அன்பானவர்களே, "எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்" (நீதிமொழிகள் 1:33) என்று வேதம் கூறுகிறது. முதலாவது, தமக்குச் செவிகொடுப்பதையே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். பெற்றோராக நாம், நம்முடைய பிள்ளைகள் சொல்லுவதை கேட்கவேண்டும் என்று எவ்வளவு எதிர்பார்க்கிறோம்! நாம் சொல்வதில் ஒன்றை அவர்கள் அலட்சியம் செய்தாலும்  ஏமாற்றமடைகிறோம். ஆகவேதான் வேதம், தேவனுக்குச் செவிகொடுப்பவர்கள் விக்கினமின்றி வாசம்பண்ணுவார்கள்; பயப்படாமல் அமைதியாய் இருப்பார்கள் என்று கூறுகிறது. ஆனால் முந்தைய வசனம், "பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்" என்று நம்மை எச்சரிக்கிறது. "எருசலேமியராகிய இந்த ஜனம் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள்" (எரேமியா 8:5) என்று கர்த்தர் துக்கிக்கிறார். அவர்கள் கபடத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறார்கள்; தங்கள் பாதையை மாற்ற மறுக்கிறார்கள். அவருடைய சத்தத்தைக் கேட்காமல், அவருடைய அழைப்பை நிராகரித்து, தங்கள் மனச்சாட்சியின் எச்சரிக்கைக்கு மௌனமாயிருப்பதால்தான் தேவன் அவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள் என்று கூறுகிறார்.

தாங்கள் தவறாய் நடக்கிறபடியால் அவர்கள் தேவனுக்குச் செவிகொடுக்க விருப்பப்படவில்லை. தேவனுடைய வழிக்குப் பதிலாக தங்கள் சொந்த வழியில் செல்ல விரும்புகிறார்கள். நாங்கள் வெளிநாடு ஒன்றுக்குச் சென்றிருந்தபோது, மக்கள் தங்கள் டி-ஷர்ட்டுகளில் எழுதியிருந்த வாசகங்களைப் பார்த்து மனமுடைந்துபோனேன். ஒருவர், "கடவுள் இல்லை" என்ற வாசகத்தை அணிந்திருந்தார். இன்னொரு இளைஞன்,"இயேசு" என்று எழுதி அதன்மேல் பெருக்கல் குறியிட்டு அடிப்பதுபோல் அணிந்திருந்தான். அதைப் பார்த்தபோது எங்கள் உள்ளங்கள் பாரப்பட்டன. அவர்கள் தங்கள் சொந்த வழியினை தெரிந்துகொண்டு தேவனுடைய வழியை புறக்கணித்திருக்கிறார்கள். ஆனால், வேதம், செவிகொடுக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான் என்று சொல்கிறது. இயேசு, "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது" (யோவான் 10:27) என்று கூறுகிறார். தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பது அவரைக் குறித்து ஆழமாக அறிந்துகொள்ள உதவுகிறது. "கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்." செவிகொடுப்பது எப்போதாவது நடப்பதல்ல. அனுதினமும் தேவனுக்கு செவிகொடுப்பதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். உபத்திரவ காலத்திலும் அவர் தமது வசனத்தின் மூலம் நம்மோடு பேசுவதால் அவருடைய சமுகத்தில் நமக்கு சமாதானம் உண்டு.

நாம் செவிகொடுக்கும்போது, எல்லாம் நமக்கு நன்றாய் அமையும். "உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்" (ஏசாயா 3:10) என்று வேதம் கூறுகிறது. அவருக்காக செய்த அன்பின் பிரயாசங்களை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல. நாம் அவருக்குச் செவிகொடுக்கும்போது, "இவை என் ஆடுகள். நான் இவற்றின்மேல் பிரியமாயிருக்கிறேன்," என்கிறார். "துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங்கீதம் 1:1,2) என்று வேதம் கூறுகிறது. தேவனுக்குச் செவிகொடுத்து கீழ்ப்படிவதால் இந்த ஆசீர்வாதம் கிடைக்கிறது. அவர் பாதுகாப்பை, சமாதானத்தை, செழிப்பை வாக்குப்பண்ணுகிறார். "எனக்குச் செவிகொடுக்கிறவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்." ஆகவே, தேவனிடம் உங்களை ஒப்படையுங்கள். தினமும் அவரது வார்த்தையை கவனமாய் கேட்பதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். மற்ற சத்தங்களை கேட்டு வழி விலகிப்போகாதிருங்கள். அவருக்குச் செவிகொடுங்கள்; அப்போது ஆபத்துக்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என்னோடு பேசி, நீதியான பாதைகளில் நடத்துவதற்கு வாஞ்சிக்கிற தேவனாயிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் என் காதுகளை, இருதயத்தை, வாழ்க்கையை உம்மிடம் ஒப்படைக்கிறேன். வழிவிலகச் செய்யும் எல்லா சத்தங்களுக்கும் செவிகொடாமல், உமக்கே அனுதினமும் செவிகொடுக்கும்படி என் ஆவியை வழிநடத்தும். உம்முடைய சத்தத்தை அறிந்து, சந்தோஷமாய் உம்மை பின்பற்றுகிற ஆடுகளுள் ஒன்றாக நான் இருக்கும்படி செய்யும். ஆண்டவரே, நான் வழிவிலகிச் செல்லும்போது திரும்ப என்னை அழைத்தருளும். நான் சோர்ந்துபோகும்போது என் உள்ளத்தில் சமாதானத்தை உரைத்தருளும். உம்முடைய மறைவிடத்தில், உம்முடைய சமுகத்தில், ஆபத்துக்குப் பயப்படாமல் பாதுகாப்பாக தங்கும்படி, நடக்கும்படி அருள்புரியும். எல்லாவற்றுக்கும் மேலாக உம்முடைய சத்தத்திற்கு செவிகொடுப்பதையே தெரிந்துகொள்வேன் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.