Date : May 21, 2025
மரணம் என்பது பேசுவதற்கு எளிதான ஒரு விஷயம் அல்ல. ஒருவர் எந்த வயதில் மரித்தாலும், அவருக்காக நாம் துக்கப்படுகிறோம். ஆனால் நமது பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமலேயே இருக்கிறது. ஒரு இளைஞன் மரிக்கும்போது, 'இவ்வளவு சீக்கிரம் மரணம் ஏன் வர வேண்டும்?' என்று நாம் கேட்கிறோம். 'கடவுள் எங்கே இருக்கிறார்? இந்த நபரை பூமியில் இன்னும் சிறிது காலம் அவரால் வைத்திருக்க முடியாதா?' என்று நாம் ஆச்சரியப்படுகிறோம்.
யாரோ ஒருவர் இறந்த செய்தியைக் கேட்கும் ஒவ்வொரு முறையும், நான் என் தங்கையை ஒரு சாலை விபத்தில் இழந்த 1986-ம் ஆண்டை திரும்பிப் பார்க்கிறேன். என் தங்கை ஏஞ்சல் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவளுக்கு வெறும் 17 வயதுதான். குடும்பத்தில் உள்ள எங்கள் அனைவருக்கும் அந்தப் பிரிவு தாங்க முடியாததாக இருந்தது. இரண்டு மாதங்கள் நாங்கள் ஆறுதலுக்கு இடமின்றி அழுதோம். எங்கள் வீடு முழுவதையும் நாங்கள் பார்க்கும்போது, அவளுடைய உடைமைகளைக் கண்டு, நாங்கள் மனமுடைந்து போவோம். அவள் இல்லாத வெறுமையான ஒரு வீட்டிற்குள் நுழைந்தபோது, அவளுடைய புன்னகை முகம் எங்களை வரவேற்க இல்லையென்பதைக் கண்டபோது, எங்கள் இருதயங்கள் துக்கத்தில் பிளந்துபோயின.
ஆனால் அந்த சூழ்நிலையிலும்கூட, தேவன் எங்களுக்கு ஜெபிக்க கிருபை கொடுத்தார். ஆறுதலுக்காகவும், பலத்திற்காகவும் நாங்கள் இயேசுவை மட்டுமே பார்க்க முடிந்தது. ஒரு நாள், எங்கள் குடும்ப ஜெப நேரத்தில், இயேசு எங்கள் நடுவில் வந்தார். பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே தரக்கூடிய மகிழ்ச்சியால் நாங்கள் நிரப்பப்படுவதை உணர்ந்தோம். என் சகோதரி இறந்தபிறகு முதல் முறையாக, நாங்கள் ஆவியில் லேசானதாக உணர்ந்தோம். "நான் மீண்டும் உங்களிடம் வருவேன், உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்." (யோவான் 16:20) என்ற இயேசுவின் வார்த்தைகளை பரிசுத்த வேதாகமத்தில் நாம் காண்கிறோம். இயேசு வாக்குப்பண்ணினதை அவர் எப்போதும் நிறைவேற்றுவார். நாங்கள் தொடர்ந்து ஜெபநிலையில் இருந்தபோது, கர்த்தராகிய இயேசு என் தந்தை டி.ஜி.எஸ். தினகரன் மூலம், "ஏஞ்சல் என்னுடன் இருக்கிறாள். எந்த வேதனையும், துக்கமுமில்லாத பரலோக மகிமையில் அவள் இருக்கிறாள். அவளை இழந்த துக்கத்தின் பாரத்தில் நீங்கள் இருப்பதை நான் அறிவேன். நானும் உங்களுடன் அழுகிறேன். அவள் மரணத்திற்கான காரணத்தை இப்போது நான் சொன்னால், உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இந்த துக்கத்தின் மத்தியிலும், நீங்கள் இன்னும் என்னைப் பின்பற்றுவீர்கள் என்று நான் சாத்தானுக்கு சவால் விட்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். நீங்கள் இந்த விஷயத்தில் என்னை ஏமாற்றி விடுவீர்களா?"
ஆண்டவர் எங்களிடம் இப்படிப் பேசுவதைக் கேட்டபோது, "ஆண்டவரே, நாங்கள் எங்கே போவோம்? கேள்வி கேட்காமல் உம்மை முழுமையாக நம்புவதற்கு எங்களுக்குக் கிருபை தருவீராக. நீர் எங்களை நேசிக்கிறீர் என்பதையும், உம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம். ஒருநாள் நாங்கள் வந்து உம்மையும், ஏஞ்சலையும் பரலோகத்தில் பார்ப்போம் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று நாங்கள் சொன்னோம்.
அன்று முதல், எங்கள் ஊழியத்தில் நாங்கள் அதிக கவனம் செலுத்தத் துவங்கினோம். காருண்யா பல்கலைக்கழகம், இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரங்கள் மற்றும் இந்தியா முழுவதும் சமுதாயத்தில் நலிந்தவர்களை மேம்படுத்துவதற்காக சீஷா என்ற தொண்டு நிறுவனத்தை நாங்கள் நிறுவினோம்.
கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் துக்கப்படுகிற ஒவ்வொரு இருதயத்தையும் அவருடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சி நிரப்புகிறது என்பது உண்மை. தேவன் "இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமானவர்" என்று அறியப்படுகிறார். (2 கொரிந்தியர் 1:3) மேலும், "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன்…. உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை, என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்." (யோவான் 14:27) என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாம் சொன்னபடியே உங்களை ஆறுதல்படுத்துவார்.
இளம் வயதில் யாராவது மரித்துவிட்டால், அதற்கான பதிலை மீண்டும் தேவனுடைய வார்த்தைகளில் காணலாம்: “நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.” (ஏசாயா 57:1)
ஆம், நாம் அனைவரும் ஒருநாள் இந்த உலகத்தை விட்டுப் போகத்தான் வேண்டும். பூமியில் வாழ்க்கை ஒரு கட்டத்தில் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், நாம் வாழும்வரை எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் இருப்பதைக் காண்கிறோம். மேலும் தேவன் சகலத்தையும் அதினதன் காலத்தில் நேர்த்தியாகச் செய்கிறார். (பிரசங்கி 3:11)
அவருடைய வார்த்தையை தொடர்ந்து நம்புங்கள். நீங்கள் கடந்து செல்கிற பாதையை இயேசு அறிவார். உங்கள் பாதையின் ஒவ்வொரு அடியிலும் அவர் உங்களை வழிநடத்தி, உங்களுக்கு ஆறுதல் அளிப்பார்.
- Dr. பால் தினகரன்