Date: August 12, 2025
 
"உன் கால்நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக" (நீதிமொழிகள் 4:26)

இயேசு, மனிதனாய் பூமியில் வாழ்ந்தபோது செய்த காரியங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு. களைத்துப்போன தம் சீஷருக்காக கடலருகே மீன் சுட்டது, திருமணத்தில் திடீரென வந்த கூட்டத்தினருக்காக தண்ணீரை ருசியுள்ள பானமாக மாற்றியது, அவருடன் சிரித்து மகிழ விரும்பிய சிறுபிள்ளைகளுடன் நேரம் செலவழித்தது என்று இயேசு, அனைவரையும் நன்றாக உணர வைத்தார். ஒவ்வொரு தருணத்தையும் தேவன் விரும்பியவண்ணமே வாழ்ந்தார். இயேசு, மானுட உருவில் இருந்த தேவனானாலும் உங்களையும் என்னையும் போலவே வாழ்ந்தார்.

"நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்" (அப்போஸ்தலர் 10:38)

நன்மை செய்வதும், நாம் மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதுமே தேவன் பூமிக்கு வந்ததன் நோக்கமாயிருந்தது. இயேசு தம் சீஷர்களின் கால்களைக் கழுவிய சம்பவத்தை வேதம் விளக்குகிறது. யோவான் 13:1-7 என்ற வேதாகம பகுதியில், இயேசு, சீலையை அரையிலே கட்டிக்கொண்டு சீஷர்களின் கால்களை கழுவினார். "சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்." இதைக்காட்டிலும் தாழ்மையான காரியம் எது இருக்கக்கூடும்? சீஷர்கள் பின்பற்றுவதற்கு அவர் தம்மைத்தாமே மாதிரியாக வைத்தார். இயேசுவின் இந்தச் செயல், அவரை பின்பற்றினால் நம் எண்ணங்களும், வார்த்தைகளும் கிரியைகளும் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதைக் காட்டுகின்றது.

சமாதானத்தின் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு நம் கால்கள் ஆயத்தமாயிருக்கவேண்டும் என்று எபேசியர் 6:15 கூறுகிறது. எங்குமுள்ள மக்களுக்கு சமாதானத்தின் செய்தியை அறிவிப்பதற்கு இயேசு நீண்ட தொலைவு நடந்தார். ஒரே ஒருவராக இருந்தாலும், தொட்டு சுகப்படுத்தவும், ஒரு ஆத்துமாவை வேதனையிலும் பாவத்திலும் மரணத்திலுமிருந்து விடுவிக்கவும் இயேசு, மலைகள் பள்ளத்தாக்குகளைக் கடந்து பல மைல் தூரம் நடந்தார். தாம் அக்கறையுள்ளவராக இருப்பதை காண்பிக்க அவர் தண்ணீரின்மேலும் நடந்தார்.

"சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன" (ஏசாயா 52:7) என்று வேதம் கூறுகிறது.

இயேசு செய்ததை நாமும் செய்ய விரும்பினால், தேவனுடைய அன்பை நம் வாழ்வின் மூலம் பகிர்ந்துகொள்வதற்கு விரும்பினால், நாம் தேவ வார்த்தையின் மூலம் நடத்தப்பட வேண்டும். "உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன். ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம் 119:104, 105)
தேவனுடைய சித்தத்திற்கு நாம் இசைந்திருந்தால், அவருக்குப் பிரியமானவற்றையே தொடர்ந்து செய்தால், நாம் சரியான பாதையில் செல்லுவோம்; ஒன்றும் நம் விசுவாசத்தை அசைக்கமுடியாது. பிறகு,தேவ சமாதானமாகிய இயேசு, சாத்தானை நம் கால்களின் கீழ் நசுக்கிப்போடுவார் (ரோமர் 16:20); பூமியின் உயர்ந்த இடங்களில் ஏறியிருக்கப் பண்ணுவார் (ஏசாயா 58:14). அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து இயேசுவை பின்பற்றுவோருக்கு ஜெயமும் கனமும் வைக்கப்பட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.

இயேசு, நம்மில் ஒருவரைப்போல, நாமும் அவரைப்போல இருக்கலாம் என்பதை காண்பிக்க இந்த உலகிற்கு வந்தார். உயிர்த்தெழுந்த இயேசு, தம் சீஷர்களுக்கு தோன்றி, ஊழியப் பாதையின் அடையாளங்களை, பரம தகப்பனிடமான அர்ப்பணிப்பை, தம்முடைய குத்தப்பட்ட பாதங்களை காண்பித்தார் (லூக்கா 24:39,40). நாம் இன்றைக்கு அவரிடம் எதைக் காண்பிக்க இருக்கிறோம்?

இன்றைக்கு நீங்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை தேவன் அறிந்திருக்கிறார். தமக்காக எதையும் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கும் நீங்கள் தம் பிள்ளை என்றும் அறிந்திருக்கிறார். இயேசுவை பற்றிக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் கடந்துசென்று கொண்டிருக்கும் மோசமான பாதையை அவர் காண்பார். நீங்கள் பத்திரமான இடத்திற்குச் சென்று சேர்வீர்கள். நம்பிக்கையை இழந்து போகாதிருங்கள். இரட்சகர் உங்களோடு இருக்கிறார்.
 
~ Dr. பால் தினகரன்