அன்பானவர்களே, "கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்" (நீதிமொழிகள் 3:26) என்று வேதம் கூறுகிறது. "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை" (சங்கீதம் 16:8) என்றும், "தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்" (சங்கீதம் 46:5) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். நாம் பெயர்க்கப்படுவதையோ, அசைக்கப்படுவதையோ தேவன் விரும்புவதில்லை. மலைகள் விலகிப்போகலாம்; பர்வதங்கள் பெயர்ந்துபோகலாம். ஆனால்,  தேவன், "என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும்," என்று கூறுகிறார். ஆம், அன்பானவர்களே, தேவன் தமது கிருபையையும், அவர் உங்களோடு செய்த சமாதானத்தின் உடன்படிக்கையையும் காத்துக்கொள்வார். ஆகவே, நீங்கள் ஒருபோதும் பெயர்க்கப்படுவதில்லை. ஆண்டவர் உங்கள் பக்கத்தில் இருப்பதால் நீங்கள் ஒருபோதும் அசைக்கப்படமாட்டீர்கள்.

வேதம், "கர்த்தர் எனக்கு சகாயர். மனுஷன் எனக்கு என்ன செய்ய முடியும்?" என்று கூறுகிறது. தேவன் உங்கள் நடைகளை உறுதிப்படுத்துகிறார். ஆகவே, இன்றும் வேதம், "உன் கால் சிக்கிக்கொள்ளாது," என்று வாக்குக்கொடுக்கிறது. நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்டவர், "நான் ஒருபோதும் உன்னை விட்டு விலகமாட்டேன். உன்னை கைவிடமாட்டேன். என் தூதனை உனக்கு முன்னே அனுப்புவேன். அவர் உன்னை வழியில் பாதுகாப்பார்; நான் உனக்கு ஆயத்தம்பண்ணியிருக்கிற இடத்துக்கு உன்னை கொண்டு சேர்ப்பேன்," என்று கூறுகிறார். ஆம். ஆண்டவர், நீங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி உங்களுக்கென்று, உங்கள் வாழ்க்கைக்கென்று ஒரு வழியை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். அவர் உங்கள் பக்கத்தில் இருக்கிறார்; நீங்கள் ஒருபோதும் அவருடைய திட்டத்திலிருந்து விலகிப்போவதில்லை. தேவனை நேசிக்கிறவர்களுக்கு, அவருடைய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. தேவன் உங்களுக்கென்று ஆயத்தம் பண்ணியிருக்கிற பாதையில் நீங்கள் நடக்கும்போது, அவரை நேசிக்கும்போது, நம்பும்போது, உங்களை அவர் வழிநடத்தும்படி அவருக்குக் காத்திருக்கும்போது, அவருடைய நோக்கத்தை நிறைவேற்றும்போது, சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும். "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்" (சங்கீதம் 23:6) என்று கூறுகிறபடி, தேவன் உங்கள்பேரில் வைக்கும் கிருபை பெருகுகிறபடியினால், உங்கள் வாழ்நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உங்களைத் தொடரும். ஆகவே, உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. இந்த வாக்குத்தத்தத்தையே தேவன் உங்களுக்குத் தருகிறார்.

ஒரு வல்லமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். சாந்தி மார்க்கரெட் என்ற சகோதரி, நீண்டகாலம் கர்ப்பப்பையில் அதிக வலியினால் வேதனைப்பட்டார்கள். மருத்துவர்கள், அறுவைசிகிச்சை செய்யாமல் அதை குணப்படுத்த முடியாது என்று கூறி, முழு ஓய்வு எடுக்கும்படி ஆலோசனை சொன்னார்கள். ஆனால், அவர்களால் சிறிது தூரம் கூட நடக்கவோ, எந்த வேலையையும் செய்யவோ இயலவில்லை. தாங்க இயலாத அளவுக்கு வலி அதிகமானது. வீட்டில் எல்லா வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டியதிருந்தது. அதிகமான வேதனையின் மத்தியில் ஒருநாள், இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை தொடர்பு கொண்டார்கள். ஜெப வீரர் ஒருவர் அதிக ஊக்கமாய் ஜெபித்து, "இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் கொடுக்கப்பட்ட ஜெப எண்ணெயை வலி இருக்கும் இடத்தில் தடவி ஜெபியுங்கள்," என்று கூறியிருக்கிறார். அவர்கள் ஜெப எண்ணெயை தடவி அரை மணி நேரத்திற்குள்ளாக, தேவன் அவர்களுக்கு பூரண சுகத்தைக் கொடுத்தார்; அவர்களை எழுப்பினார். அவர்கள் குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் சேர்ந்ததுடன், தங்கள் பிள்ளையை இயேசு அழைக்கிறார் இளம் பங்காளர் திட்டத்தில் இணைத்தார்கள். தேவன் அவர்கள் குடும்ப வாழ்க்கையை மறுபடியும் கட்டியெழுப்பினார். ஆம், அன்பானவர்களே, ஆண்டவர் உங்கள் வலது பக்கத்தில் இருப்பார். நீங்கள் அசைக்கப்படுவதில்லை. அவரை நம்புங்கள்; மற்றவர்கள் ஆசீர்வாதம் பெறும்படி ஊழியத்தில் அவருடன் இணைந்து நில்லுங்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, எனக்கு அநுகூலமான துணையாகவும் வழிகாட்டுகிறவராகவும் என் அருகில் நீர் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் கால் ஒருபோதும் சிக்கிக்கொள்ளாது என்று நீர் வாக்குக்கொடுத்து, என் நடைகளை உறுதிப்படுத்துவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், உம் கிருபை என்னைவிட்டு விலகாமலும், உம்முடைய சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும். ஆண்டவரே, நீர் என் நடுவில் இருக்கிறீர். நான் அசைக்கப்படுவதில்லை. நீர் எனக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிற பாதையில் என்னை வழிநடத்தவும் பாதுகாக்கவும் உம்முடைய தூதனை அனுப்புவீராக. உம்முடைய கிருபையில் என்னை நிலைத்திருக்கப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.