Date : June 06, 2025
"நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்!" (சங்கீதம் 46:10)
சங்கீதத்தில் உள்ள இந்த வேத வசனம், தேவனிடம் பாதுகாப்பைத் தேடும் ஒரு தேசத்தின் சூழலில் எழுதப்பட்டது. ஆனால் இது தனிநபர்களுக்கும் மிகவும் பொருந்தும். எதிரிகளால் பயமுறுத்தப்படும் சூழலை சந்திக்கும் ஒரு தேசம் “அமர்ந்திருக்க வேண்டும், அமைதி காக்க வேண்டும்” என்று தேவன் ஏன் எதிர்பார்க்கிறார் என்று ஒருவேளை நாம் ஆச்சரியப்படக்கூடும். உண்மையில், அவர் தமது மக்கள் தங்கள் சத்துருக்களின் சதித் திட்டங்களுக்கு "எதிர்வினையாற்றுவதை நிறுத்துங்கள்" என்றும், அவருக்குள் "நம்பிக்கையோடு அமைதியாய் இருங்கள்" என்றும் உறுதியாகச் சொல்கிறார்.
ஆண்டவருடைய அணுகுமுறை எப்போதும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. அவரது முழுமையான திட்டத்தை நாம் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. எனவே, அவர் சொல்வதைச் செய்வது மட்டுமே நமக்கு நல்லது. எதுவாக இருந்தாலும், அவரது திட்டத்திற்கு நாம் கீழ்ப்படிவது அல்லது ஒப்புக்கொடுப்பதுதான் “அமர்ந்திருப்பது." காரணம் என்னவெனில், நாம் "ஒன்றும் செய்யாமல்" தேவன் கிரியை செய்ய அனுமதிக்கும்போது, யுத்தத்தில் வெற்றி கிடைக்கிறது.
பரிசுத்த வேதாகமம் என்பது கவனமாக ஆராயப்படும்போது நிறைய உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு பொக்கிஷ புதையல் என்பதை நாம் கண்டுகொள்ளலாம். ஏனென்றால் பரிசுத்த வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு பக்கமும் தேவனைப் பற்றிப் பேசுகிறது அல்லது தேவனிடமிருந்து நேரடியாக வந்த ஒரு வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. பக்தியோடுகூட இதை வாசிக்கும் ஒரு வாசகரை, குறிப்பாக அதன் சில பகுதிகள் பொதுவான உலகக் கண்ணோட்டத்திற்கு முரணாக காணப்படும்போது, பரிசுத்த வேதாகமம் அந்த நபரை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை.
வாழ்க்கையின் உண்மையைப் பற்றிய சத்தியத்தை வெளிப்படுத்தும் அப்படிப்பட்ட ஒரு பகுதியைத்தான் பின்வரும் வசனங்களில் காண்கிறோம்: “ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைப்பாராட்ட வேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைப்பாராட்ட வேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைப்பாராட்டவேண்டாம். மேன்மைப்பாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைப்பாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”(எரேமியா 9:23.24). ஐசுவரியவான்கள் தங்கள் ஆஸ்திகளைப் பற்றி மகிழ்ச்சி அடைவதும், ஞானிகள் தங்கள் அறிவைக் குறித்து மேன்மைப்பாராட்டுவதும், நல்ல உடல் பலம் மிகுந்தவர்கள் தங்கள் சரீர பெலத்தைக் காண்பிப்பதும், அல்லது வல்லமையை வெளிப்படுத்துவதும் வெளிப்படையானது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது தானே?
