அன்பான நண்பரே, இன்றைய வாக்குத்தத்த வசனம், 1 சாமுவேல் 2:9. "அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்" என்பதே. ஆம், நம்முடைய ஆண்டவர் தமக்கு ஊழியம் செய்கிறவர்களை ஒரு தீங்கும் அணுகாமல் பாதுகாக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது. சங்கீதம் 37:28-ல், "கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களை ஒருபோதும் கைவிடுவதில்லை" என்றும், "அவர்கள் என்றென்றைக்கும் காக்கப்படுவார்கள்" என்றும் வாசிக்கிறோம். ஆம், அவர் தம்முடைய பிள்ளைகளாகிய பரிசுத்தவான்களை காக்கிறவராயிருக்கிறார். மேலும், அவர் தமது பரிசுத்தவான்களின் பாதையையும் காப்பாற்றுகிறார். அதோடுகூட, அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் குற்றமற்றதாய் காக்கிறார் (1 தெசலோனிக்கேயர் 5:23). இவ்வாறு ஆண்டவருக்கு ஊழியம் செய்து, பரிசுத்தமாய் வாழ்ந்த குடும்பத்தை, கர்த்தர் கொடிய விபத்திலிருந்து எவ்வாறு பாதுகாத்தார் என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
சகோதரர் ஜவகர் பிரபாகரன் குடும்பத்தினர் திருச்சியில் வசிக்கிறார்கள். அவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். அவர் தனியார் கல்லூரியில் ஒன்றில் வேலை செய்துகொண்டே, இயேசு அழைக்கிறார் ஊழியத்திலும் தன்னார்வ ஜெபவீரராக ஆண்டவருக்கு ஊழியம் செய்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு, மே மாதம், அவர்கள் குடும்பமாய் கோயம்புத்தூரிலிருந்து திருச்சிக்கு காரில் பிரயாணம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, இவர்கள் பிரயாணம் செய்த காரின்மீது இடித்து, கொஞ்ச தூரம் இழுத்து சென்றது. இந்த விபத்தில் கார் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில், இந்த சகோதரரின் குடும்பத்தினர், கண்டிப்பாக நாம் அனைவரும் இறந்துவிடுவோம் என்று பயந்து கூச்சலிட்டார்கள். அந்த சத்தத்தைக் கேட்டு, அருகிலிருந்தவர்கள் கிட்டத்தட்ட 50 பேர் ஓடோடி வந்து, இவர்களை காப்பாற்ற உதவி செய்தார்கள். ஒவ்வொருவரையும் காரிலிருந்து வெளியே எடுத்தார்கள். அப்பொழுது, காரின் உள்ளேயிருந்த ஒருவருக்கும் சிறு காயம்கூட இல்லாதது கண்டு, அனைவரும் ஆச்சரியமடைந்தார்கள். இவ்வளவு பெரிய விபத்தில் ஆண்டவர் அவர்கள் குடும்பத்தை பத்திரமாய் காப்பாற்றினார்.
இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் தன்னார்வ ஊழியராக இருந்த சகோதரர் ஜவகர், விபத்து நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான், ஸ்தானாபதியாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அதினிமித்தமே, ஆண்டவர் அவரையும், அவரது குடும்பத்தினரையும் இந்த கொடிய கார் விபத்திலிருந்து, எந்தவொரு சேதமும் இல்லாமல் பத்திரமாய் காப்பாற்றினார். அதன்பின்பு அவர்கள் புதிய கார் வாங்கவும் ஆண்டவர் அவர்களுக்கு உதவி செய்தார்.
எனக்கு அருமையான நண்பரே, இதேவிதமாக நீங்கள் ஆண்டவருக்கு உங்களுடைய நேரத்தை செலவளிக்கும்போது, அல்லது அவருக்காக ஊழியம் செய்யும்பொழுது, நிச்சயம் அவர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அவர் எந்தவொரு சேதமுமின்றி பாதுகாப்பார்.
ஜெபம்:
அன்புள்ள இயேசு சுவாமி, நீர் உமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பதாக உறுதியளித்திருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். நான் எங்கு சென்றாலும் நீர் என்னோடுகூடவே வருவதற்காக உமக்கு நன்றி. என் குடும்பத்தை எந்தவொரு தீங்கும், பொல்லாப்பும் அணுகாமல் உம்முடைய செட்டைகளின் மறைவில் வைத்து பாதுகாத்துக்கொள்வீராக. உம்முடைய பிரசன்னம் எப்பொழுதும் என்னை சூழ்ந்துகொள்வதாக. உம்முடைய தூதர்களை அனுப்பி என்னை காத்தருளும். என்னுடைய தேவைகள் அனைத்தையும் பரத்திலிருந்து நீர் சந்திப்பீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே. ஆமென்.