அன்பானவர்களே, "கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்" (சங்கீதம் 34:7) என்று வேதம் கூறுகிறது. தேவனுடன் நேரம் செலவிட ஆவலுடன் இருப்பதே அவரில் மனமகிழ்ச்சியாயிருப்பதாகும். ஆகவே, நாம் முதலாவது தேவனுக்குள் சந்தோஷத்தை தேடவேண்டும். இந்த ஆண்டுக்கான வாக்குத்தத்தமும், "கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்" (ஏசாயா 58:14) என்றே கூறுகிறது. "கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்" (நெகேமியா 8:10) என்றும் வேதம் கூறுகிறது. இப்போதிலிருந்து பரிசுத்த ஆவியானவரின் சந்தோஷத்தை ஆண்டவர் அதிகமதிகமாய் உங்களுக்குத் தருவார் என்று அறிந்திருக்கிறேன்.
இயேசுவுக்குள் மனமகிழ்ச்சியாயிருந்தபடியினால், அவர்பேரில் அதிகமாய் அன்புகூர்ந்த மரியாளைப் போல நீங்களும் மாறுவீர்கள். கர்த்தருக்குள் சந்தோஷமாயிருந்தால் உங்கள் குணம் மெய்யாகவே மறுரூபமடையும். பாவ அடிமைத்தனங்களை அது அகற்றும். "கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்" (சங்கீதம் 97:10) என்று வேதம் கூறுகிறது. நாம் தீமையை வெறுத்தால், உண்மையாகவே தேவ பிரசன்னத்தை அனுபவித்து மகிழ முடியும். கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கும் நம் பங்கை நாம் நிறைவேற்றும்போது, நம்முடைய இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றும் தம் பங்கை தேவன் செய்வார்.  பிறகு நீங்கள் கூப்பிடும் முன்னரே ஆண்டவர் பதிலளிப்பார். நீங்கள் பேசுவதை ஆண்டவர் கேட்பார்.
கோயம்புத்தூரை சேர்ந்த திவ்யா என்ற சகோதரியின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்களது கரு கலைந்தது; பணக்கஷ்டத்தையும் எதிர்கொள்ள நேரிட்டது. அவர்களும் அவர்கள் கணவரும் பெதஸ்தா ஜெப மையத்திற்கு வந்து, அங்கு நடந்த ஆசீர்வாத கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். ஜெப வேளையில் நான் மக்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவதற்காக ஜெபித்தபோது, அவர்கள் இருவரும் அபிஷேகத்தை பெற்றார்கள். அந்த தருணத்திலிருந்து அனைத்தும் மாறியது. சகோதரி திவ்யாவின் ஆரோக்கியம் சீர்ப்பட்டது. ஆண்டவர் அவர்கள் கணவருக்கு நல்ல வேலையை கொடுத்து ஆசீர்வதித்தார். அவர்களுக்கு இருந்த பெரிய கடன்களையெல்லாம் திரும்ப செலுத்தினார்கள்.  தற்போது, சகோதரி திவ்யாவுக்கும் அவர்கள் கணவருக்கும் அழகிய மகள் இருக்கிறாள். அவளுக்கு இரண்டரை வயதாகிறது. ஆண்டவர், அவர்களுக்கு மெய்யான சந்தோஷத்தை கொடுத்திருக்கிறார். அவர்கள் தேவனை ஸ்தோத்திரிக்கிறார்கள்; பரிசுத்த ஆவியின் சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள்.
அதேவண்ணமாக, நீங்களும் குடும்ப வாழ்வை சந்தோஷமாக அனுபவிப்பதற்கு ஆண்டவர் உதவுவார். மெய்யாகவே நீங்கள் ஆண்டவருக்குள் மகிழ்வீர்கள். உங்களுடைய இருதயத்தின் விருப்பங்கள் அனைத்தும் அருளப்படும்; பாவ அடிமைத்தனங்கள் உங்களை விட்டு அகலும். கர்த்தர் உங்களை விடுதலையாக்குவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் உம்மில் களிகூருகிறேன்; உம்முடைய பிரசன்னத்தில் சந்தோஷத்தை தேடுகிறேன். நான் உம்மில் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது, என்னுடைய இருதயத்தின் விருப்பங்களை நீர் அருளிச்செய்வதாக கொடுத்துள்ள வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தால் என்னை நிறைத்தருளும்; என்னுடைய குணத்தை மறுரூபமாக்கும். உம்முடைய பிரசன்னத்தில் நான் உண்மையாய் மகிழும்படி என்னுடைய பாவ அடிமைத்தனங்களை அகற்றி, தீமையை வெறுப்பதற்கு எனக்கு உதவும். என் வாழ்க்கையை நீர் ஆசீர்வதிப்பீர் என்று விசுவாசிக்கிறேன். உம்மிடமிருந்து மாத்திரமே வரக்கூடிய பெலனையும் சந்தோஷத்தையும் எனக்கு அருளிச்செய்யும். என்னுடைய ஜெபங்களை நீர் கேட்டு அவற்றுக்கு பதில் அளிப்பீர் என்பதை அறிந்து, எப்போதும் உம்மை தேடுவதற்கு எனக்கு உதவும். நீர் உண்மையுள்ளவராயிருப்பதற்காகவும், என்மீது காட்டும் அன்புக்காகவும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.