"சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்" (மத்தேயு 5:9). இதுதான் தேவன் உங்களுக்கு அளிக்கும் வாக்குத்தத்தம். வேதாகமம், "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே" (எபிரெயர் 12:14) என்றும் சொல்லுகிறது. அன்பானவர்களே, எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருப்பதே பரிசுத்தம் என நம்புகிறேன். "தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்" (1 யோவான் 3:15) என்று கூறுகிறது. ஆகவே, எல்லா சகோதரரோடும் சகோதரிகளோடும் சமாதானமாயிருக்கும் ஒருவரே பரிசுத்தமாயிருக்க முடியும். அப்படிப்பட்டவர் தேவனை தரிசிப்பார். அதைத்தான் இயேசு, "சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்று கூறுகிறார். ஆனால், இந்த சமாதானம் எங்கே ஆரம்பிக்கிறது? முதலாவது, உங்கள் இருதயத்தில் தேவனுடன் சமாதானம் பண்ணிக்கொள்ளுங்கள். அப்போதுதான் எல்லா மனுஷரோடும் சமாதானம் பண்ணக்கூடிய வல்லமை உங்களுக்குக் கிடைக்கும். அதன்பிறகு, நீங்கள் மனுஷர்களுக்கு மத்தியில் சமாதானம் பண்ண தொடங்குவீர்கள். அப்படிப்பட்ட மனுஷன் தேவனுடைய புத்திரன் என்னப்படுவார்.

அன்பானவர்களே, உங்களை அப்படி மெய்யான தேவனுடைய பிள்ளையாக, தேவனுடைய பரிசுத்தம் நிறைந்தவர்களாக, தேவனை பார்க்கும் கிருபை கொண்டவர்களாக மாற்ற தேவன் விரும்புகிறார். உங்கள் இருதயத்தில் தேவனுடன் சமாதானமாயிருக்கும்போது, எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருக்கும்போது, மற்றவர்களுக்கிடையே நீங்கள் சமாதானம் பண்ணும்போது இந்த ஆசீர்வாதத்தை உங்களுக்குத் தர ஆண்டவர் விரும்புகிறார்.

ஒரு சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சென்னை, எண்ணூரை சேர்ந்த செல்வி என்ற சகோதரியிடம் ஒருவர் இவ்வளவு பணம் முதலீடு செய்தால் இவ்வளவு கிடைக்கும் என்று கூறியுள்ளார். அவர்கள் அவரை நம்பி தன் பணத்தை போட்டுள்ளார்கள். அவர்கள் முதல் மாதம் பணம் கொடுத்துள்ளார்கள்; இரண்டாவது மாதத்திலிருந்து பணத்தை நிறுத்திவிட்டார்கள். தாமதமாகியதும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அவர்கள் கடன் வாங்கியவர்கள், அவர்களுக்கு விரோதமாக வர தொடங்கினார்கள். இந்த நிலையைக் கண்டு அவர்கள் கணவர் குடிக்கத் தொடங்கினார். குடும்பத்தில் சமாதானமே இல்லை. அவர்களால் உறங்க முடியவில்லை. எல்லாவற்றையும் இழந்ததுபோல் உணர்ந்தார்கள்; பிள்ளைகளோடும் போராட்டம் காணப்பட்டது.

அப்போதுதான் அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு வந்தார்கள். எல்லா கூட்டங்களிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். தேவ சமாதானம் அவர்கள் இருதயங்களுள் வந்தது; இயேசுவின் பிறப்பைக் குறித்து பெரிய நம்பிக்கை எழுந்தது. சொத்தை விற்று கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திரும்ப கொடுத்தார்கள். இன்று, அவர்கள் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார். பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருக்கிறார்கள்; அவர்களுக்குத் திருமணமாகியிருக்கிறது. இயேசு அழைக்கிறார் குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் பங்காளராக இருக்கிறார்கள். தேவன், அவர்கள் வாழ்க்கையை சமாதானமாய் கட்டியெழுப்பியிருக்கிறார். அன்பானவர்களே, தேவன் உங்கள் வாழ்க்கையையும் நிலைப்படுத்துவார். எவ்வளவு பணம் திரும்ப செலுத்த வேண்டியதிருக்கிறதோ, அதை செலுத்தும்படியான கிருபையை தேவன் தருவார். உங்களை ஒருவர் குற்றஞ்சாட்ட முடியாது. மெய்யாகவே, நீங்கள் தேவனால் பராமரிக்கப்படும் அவருடைய பிள்ளை என்று அழைக்கப்படுவீர்கள். தேவன் அந்தவிதமாய் உங்கள் ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, சமாதானம்பண்ணுகிறவர்கள் உம்முடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள் என்ற அன்பின் நிச்சயத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நான் பெயரளவில் மட்டுமல்ல; ஆவியிலும் சத்தியத்திலும் உம்முடைய பிள்ளையாக இருக்க வாஞ்சிக்கிறேன். தயவாய் உம்முடைய சமாதானத்தினால் என் இருதயத்தை நிரப்பும். முதலாவது உம்முடன் நான் சமாதானம்பண்ணிக்கொள்ளும்படி செய்யும்; பிறகு அந்த சமாதானத்தை என்னுடைய உறவுகளுக்கு எடுத்துச்செல்ல உதவும். மன்னிப்பதற்கு எனக்கு பெலனை தாரும்; சீர்ப்படுத்துவதற்கான தாழ்மையை, மக்களிடையே பாலமாக இருப்பதற்கான தைரியத்தை தாரும். உம்முடைய பரிசுத்தத்தில் தினமும் நடக்கவும், எங்கெங்கு பிரிவினை இருக்கிறதோ அங்கெல்லாம் சமாதானம் பண்ணவும் எனக்கு உதவும். உம்முடைய ஆசீர்வாதத்தை இன்றைக்கு பெற்றுக்கொண்டு, உம்முடைய சமாதானத்தின் பாத்திரமாக என்னை உருவாக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.