எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு நமக்கு, "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்" (யோவான் 14:14) என்ற வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேதத்தில், சிம்சோனின் தகப்பன், தேவ தூதன் ஒருவனுடன் பேசுவதை நாம் காணலாம். அவன், "உம்முடைய நாமம் என்ன?" என்று கேட்கிறான். கர்த்தருடைய தூதன், "என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம்" என்று கூறுகிறான் (நியாயாதிபதிகள் 13:17,18). அது தேவ தூதன் அல்ல; தேவன்தாமே தூதனின் ரூபத்தில் அவனை தைரியப்படுத்தினார்.
அவ்வண்ணமே, தேவன் மோசேயுடனும் பேசினார். தாம், ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் இப்போது மோசேக்கும் சர்வவல்லமையுள்ள தேவனாக, யேகோவாவாக தரிசனமானதாக கூறுகிறார் (யாத்திராகமம் 6:3). அவர்கள், அவரை முகமுகமாய் தரிசித்தார்கள். ஆம், அவர் சர்வவல்லமையுள்ள தேவன்; நீங்களும் தேவ பிரசன்னத்தினால் நிரப்பப்படும்போது, அவரை தனிப்பட்ட முறையில் அனுபவித்து அறியலாம்; காணலாம். வாழ்வின் நான் பலமுறை மனந்தளரும்போது, உள்ளத்தில் சோர்ந்துபோகும்போது, நம்பிக்கை இழக்கும்போது, தேவ பிரசன்னத்தை உணர்ந்திருக்கிறேன். அவர் எனக்கு தோன்றி, சிலவேளைகளில் தேவ தூதன்போலவும், சிலவேளைகளில் வேறு ரூபங்களிலும் தோன்றி என்னை தைரியப்படுத்துவார்; தாம் எப்போதும் என்னோடு இருப்பதை நினைவுப்படுத்துவார்.
ஆம், அன்பானவர்களே, ஆண்டவர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். "எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது" (சங்கீதம் 8:1) என்று தாவீது அறிக்கையிடுகிறான். "கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்" (நீதிமொழிகள் 18:10) என்றும் வேதம் கூறுகிறது. ஆம், அன்பானவர்களே, இந்த 86 வருடங்களும் ஆண்டவர் என்னோடு இருந்து வருகிறார். நான் அவருடைய பிரசன்னத்தை பார்த்திருக்கிறேன்; உணர்ந்திருக்கிறேன்; அவர் என்னுடன், குறிப்பாக நான் முற்றிலும் நம்பிக்கை இழந்துபோன நேரங்களில், பேசியிருக்கிறார். ஆகவேதான், நான் எப்போதும் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கிறேன். அவருடைய ஆசீர்வாதங்கள் அனைத்தையும் நான் பெற்றிருக்கிறேன். அவ்வாறே நீங்களும் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறலாம். எந்த மனுஷனையும் மனுஷியையும் பாராதிருங்கள். தேவனையே பற்றிக்கொள்ளுங்கள்; அவருடைய நாமம் அதிசயம்!
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய நாமத்தில் நான் கேட்டுக்கொள்கிறவை எல்லாவற்றையும் செய்வதாக நீர் வாக்குக்கொடுத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய நாமம் அதிசயமானவர்; அந்த நாமம் வல்லமையும் மகிமையும் நிறைந்தது. சிம்சோனின் தகப்பனுக்கும் மோசேக்கும் நீர் உம்மை வெளிப்படுத்தியதுபோல, எனக்கு உம்மை வெளிப்படுத்தி, உம்முடைய பரிசுத்த பிரசன்னத்தினால் என்னை நிரப்பும். நான் உம்மை முகத்துக்கு முகம் நேராக தரிசிக்கட்டும். நீரே எனக்கு பலத்த துருகம்; நான் உமக்குள் ஓடி வந்து பாதுகாப்பையும் பெலனையும் கண்டுகொள்வேன். மற்றவர்களை சார்ந்திருப்பதை நான் விட்டு, உம்மை மாத்திரமே பற்றிக்கொள்ள எனக்கு கற்பித்தருளும். என் வாழ்க்கையின் மூலமாக உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.