், "நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்" என்று கூறுகிறது. அப்படியானால் மட்டுமே நாம் அவரது முகத்தின் வெளிச்சத்தில் நடக்க முடியும். 26ம் வசனம், "வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்" என்று கூறுகிறது. நாம் தேவனுடைய வார்த்தையை பின்பற்றினால், மெய்யாகவே அவரது சமுகத்தின் வெளிச்சத்தில் நடப்போம். உலகம் தரும் சந்தோஷம் மறைந்துபோகக்கூடியது; ஆனால் கர்த்தரின் சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும். சந்தோஷத்தின் சத்தத்தை அறிகிறவர்கள் பாக்கியவான்கள்.

கர்த்தர் இஸ்ரவேலருடன் இருந்தார். ராஜாவின் ஜயகம்பீரம் அவர்களுக்குள் இருந்ததாக வேதம் கூறுகிறது (எண்ணாகமம் 23:21). இன்றைக்கு நம்முடனும் ராஜா இருக்கவேண்டுமென்று நாம் உரத்தக் குரலில் கேட்கப்போகிறோம். நாம் தேவ பிள்ளைகளாயிருக்கும்போது, ஜெய கெம்பீர குரல் நம் கூடாரங்களில் கேட்கும் (சங்கீதம் 118:15). "கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்," என்று வேதம் கூறுகிறது. தேவன் தம்முடைய கெம்பீர சத்தத்தை நீங்கள் அறியும்படி செய்வாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய வசனத்தின் மூலமாக என்னோடு பேசுகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய அன்பின் சமுகத்திற்கு என்னை அழைக்கும் கெம்பீர சத்தத்திற்கு நான் விழிப்பாக இருக்க எனக்கு உதவி செய்யும். யூத மக்கள் எக்காளத்தின் கெம்பீரசத்தத்தைக் கேட்டு களிகூர்ந்ததுபோல, என் இருதயம் உமக்குள் மகிழும்படி எனக்குக் கற்றுத்தாரும். கர்த்தாவே, என் ராஜாவே, உம்மோடு நடக்க முடியாமல் என்னை தடுக்கின்ற எல்லா பாவத்தையும் சுத்திகரித்து, உம்மை துதிக்கும் சத்தத்தால் என் வாழ்வை நிரப்பும். என் வீடு ஜெய கீதங்களால் நிரம்பியிருக்கட்டும்; என் நடைகள் உம்முடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவதாக. நான் ஒருபோதும் இவ்வுலகின் நிலையில்லாத இன்பங்கள் பின்னே ஓடாதபடி, உம்முடைய முகப்பிரகாசத்திலிருந்து பாய்ந்துவரும் நித்திய சந்தோஷத்தில் நிலைத்திருக்க கிருபை செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.