அன்பானவர்களே, இன்று, "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" (எரேமியா 29:11) என்ற வசனத்தைத் தியானிப்போம். தேவன் நம்மை ஆசீர்வதிக்கவே எப்போதும் எண்ணுகிறார். அவரது யோசனைகள், நினைக்காதவையாகவோ, நிலையற்றவையாகவோ ஒருபோதும் இருப்பதில்லை; மாறாக, நமக்கு நன்மையுண்டாகும்படி கவனமாக உருவாக்கப்பட்டவையாக உள்ளன. "அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்" (ஏசாயா 28:29) என்று வேதம் கூறுகிறது. மனுஷன் கணக்கற்ற யோசனைகளை செய்யலாம்; ஆனால், தேவனின் யோசனையே முடிவில் நிலை நிற்கும்.

தேவன், இஸ்ரவேலின் ராஜாவான தாவீதுக்காக நேர்த்தியானவற்றை நியமித்தபோது, எதிர்ப்பு எழுந்தது. எல்லோரும் அவன்மேல் பொறாமை கொண்டார்கள்; அவனுக்கு விரோதமாக தீங்கானவற்றை யோசித்தார்கள். ஆகவேதான் தாவீது, "அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்" (சங்கீதம் 140:2) என்று கூறினான். அடுத்த வசனத்திலேயே, "சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது" என்று புலம்புகிறான். இக்கட்டான நிலையில் தாவீது தேவனை நோக்கி, "கர்த்தாவே, என்னை துன்மார்க்கரின் கைக்கு விலக்கிக் காத்தருளும்," என்று ஜெபிக்கிறான். தேவன் மிக நல்லவர்; அவரது யோசனைகள் எப்போதும் நன்மையானவை. மாறாக, மனுஷருடைய யோசனைகள் எப்போதும் தீமைக்கேதுவானவையாக இருக்கின்றன. ஆகவேதான் தேவன், "என் நினைவுகள் தீமைக்கல்ல; நன்மைக்கேதுவானவைகளே," என்று மறுபடியும் உறுதியாகக் கூறுகிறார். இக்கட்டான வேளைகளில் தேவனுடைய பூரணமான யோசனையைக் காண்பதற்கு நாம் திணறலாம்; முறையிடலாம்; புலம்பலாம்; சிலவேளைகளில் எதிர்காலத்தை அறிந்துகொள்ள முடியாமல் தேவனையே கேள்வி கேட்கலாம். எப்படியாயினும் தேவனுடைய யோசனைகள் எப்போதும் நன்மையாகவே உள்ளன. அவர் எல்லாவற்றையும் நம் நன்மைக்கேதுவாகவே ஞானமாய் செயல்படுத்துகிறார். நம்முடைய நடைகள் குழப்பமானவையாய், நிச்சயமற்றவையாய் தோன்றினாலும், தேவன் ஏற்ற பாதையில் நம்மை வழிநடத்துகிறார் என்று நம்பலாம்.

எங்கள் மகள் ஷேரன் பல்கலைக்கழகத்தில் சேரும்போது நடந்தது இதற்கு உதாரணமாகும். பெரிய சுவர் ஒன்றில் அவள், "உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" என்ற வசனம் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தாள். அவள் மிகவும் தைரியமடைந்து, "கர்த்தர் என்னைப் பற்றியும் நினைக்கிறார்" என்று கூறினாள்.

பிரியமானவர்களே, பலவேளைகளில் மக்கள் நம்மை மிதித்துக் கடந்துபோகலாம். தேவன், தீயையும் தண்ணீரையும் கடந்துபோக அனுமதிக்கலாம். ஆனால், வேதம், "செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்" (சங்கீதம் 66:12) என்று கூறுகிறது. இன்று நீங்கள், நான் பொருட்படுத்தக்கூடியவள்(ன்) அல்ல என்று எண்ணலாம். திடன்கொள்ளுங்கள். நேர்த்தியான எதிர்காலத்தை உங்களுக்கென தேவன் வைத்திருக்கிறார். நிச்சயமாகவே நம்பிக்கை உண்டு; உங்கள் நம்பிக்கை வீண்போகாது. பிரியமானவர்களே, சந்தோஷமாயிருங்கள். கர்த்தர் எப்போதும் உங்களை நினைத்திருக்கிறார்.

ஜெபம்:
பரம தகப்பனே, எனக்காக நீர் வைத்துள்ள ஆச்சரியமான யோசனைகளுக்காக, அவை எனக்கு தீமைக்கானவையாக அல்லாமல், செழிப்புக்கானவையாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் ஞானத்தின் தேவன். உம் யோசனைகள் அனைத்தும் பரிபூரணமானவையாயும், நிச்சயமாய் ஜெயத்தை தருகிறவையுமாய் இருக்கும். பிறர் எனக்கு விரோதமாக எழும்பினாலும், நீர் எனக்கு அடைக்கலமாயும், துன்மார்க்கரின் கைகளுக்கு விலக்கிக் காக்கிறவராயும் இருந்தருளும். நிச்சயமற்ற தருணங்களில், என் நடைகளை நீர் சரியான பாதையில் வழிகாட்டுகிறீர் என்பதை மறவாதிருக்க எனக்கு உதவும். என்னால் எதிர்காலத்தை காண இயலாவிட்டாலும், எல்லாவற்றையும் என் நன்மைக்காகவே செய்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். அக்கினியின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் என்னை நடத்தி, பரிபூரணமான இடத்திற்கு என்னை கொண்டு வந்து சேர்ப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்று நான் எங்கே இருந்தாலும் நீர் நேர்த்தியான எதிர்காலத்தை எனக்காக ஆயத்தம் செய்திருக்கிறீர் என்பதை அறிந்து களிகூருகிறேன். நீர் எப்போதும் என்மேல் நினைவாயிருப்பதற்காகவும், உம் யோசனைகள் ஒருபோதும் தோற்றுப்போவதில்லை என்பதாலும் சகல மகிமையையும் துதியையும் உமக்கே செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.