அன்பானவர்களே, "மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்" (சங்கீதம் 58:11) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். நீங்கள் உண்மையாய் வேலை செய்யலாம்; நீதியான வாழ்க்கை நடத்தலாம்; தேவையிலுள்ளோருக்கு உதாரத்துவமாக எப்போதும் உதவலாம்; அர்ப்பணிப்புடன் தேவனுக்கு ஊழியம் செய்யலாம். ஆனாலும், "நான் அனைவரையுமே நன்றாக நடத்துகிறேன்; எனக்கு எப்போது பலன் கிடைக்கும்?" என்று நீங்கள் எதிர்பார்ப்போடு இருக்கலாம். உங்கள் நீதிக்கு மிகுதியான பலன் உண்டென்று ஆண்டவர் கூறுகிறார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:33) என்று இயேசு கற்பிக்கிறார்.

ஊழியத்தின் அருமையான பங்காளரான சகோதரி சந்தியா லோஹெண்டே, மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை சேர்ந்தவர்கள். அவர்கள் 19 ஆண்டுகளாக இயேசு அழைக்கிறார் ஊழியத்தை உத்தமமாய் தாங்கி வருகிறார்கள். 2002ம் ஆண்டு அவர்களுக்குத் திருமணமானது. 2018ம் ஆண்டு வரைக்கும், சொந்த வீடு வேண்டும் என்ற வாஞ்சையோடு வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார்கள். அந்த ஆண்டு மே மாதம் கோயம்புத்தூர் - காருண்யா நகரில் அமைந்துள்ள பெதஸ்தா ஜெப மையத்திற்கு வந்து, ஊக்கமாக ஜெபித்துள்ளார்கள். அற்புதவிதமாக ஜூன் மாதமே தேவன் அவர்கள் குடும்பத்திற்கு அழகிய புது வீட்டை அளித்துள்ளார். சிறியதாக ஒரு வீட்டைத் தருவார் என்று அவர்கள் நம்பியிருந்தவேளையில் அவர்கள் எதிர்பார்த்தற்கும் மேலாக, விஸ்தாரமான அழகிய வீட்டை தேவன் கொடுத்துள்ளார். மெய்யாகவே, நாம் கேட்பதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக அவர் ஆசீர்வதிக்கிறார்.

தன்னுடைய வேலையைக் குறித்து ஒரு சாட்சியை அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் அவர்கள் 15 ஆண்டுகளாக பணியாற்றினார்கள். அவர்களுடன் பணிபுரிகிறவர்களுக்கு ஏற்ற நேரத்தில் பதவி உயர்வும் நல்ல சம்பள உயர்வும் கிடைத்தபோதும், இவர்களுக்கு மிகக்குறைவாக சம்பள உயர்வு கிடைத்தது. அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்தும், உயர்வு இல்லாததால் அவர்கள் மனந்தளர்ந்துபோனார்கள். அவர்கள் பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. 2022 பிப்ரவரி மாதம் அவர்கள் புதிய வேலையைக் குறித்த தேவனுடைய வழிநடத்துதலை அறிந்துகொள்ளும்படி பெதஸ்தா ஜெப மையத்திற்கு மீண்டும் வந்தார்கள். அங்கிருந்து புறப்படும் முன்பு தேவனுடைய பிரசன்னத்தை குறித்து தெளிவான அடையாளத்தை காண்பிக்கும்படி ஜெபித்தார்கள். பெதஸ்தாவிலிருந்து அவர்கள் நடந்துசென்று கொண்டிருந்தபோது, இன்னொரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் அவர்களுக்கு வேலை தருவதாக தொலைபேசி மூலம் தகவல் வந்தது. கடந்த 10 மாதங்களில் அவர்கள் அந்த நிறுவனத்தில் முந்தைய ஊதியத்தைக் காட்டிலும் 50% அதிகமான ஊதியத்தை பெற்று வருகிறார்கள். தம்மை நம்புகிற அனைவருக்கும் தேவன் கொடுத்துள்ள வாக்குத்தத்தத்தின்படி, சகோதரி சந்தியாவின் நீதியை அவர் கனப்படுத்தி வேலையில் பெரிய திருப்புமுனை ஏற்படும்படி செய்தார்.

ஜெபம்:
பரம தகப்பனே, என் வாழ்வில் உம்முடைய தயையும் உத்தமமும் விளங்குவதை எண்ணி நன்றியுடன் உம் முன்னே வருகிறேன். நீதிமானுக்கு பலன் தருவதாக நீர் அளித்துள்ள வாக்குத்தத்தங்களுக்காகவும், நான் எண்ணுவதற்கும் மேலாக எனக்கு வேண்டியவற்றை தருவதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக உம்முடைய ராஜ்யத்தையும் நீதியையும் தொடர்ந்து தேடவும், என் வாழ்க்கையைக் குறித்து நீர் வைத்துள்ள திட்டங்களையும் உம்முடைய ஏற்ற வேளையையும் நான் நம்பவும் உதவி செய்யும். நான் முடிவுகளை எடுக்கும்போதும், எல்லா சூழ்நிலைகளிலும் உம்முடைய பிரசன்னம் என்னை வழிநடத்தட்டும், ஆமென்.