ஆனால் தேவன் ஒரு நல்ல காரணத்திற்காக நமது உலக கண்ணோட்டத்திலிருந்து இங்கே வேறுபடுகிறார்; அதாவது, அவர் இல்லாமல் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை காண, உணர நாம் ஒருபோதும் தவறவிடக்கூடாது என்று அவர் விரும்புகிறார். நாம் என்ன சாதித்தாலும் அல்லது நிறைவேற்றி முடித்தாலும், அவர் எல்லா வகையிலும் எவ்வளவு இறையாண்மை கொண்டவர் என்பதை நாம் ஒப்புக்கொள்வதில் அவர் நம் கவனத்தை ஈர்க்கிறார். தேவனின் மகத்துவத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், அமைதியாக இருக்க, அமர்ந்திருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
பூமியில் வாழ்ந்தவர்களிலே மிகவும் ஞானமுள்ள மனிதனான சாலொமோன் ராஜா, பிரசங்கி 9:11-ல் தேவனின் இதே வார்த்தைகளை எதிரொலிக்கிறார். சாலொமோன் இந்த வார்த்தைகளை தனது வயதான காலத்தில் எழுதியதாகக் கூறப்படுகிறது. தாவீது ராஜாவின் செல்ல மகனாகவும், அவருடைய சிங்காசனத்தின் வாரிசாகவும் வாழ்க்கையை பற்றிய அநேக காரியங்களை அவர் பார்த்து: "சூரியனுக்குக் கீழே நான் கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்."
பெருமைப்படுவதற்கு தனக்கு ஒன்றுமில்லை என்றும், தனக்குச் சொந்தமான அனைத்தும், ஏராளமான ஐசுவரியங்கள், திறமை, ஞானம், கனம் மற்றும் புகழ் எல்லாம், பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கின ஒருவராலேயே உண்டாயின என்றும் மிகத் தெளிவாக அறிவிக்கிறார். வரலாற்றில் மறக்க முடியாத ஆட்சி செய்த ராஜா தனது வெற்றிகரமான வாழ்க்கைக்கு தேவனே மூல காரணம் என்று அவருக்கே மகிமை செலுத்துகிறார். இதுதான் இறுதி ஜெயம்.
தேவனுக்குள் அமர்ந்திருங்கள். எதிரி வீழ்வதற்கான ஒரு வெற்றியாளரிடம் அவசியம் காணப்படவேண்டிய பண்பு இதுதான். உங்களைச் சுற்றி இருக்கின்ற பொல்லாதவர்கள்தான் ‘சத்துருக்களாக’ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்குக் காணப்படும் ஒரு வியாதியாக அது இருக்கலாம்; உங்கள் போதை பழக்கங்களாக இருக்கலாம்; தேவனைப் பிரியப்படுத்தாத எந்தவொரு பாரம்பரிய சுபாவங்களாகவும்கூட அது இருக்கலாம்; சில சமயங்களில் உங்களைத் தேவபக்தியில்லாத வழிகளில் நடத்தும் உங்கள் விருப்பங்களாகக்கூட இருக்கலாம்; தேவனுடைய சித்தத்திற்கு மாறாக சிந்திக்கும் சிந்தனைகள்கூட உங்கள் எதிரியாக இருக்கும், ஆம், ஜீவனுள்ள இரட்சகரிடமிருந்து உங்களைத் தூரப்படுத்தும் அனைத்தும், உங்களுடைய 'அமைதியால்' தகர்க்கப்பட முடியும். அவருடைய பிரசன்னத்தில் அமர்ந்திருக்க மட்டும் நீங்கள் உங்களையே விட்டுக் கொடுப்பீர்கள் எனில், அந்த அமைதியான நம்பிக்கை, முழுமையான கீழ்ப்படிதல் மற்றும் சகிப்புத்தன்மையுள்ள நம்பிக்கை இந்த மாதம் முழுவதும் உங்களைப் பாதுகாக்கும்,
தேவன்மீது உங்கள் விசுவாசத்தை வையுங்கள். அவர் செங்கடலை இரண்டாகப் பிளந்தவர், அவருடைய சத்தம் கொந்தளிக்கும் கடலை அமைதல்படுத்தியது. அவருடைய கரம் சூரியனுடைய சுழற்சியை நிறுத்தியது. நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் உதவிசெய்ய அவருடைய கரம் வானத்திலிருந்து உங்களை நோக்கி நீட்டப்படும். நீங்கள் அமர்ந்திருக்கக் கற்றுக்கொள்ளும்போது ஜெயம் உங்களுடையது. அவருடைய துதிகளைப் பாடுங்கள். உங்கள் இருதயத்திலிருந்து ஜெபம்பண்ணுங்கள், அவரை நோக்கிப் பார்த்து, உங்கள் அற்புதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஜூன் மாதம் உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட மாதமாக இருப்பதாக.
- Dr. பால் தினகரன்