கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, வேதம், "தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்" (எபிரெயர் 7:25) என்று கூறுகிறது. எவ்வளவு மகிமையான சத்தியம்! நம் ஆண்டவராகிய இயேசு, நமது இரட்சகர் மட்டுமல்ல; நமக்காக நித்தியமாக வேண்டுதல் செய்கிறவரும் அவர்தாம். அவர் ஒருபோதும் சோர்ந்துபோவதில்லை; ஒருபோதும் நம்மை மறந்துபோவதில்லை; நமக்காக எப்போதும் பிதாவின் முன் நிற்கிறார். தேவனுடைய திட்டம் பூரணமானது என்பதை இது காட்டுகிறது. அவர், தம் வேலையை அரைகுறையாக விடுவதில்லை; நமக்காக வேண்டுதல் செய்து அதை முடிக்கிறார். ஆகவேதான் யோபு, "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்" (யோபு 42:2) என்று பிரகடனம் செய்தான். அன்பானவர்களே, தேவனுடைய பரிபூரண திட்டத்தை நாம் சார்ந்திருக்கும்போது, நிறைவான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறோம்.

2008ம் ஆண்டு, எங்கள் அன்பு தகப்பனார் சகோ.டி.ஜி.எஸ். தினகரன் ஆண்டவரண்டைக்குச் சென்ற பிறகு சென்னையில் ஒரு பெரிய பிரார்த்தனை திருவிழா நடத்த திட்டமிட்டோம். அந்தக் கூட்டத்திற்கு முன்பு, இயேசு அழைக்கிறார் ஜெப வீரர்கள் சிறு குழுவாக, எங்கள் ஓய்வறைக்குப் பின்னர் ஜெபிக்கிறதை பார்த்தேன். அவர்களது ஊக்கமான ஜெபம், அந்த இடத்தை தேவ பிரசன்னத்தின் அக்கினியால் நிறைத்தது. அந்தக் கூட்டத்தில் நாங்கள் கணக்கற்ற அற்புதங்களைக் கண்டோம். மக்கள் மைதானத்திற்குள் வருவதற்கு முன்பாகவே குணமானார்கள்; வாழ்வில் திருப்புமுனை அனுபவங்களைப் பெற்றார்கள். அன்பானவர்களே, மனுஷர்கள் ஊக்கமாக ஜெபிக்கும்போது, தேவன் செவிகொடுத்து பலத்தவிதமாக பதிலளிக்கும்போது, ஆண்டவர் இயேசு வேண்டுதல் செய்யும்போது, நம் வாழ்வில் எவ்வளவு அதிகமாய் அற்புதங்கள் நடக்கும்! வேதம், "கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே" (ரோமர் 8:34) என்று கூறுகிறது. இயேசு, இந்த பூமியில் மனிதனாக வாழ்ந்தபடியினால் நம் பலவீனங்களை, நம் வேதனையை, நமக்கு வரும் சோதனைகளை அறிந்திருக்கிறார். உங்களையும் என்னையும் உண்மையாக புரிந்துகொள்வதற்கு அவரால் மாத்திரமே முடியும்.

என் முதல் மகன் சாம், சில மாதங்கள் நிரம்பியவனாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அவன் காய்ச்சலில் படுத்தான். 102 டிகிரி காய்ச்சல் கொதித்தது. அந்த நள்ளிரவு என் கணவரும் குடும்பத்தில் மற்றவர்களும் ஊழியத்தினிமித்தம் துபாய் சென்றிருந்தனர். நான் மட்டுமே தனியே இருந்ததால் என்ன செய்வதென்று திகைத்தேன். ஆண்டவர், திடீரென இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை எனக்கு நினைப்பூட்டினார். நான் அழைத்தபோது, என்னோடு இணைந்து ஜெபித்த ஜெப வீரர் என் கரத்தை பிள்ளையின் மீது வைக்கச் சொன்னார். நாங்கள் இணைந்து ஜெபித்தபோது, சாமின் உடம்பு வியர்க்க ஆரம்பித்தது. காய்ச்சல் அகன்றது. அவன் உடல் குளிர்ந்தது. ஆண்டவர் அந்த இரவில் ஓர் அற்புதம் செய்தார். அன்பானவர்களே, அவ்விதமே இயேசுதாமே உங்களுக்காக இன்றைக்கு வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார். அவர் ஒருபோதும் உறங்குவதில்லை; தூங்குவதுமில்லை. உங்களை வியாதியிலிருந்து, கடனிலிருந்து, பயத்திலிருந்து, ஒடுக்குதலிலிருந்து, நீங்கள் எதிர்கொள்ளும் எல்லா உபத்திரவங்களிலுமிருந்தும் காப்பதற்காக அவர் வேண்டுதல் செய்கிறார். இயேசுவிடம் வாருங்கள். அவரது ஜெபத்தை நம்புங்கள். அவர் ஜீவனோடிக்கிறார்; தேவைப்படும் நேரத்தில் உங்களுக்கு உதவி செய்ய எப்போதும் ஆயத்தமாயிருக்கிறார்.

ஜெபம்:
பரம தகப்பனே, எப்போதும் எனக்காக வேண்டுதல் செய்யும் இயேசுவுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உம்முடைய நீதியுள்ள வலக்கரத்தை என் மீது நீட்டுவீராக. எல்லா வியாதியையும், வேதனையிலிருந்து என் சரீரத்தையும் குணமாக்குவீராக. எல்லா பயத்திலிருந்தும் ஒடுக்குதலிலிருந்தும் என்னை விடுவித்தருளும். கடன்களிலிருந்தும் பணத்தினால் ஏற்படும் போராட்டங்களிலிருந்தும் என்னை உயிர்த்தெழச் செய்யும். தேவனே, என் குடும்பத்திற்கு சமாதானத்தையும் ஒருமனத்தையும் அருளிச்செய்யும். என் பிள்ளைகளை ஆசீர்வதித்து, படிப்பதற்கான ஞானத்தை அருளிச்செய்தருளும். நம்பிக்கையோடு நாம் காத்திருக்கும் வேலைகளுக்கான வாசல்களையும் வேலையில் வளர்வதற்கான வாசல்களையும் திறந்தருளும். நாம் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது என் வாழ்வில் அற்புதங்கள் நடக்கட்டும். ஆண்டவர் இயேசுவே, என்னை முற்றிலும் இரட்சிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், ஆமென்.