பிரியமானவர்களே, இன்றைக்கான ஆசீர்வாதம், "வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்" (ஏசாயா 59:19) என்ற வசனத்திலிருந்து வருகிறது. சத்துரு தாக்கும்போது, அவன் திடீரென வருகிறான்; பலமாய் வருகிறான்; எப்பக்கமும் நம்மை உபத்திரவங்கள் சூழ்ந்துகொள்கின்றன. சிலவேளைகளில் நசுக்கப்பட்டதுபோல், உதவியற்ற நிலையில் இருப்பதுபோல், மடங்கடிக்கப்பட்டதுபோல் உணரலாம். சத்துரு வெள்ளம்போல வரும் தருணத்தில் தேவன் இடைப்படுவார் என்பதை மறந்துபோகாதிருங்கள். வேதம், "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்" (சங்கீதம் 34:19) என்று சொல்லுகிறது. மீண்டும் மீண்டும் நசுக்கப்பட்ட யோபு, "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10) என்று கூறியதுபோல, தேவன் உங்களை ஸ்திரமானவராகவும் சுத்தமானவராகவும் வெளியே கொண்டு வருவார். சத்துரு உங்களை பலமாய் நசுக்கலாம். ஆனால், ஆண்டவர் உங்களை ஒருபோதும் அழிந்துபோகும்படி விடமாட்டார்.

அப்போஸ்தலனாகிய பவுல், "நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை" (2 கொரிந்தியர் 4:8) என்று கூறுகிறான். தேவன், சில உபத்திரவங்களை நம்மை அழிப்பதற்காக அல்ல; தமது பெலத்தையும் மகிமையையும் நம் மூலமாக வெளிப்படுத்துவதற்காகவே கொடுக்கிறார். ஒவ்வொரு முறை சிரமங்கள், கடினமான சூழல்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்போது, "ஏன் மறுபடியும் மறுபடியும் எனக்கு இப்படி நடக்கிறது?" என்று வியக்கிறோம். அது, தேவன் செயல்பட ஆயத்தமாகிறார் என்பதற்கு அடையாளம். அவருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள்; உங்கள் இருதயத்தை அவரது சித்தத்திற்கு ஒப்புக்கொடுங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்போது கர்த்தரின் ஆவியானவர், உங்களுக்கு மேலாக பலமான கொடிபோல எழும்புவார். உங்கள் வாழ்க்கைக்கு மேலாக கொடியேற்றுவார். இந்தக் கொடி, அவரது அன்பையும், பாதுகாப்பையும், அதிகாரத்தையும் குறிக்கிறது. அந்தக் கொடியை சத்துரு பார்க்கும்போது, வெட்கப்பட்டு ஓடிப்போவான். தேவன் நம் பட்சத்தில் இருக்கும்போது நமக்கு விரோதமாயிருப்பது யார்? என்பதை மறந்துபோகாதிருங்கள் (ரோமர் 8:31). நீங்கள் முற்றுகையிடப்பட்டதுபோல உணரும்போது, "கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?" (சங்கீதம் 118:6) என்று விசுவாசத்தோடு சொல்லுங்கள்.

தேவ பிள்ளையே, பயப்படாதிருங்கள். ஆண்டவர் உங்களை பெலப்படுத்தி, தம் நீதியின் வலக்கரத்தினால் தாங்குவார் (ஏசாயா 41:10). நீங்கள் விடாய்த்துப்போய் பெலவீனமாகும்போது, கர்த்தரின் ஆவியானவர் உங்களைப் பெலப்படுத்துவார். பிறர் உங்களைக் கீழே தள்ள முயற்சிக்கும்போது, தேவன் உங்களை எழுப்புவார். சத்துரு உங்களை நசுக்க முயற்சிக்கலாம்; ஆனால் கர்த்தர் உங்கள் தலையை உயர்த்தி நடக்கப்பண்ணுவார். அவர் உங்களுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிப்பார். அவர் தமது நேசக் கொடியை உங்கள் வீட்டின்மேல், உங்கள் ஆரோக்கியத்தின்மேல், உங்கள் எதிர்காலத்தின்மேல் ஏற்றுவார். அவரை நம்புங்கள். பழைய நாட்களில் முறிந்தவற்றை குணமாக்கிய, ஒடுக்கப்பட்டோரை விடுவித்த அதே ஆவியானவர் இன்று உங்கள் வாழ்க்கையில் அசைவாடுவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை விடுவிக்கிறவராக இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். சத்துரு வெள்ளம்போல வரும்போது, நீர் உம்முடைய கொடியை என்மேல் ஏற்றுகிறீர். சரீரத்தில், மனதில், ஆவியில் நான் பெலவீனப்படும்போது என்னைப் பெலப்படுத்தும். பயம், வியாதி, ஒடுக்குதலிலிருந்து என்னை விடுவித்தருளும். இருளின் எல்லா அதிகாரமும் பில்லிசூனியமும் இயேசுவின் நாமத்தில் உடைக்கப்படட்டும். என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிறைத்து அன்பினால் மூடும். என்னுடைய குடும்பத்தின்மேல் வெற்றிக்கொடியை ஏற்றுவீராக. என்னுடைய துக்கத்தை சந்தோஷமாகவும் தோல்வியை வெற்றியாகவும் மாற்றும். என் வாழ்க்கை மூலமாக உம் நாமம் மகிமைப்படட்டும். எல்லா கட்டுகளிலிருந்தும் என்னை விடுவித்து உம்முடைய சமாதானத்தினாலும் பெலனாலும் நிரப்பியருளும். இன்றைக்கு எனக்கு விடுதலையையும் வெற்றியையும் அருளிச்செய்வதற்காக ஸ்தோத்திரித்து இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.