"சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று யோவான் 14:27ல் இயேசு கூறுகிறார். தன்னுடைய சமாதானத்தை நமக்கு தருவதாக அவர் கூறுகிறார். வேதம், தேவன் உன்னதத்தில் அமர்ந்து சமாதானத்தை உற்பத்தி செய்கிறதாக கூறுகிறது (யோபு 25:2). அவர் முழு உலகத்திற்கும் சமாதானத்தை அனுப்புகிறார். ஆகவேதான், உலகம் முழுமையும் ஒழுங்காக இயங்குகிறது. தேவ சமாதானம் பூமியெங்கும் ஆட்சி செய்கிறது. ஆகவேதான் சந்திரன்களும் கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இருக்கின்றன. எல்லாமும் இயல்பாய் இயங்குகின்றன. ஒருநாள் என் தகப்பனார் ஒரு தரிசனம் கண்டார். அவர் மனமுடைந்து போயிருந்த நிலையில் பரிசுத்த ஆவியானவர் அவரை பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார். அவர், தன்னுடைய சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருப்பதைக் கண்டார். அவருக்கு முன்பாக கிரகங்கள் இயங்கிக்கொண்டிருப்பதையும், பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருப்பதையும் கண்டார். அவருடைய சிங்காசனத்தை கடக்கும்போது கிரகங்கள் எல்லாம் அவருக்கு முன்பாக பணிந்து சென்றன. ஆண்டவர், "என் மகன் தினகரனே, மொத்த பிரபஞ்சத்தையும் நான் ஆளுகை செய்வதை நீ பார்க்கவில்லையா? அவற்றை சமாதானத்துடன், குழப்பம் இல்லாமல் என்னால் வழிநடத்த முடியுமென்றால் உன் வாழ்க்கையை வழிநடத்த முடியாதா? என்னுடைய சமாதானத்தை உனக்குக் கொடுக்கிறேன். என்னுடைய சமாதானம்! உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் கொடுப்பதில்லை" என்று கூறினார்.
உலகத்தின் சமாதானம் பிசாசிடமிருந்து வருவதால் அது குழப்பமடைந்திருக்கிறது. உலகம் தருகிற சமாதானம் தற்காலிகமாயிருக்கிறது. மக்கள் எதையாவது தேடும்போது சமாதானமாயிருக்கிறார்கள்; அதை பெற்றுக்கொண்டபோது, மற்றவற்றை எறிந்துபோடுகிறார்கள். ஆனால் இயேசு, "அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன். உன்னை சிலுவையில் இரத்தம் சிந்தி, கிரயத்திற்குக் கொண்டது முதல் சிநேகிக்கிறேன். நீ எனக்குச் சொந்தமானவன். நான் தரும் சமாதானம் நிறைவாயிருக்கும். என்னுடைய சமாதானத்தையே உனக்குக் கொடுக்கிறேன்," என்று கூறுகிறார். அவர் பிதாவிடம், "என் மகனை நான் அநாதி சிநேகத்தால் சிநேகித்தேன். என்னுடைய சமாதானத்துடன் போ. நான் ஒருபோதும் உன்னை விட்டு விலக மாட்டேன்; ஒருபோதும் உன்னை கைவிடமாட்டேன்," என்று கூறினேன். அப்போது எல்லா பிரச்னைகளும், சவால்களும் மறைந்தன. கோடிக்கணக்கானோர் அவரால் ஆசீர்வாதம் பெற்றனர். தேவன், உங்களுக்கும் அப்படியே செய்வார்.
அவர் இயேசுவின் சமாதானத்தை உங்களுக்குள் வைக்கிறார். இயேசு, ஒவ்வொரு உபத்திரவங்களிலும் சமாதானத்தை சுமந்தார். தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாஸை குறித்து அவர் அஞ்சவில்லை. தன்னை மறுதலித்த பேதுருவை கண்டு அவர் அஞ்சவில்லை. தன்மேல் பொய்யாய்க் குற்றஞ்சாட்டிய ஆசாரியர்களைக் குறித்து அவர் அஞ்சவில்லை. தன்னை தவறாய் நியாயந்தீர்த்து சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுத்த பிலாத்துவைக் கண்டு அவர் அஞ்சவில்லை. அவர் யாருக்கும் பயப்படவில்லை. அவர், "பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்," என்று கூறினார். பிறகு அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருந்தார். அவர் ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமாய் இருக்கிறார். அதே இயேசு கிறிஸ்து உங்களுக்குள் வாழ்கிறார். அதே இயேசுவின் சமாதானம் உங்களுக்குள் வருகிறது. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவ சமாதானத்தினால் நீங்கள் பிழைத்திருப்பீர்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, உம்முடைய சிங்காசனத்திலிருந்து பாய்ந்து வரும் பரிபூரண சமாதானத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். குழப்பம் நிறைந்த, மாய இன்பங்கள் நிறைந்த இந்த உலகில் உம்முடைய நித்திய சந்தோஷத்தை நான் நாடுகிறேன். இயேசுவின் சமாதானம் என் இருதயத்தை நிரப்பி, என் வாழ்க்கையை வழிநடத்தட்டும். தயவுசெய்து நீர் கிரகங்களையும் முழு பிரபஞ்சத்தையும் ஒத்திசைவாக இயங்கப்பண்ணுவதுபோல என் வாழ்க்கையையும் நடத்துவீர் என்று நம்புவதற்கு எனக்கு உதவி செய்யும். உம்முடைய சமாதானத்தை, உலகம் தருகிறவிதமாக அல்லாமல், நீர் தருகிற எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் என் வாழ்வில் வீசுகிற எல்லாப் புயல்களையும் அமர்த்தவேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.