Date : May 24, 2025
வாழ்க்கை என்பது நாம் விரும்பும் ஒன்றாகும். ஒரு சிறு குழந்தை கூட சாக்லேட்டுகள் இனிப்பானவை என்று தெரிந்து அதையே விரும்புகிறது. ஆனால் ஒரு வயதான நபர் வெவ்வேறு சுவைகளைப் பிரித்தறிந்து, என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்!முடிவுகள்தான் நம்மை உருவாக்குகின்றன. நாம் என்ன படிக்க விரும்புகிறோம் என்பது முதல், நம்மை திருப்திப்படுத்தும் வேலை, நம் வாழ்க்கை முறையை எவ்வாறு மேம்படுத்துவது, எங்கு பயணிக்க விரும்புகிறோம் என்பது வரை அனைத்து வகையான தேர்ந்தெடுத்தலையும் எதிர்கொள்கிறோம். அப்படிச் சொன்னாலும், சிலரால் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தாங்கள் விரும்பும் காரியங்களை தேர்வு செய்ய இயலாமல் போகலாம், அதை புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் பெரும்பாலும், பெரியவர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க உரிமை உண்டு. ஆண்டவர் நமக்கு தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுத்திருக்கிறார் என்பதை எரேமியா 21:8 உறுதிப்படுத்துகிறது.”இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன்”`.ஆண்டவரை பின்பற்றுபவர்களுக்கு ஜீவ வழி உண்டு. அவரை விட்டு விலகுகிறவர்களுக்கு மரண வழி உண்டு என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.
அனைவருக்கும் மரணம் தவிர்க்க முடியாதது - மற்றும் கணிக்க முடியாதது. நாம் செய்யும் செயல்களுக்காக இறக்க வேண்டியதில்லை என்பதை மட்டுமே ஆண்டவருடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் மூலம், ஆண்டவர் சொல்வது என்னவென்றால், நீங்கள் ஏதேனும் ஒரு தவறான செயலில் ஈடுபட்டிருந்தாலோ, அல்லது ஏதேனும் காரணத்திற்காக சிக்கிக்கொண்டாலோ, பின்னர் அதிலிருந்து மீண்டு வரலாம் என்று நம்பினால் நீங்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் உங்களுக்கு தப்பிக்க நேரம் கொடுக்கப்படமாட்டாது. நீங்கள் நினைப்பதை விட விரைவில் மரணம் உங்களை நெருங்கிவிடலாம். ஆனால், நீங்கள் மனந்திரும்பி ஆண்டவரிடம் வரும்போது, நீங்கள் வாழ்வீர்கள். உங்கள் விருப்பம்தான் இங்கு முக்கியம்,
எசேக்கியேல் 18:32 -ல் ஆண்டவர் தெளிவாக கூறுகிறார், “மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்”.
இந்தக் காரணத்தினால்தான் இயேசு ஜீவனைக் கொடுப்பவர் என்று அழைக்கப்படுகிறார். நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு பாடுகளையும் அனுபவித்து, புரிந்துகொண்டு, அதன் நடுவே, நம்மை வாழ வைக்க, அவர் மனிதாக அவதரித்தார். அவர் நமக்கு ஜீவனை கொடுக்க பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார் என்கிற உண்மையை யோவான் 10:10-ல் கூறுகிறார்.
இயேசு ஏன் வாழ்க்கைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். ஏனென்றால், எல்லா படைப்புகளும் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்கும், வாழ்வதற்கும் உண்டாக்கப்பட்டது. அவர் ஆண்டவர். அவர் நம்மேல் கரிசனை உள்ளவராகவும், நம்மில் அன்பு செலுத்துபவராகவும் இருக்கிறார். எனவே நாம் அவரை நேசித்து, அவருக்காக வாழ முடியும்.
இது உபாகமம் 30:19-ல் அழகாக கூறப்பட்டுள்ளது. “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு…”
நாம் நன்றாக வாழ வேண்டும் என்பது ஆண்டவருடைய விருப்பமாகும். கஷ்டங்கள், சவால்கள் மற்றும் பிரச்சனைகள் எல்லோருக்கும் எப்போதும் இருக்கும். ஆனால், உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். இயேசு ஜீவிக்கிறார் என்பதால் நீங்களும் வாழ்வீர்கள் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். கவலைப்படுவதை நிறுத்து. வாழ்க்கையைத் தேர்ந்தெடு.
- Dr. பால் தினகரன்