"இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை" (சங்கீதம் 121:4) என்று கூறுகிறது. எவ்வளவு நிச்சயம்! நம் தேவனானவர் மனுஷனைப்போல விடாய்த்துப்போகிறவரல்ல, களைத்தும்போகிறவரல்ல, கவனம் தப்பிப் போகிறவருமல்ல. அவர் எப்போதும் விழிப்பாய் இருக்கிறார்; எப்போதும் நம்மை கண்ணோக்கிக் கொண்டிருக்கிறார். நாம் தனிமையின் பாதையில், சவால்களின், ஆபத்துகளின் வழியாக கடந்துபோகும்போதும் அவர் ஒருபோதும் விலகாத நண்பன்போல, நம்மை காக்கும்படி நமக்குப் பக்கத்தில் நிற்கிறார். மெய்யாகவே அவர் நம் ஆத்துமாவை காக்கிறவராயிருக்கிறார்.

சமீபத்தில் என் தந்தை நாக்பூரில் பங்காளர்களை சந்திக்கவேண்டியதிருந்தது. தினமும் பலத்த மழை பெய்தது. கூட்டத்தை நடத்த முடியாமல் போகுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனாலும், ஆண்டவர் நிச்சயமாக வழிநடத்தியபடி, எங்கள் குழுவினர் விசுவாசத்தோடு சென்றனர். கூட்டம் நடக்கவேண்டிய தினத்தன்று மழையே இல்லை. வெயில் அடித்தது. மக்கள் ஆச்சரியப்பட்டு, "சகோதரரே, இன்றைக்கு வெயில் நன்றாக அடிக்கிறது," என்று கூறினார்கள். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தேவ வல்லமை பலமாய் அசைவாடியது. அன்பானவர்களே, தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தையை நம்பி, விசுவாசத்தில் முன்னேறிச் செல்லும்போது இப்படி நடக்கிறது. இஸ்ரவேலர்களுக்கு வேண்டியவற்றை அருளிச்செய்து, பாதுகாத்து, வழிகாட்டி மோசேயின் மூலமாக நடத்தியதுபோல, நாம் அவரது வார்த்தையை கனப்படுத்தி, அவரது சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நம் வாழ்விலும் அவர் அப்படியே கிரியை செய்கிறார்.

நாம் அவரது வாக்குத்தத்தங்களை உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம். நாம் கீழ்ப்படிந்து நடக்கும்போது, தேவன் நமக்கு வழிகாட்டியும் பாதுகாவலருமாகிறார். அவர் நமக்கு முன்னே போகிறார்; நமக்குப் பின்னே நிற்கிறார்; எப்பக்கமும் நம்மை மூடுகிறார். சில நேரங்களில் அவரது வழிகாட்டுதல்கள் கூடாதவைபோல தோன்றலாம்; அவரது வாக்குத்தத்தங்கள் மிகப்பெரியவைபோல தோன்றலாம்; ஆனால் நாம் விசுவாசித்து, அவரது வார்த்தையின்பேரில் ஜெபிக்கும்போது, அந்த வார்த்தையே நமக்குக் கேடகமாகிறது.நாம் முழு மனதோடு அவரை நம்புவோம்; அவரது பாதைகளில் நடப்போம்; அவருடைய வல்லமையான பாதுகாப்பின் கீழ் வாழ்வோம். மெய்யாகவே, ஆண்டவர் ஒருபோதும் உறங்குவதில்லை; ஒருபோதும் உங்களைக் கைவிடுவதுமில்லை.

Prayer:
அன்புள்ள ஆண்டவரே, என்னை காக்கிறவராக இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் ஒருபோதும் உறங்காமலும் தூங்காமலும் இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இரவும் பகலும் என்மேல் கண்ணோக்கமாயிருப்பதற்காக நன்றி. உம் சமுகம் எப்போதும் இருக்கும் என்ற வாக்குக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் வசனத்தை முழுவதுமாக விசுவாசிக்க எனக்கு உதவும். உம்முடைய தீர்க்கதரிசன வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும். சத்துருவின் சகல தாக்குதலுக்கும் என்னை மூடி காத்தருளும். சோதனைகளிலிருந்தும் பயத்திலிருந்தும் என்னை பாதுகாத்துக்கொள்ளும். தினமும் உம்முடைய பரிபூரண சித்தத்தில் என்னை வழிநடத்தும். உம்மிடம் என்னையே ஒப்படைக்கிறேன்; என்னை ஆசீர்வதிக்கவேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.