அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இஸ்ரவேலில் உள்ள தேவ மக்கள், வானத்திலிருந்து மன்னா கிடைக்கப்பெற்றபோது அதிக மகிழ்ச்சியடைந்தார்கள். அது மிகவும் மதுரமாயிருந்தது. இன்றைக்கு உங்களுக்கு பரலோகத்தில் தேவனிடமிருந்து அதேபோன்ற வாக்குத்தத்தம் கிடைக்கப்போகிறது. தேவன், "கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்" (நீதிமொழிகள் 18:10) என்று சொல்லுகிறார். உண்மைதான், அன்பானவர்களே! நீங்கள் கர்த்தரின் நாமத்தை சுமந்து, ஓடி, "ஆண்டவரே, நான் உம் பிள்ளை," என்று சொல்லி அதற்குள் மறைந்துகொள்ளும்போது நீங்கள் பாதுகாப்பாய் இருப்பீர்கள். ஒரு தீங்கும் உங்களை அணுக முடியாது; அழிக்க முடியாது. உங்கள் ஆத்துமாவை ஒன்றும் சேதப்படுத்த முடியாது. உங்கள் வாழ்க்கை அழிக்கப்படாமல், நீங்கள் தேவனுடைய கரங்களில் பாதுகாப்பாய் இருப்பீர்கள்.
கிரிக்கெட் விளையாட்டில் இருபக்கமும் இரண்டு பேட்ஸ்மென் நிற்பார்கள். அவர்கள் பந்தை அடித்தவுடனே மறுபுறத்தை அடையும்படி ஓடுவார்கள். அவர்கள் ஓடி, மறுகரையை அடைந்ததும் நடுவர், நீங்கள் பாதுகாப்பாய் இருக்கிறீர்கள் என்று கூறுவார். ஒருவரும் உங்களை எடுக்க முடியாது; உங்களை ஆட்டமிழக்கச் செய்ய முடியாது. நீங்கள் பாதுகாப்பாய் இருக்கிறீர்கள் என்பார். நீங்கள் அப்படியே இருக்கவேண்டும். நீங்கள் கர்த்தரின் நாமத்தினால் ஓட வேண்டும். ஆம், ஒரு தீங்கும் தொடக்கூடாமல் ஓடவேண்டும்.
நீங்கள் தேவனுடைய நாமத்தினால் மூடப்படாவிட்டால், தேவ பிள்ளையாயிராவிட்டால், பிசாசின் தாக்குதலுக்கு இலக்காவீர்கள். அன்பானவர்களே, இன்றைக்கு அவருடைய நாமத்திற்குள் மறைந்துகொண்டு, "ஆண்டவரே, நான் உம் பிள்ளை," என்று கூறுங்கள். அப்போது தீமையான தாக்குதல் ஒன்றும் வாய்க்காது. தேவன் உங்களைப் பாதுகாப்பார். நீங்கள் சுகமாயிருப்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய அடைக்கலமாக, பலத்த கோட்டையாக, துருகமாக இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இன்றைக்கு, நான் விசுவாசத்துடன் ஓடி, "ஆண்டவரே, நான் உம்முடைய பிள்ளை," என்று அறிக்கையிடுவேன். எந்த தீங்கும் என்னை அணுகமுடியாது; நான் உம்முடைய பலத்த கரங்களில் இருப்பதால் எந்த இருளும் என்னை மேற்கொள்ள முடியாது என்று நம்புகிறேன். என்னை மூடி பாதுகாத்தருளும்; என் இருதயத்திற்கும் ஆத்துமாவுக்கும் கேடகமாயிரும். நான் எதிர்கொள்கிற எல்லா யுத்தங்களிலும் உமது நாமமே எனக்கு கொடியாக இருக்கட்டும். நீர் என் முன்னே செல்கிறீர்; எனக்கு பிறகே நிற்கிறீர்; எப்பக்கமும் என்னை சூழ்ந்துகொள்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். எனக்கு அரணாகவும் நம்பிக்கையாகவும் பெலனாகவும் இருப்பதால் இயேசுவின் நாமத்தில் நன்றி கூறி ஜெபிக்கிறேன், ஆமென்.