அன்பானவர்களே, இன்றைக்கும், "தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்" (பிலிப்பியர் 2:13) என்ற வாக்குத்தத்தம் நமக்கு அருளப்பட்டுள்ளது. இவ்வுலகில் நாம் எதையாவது செய்ய நினைக்கும்போது, நமக்கு எது இன்பத்தைத் தரும் என்று யோசிப்போம். இதன் மூலமாக எனக்கு சந்தோஷமும் மகிழ்ச்சியும் கிடைக்குமா? என்று கேட்போம். இந்த காரியத்தைச் செய்வதால் ஜனங்களிடம் எனக்கு பெயருண்டாகுமா? நான் மகா உயரங்களை அடைவேனா என்று யோசிப்போம். நம்முடைய சொந்த இன்பத்தைக் குறித்தே யோசிப்பது இயல்பு; ஆனால், ஆண்டவர் நம் இருதயத்தை மாற்றும்படி அழைக்கிறார்.
நீங்கள் செய்வது தேவனுக்கு விருப்பமாயிருக்கிறதா என்று சிந்திக்க ஆரம்பிக்கும்போது, ஆண்டவருடைய போதனையின்படி வாழ்வீர்கள். இந்தப் பாதையில் நான் செல்வது ஆண்டவருக்குப் பிடிக்குமா? இதைச் செய்வது இயேசுவுக்கு விருப்பமா? என் வாழ்க்கையைக் குறித்து தேவ சித்தம் இதுவா என்று கேட்க ஆரம்பிக்கும்போது, உங்கள் சொந்த விருப்பத்திற்கு மேலாக ஆண்டவரின் பிரியத்தைத் தேடுவீர்கள். விசேஷமாக என் இளம் நண்பனே, உங்கள் வாழ்க்கையில் முடிவுகளை எடுக்கும்போது, வாழ்க்கையின் பாதையை தெரிவு செய்யும்போது, தேவனுக்கு பிரியமானதையே செய்வது அவசியம். ஆண்டவர்தாமே பிரியமாகி உங்களை ஆசீர்வதிப்பார்.
இதற்கான உதாரணத்தை வேதாகம காலத்தின் தொடக்கத்திலேயே பார்க்கிறோம். காயீன், ஆபேல் என்ற இரண்டு சகோதரர்கள் தங்கள் காணிக்கைகளை கர்த்தருக்குக் கொண்டு வந்தார்கள். காயீன், மண்ணில் உழைத்து தன்னுடைய கனிகள் சிலவற்றை காணிக்கையாக கொண்டு வந்தான். ஆபேல் தன்னுடைய மந்தையில் தலையீற்றுகளையும் கொழுத்தவற்றையும் கர்த்தருக்கு முன்பாக பலியிட்டான். அதற்கு பெரிய தியாகம் அவசியம். வேதம், கர்த்தர் ஆபேலின் காணிக்கையில் பிரியமாயிருந்தார்; காயீனின் காணிக்கையில் பிரியப்படவில்லை என்று கூறுகிறது. நீங்கள் மெய்யாகவே தேவனுக்குப் பிரியமானவற்றைச் செய்யும்போது, அவர் அதை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பார். இன்றைக்கு அப்படியான இருதயத்தை அவர் உங்களுக்குத் தருகிறார்; ஆகவே, சந்தோஷமாயிருங்கள்!
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்குப் பிரியமான காரியங்களைச் செய்யும்படி எனக்குள் கிரியை செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பல நேரங்களில் நான் என்னுடைய சொந்த விருப்பங்களை, என் வசதியை, என் சொந்த அங்கீகாரத்தையே தேடுகிறேன். ஆனால், இன்று எல்லாவற்றையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். எனக்குப் பிரியமானவற்றை விட, உமக்கு எவை பிரியமாயிருக்கும் என்பதை தேட எனக்குக் கற்றுத்தாரும். சிறந்தவற்றை உமக்குப் பலியாக கொடுக்கும்படி, உம்மை நேசிக்கும்படி, தியானிக்கும்படி ஆபேலின் இருதயத்தை எனக்குத் தந்தருளும். சுயத்திற்குரிய எல்லா இலக்குகளையும் என்னிலிருந்து அகற்றும்; உம்முடைய சித்தத்தை கனப்படுத்தும் வாஞ்சையை அருளும். என்னுடைய தெரிவுகள் அத்தனையும் உமக்கு மகிமையை கொண்டு வருவதாகவும், என் வாழ்க்கையைக் குறித்த உம்முடைய நோக்கத்திற்கு என்னை கிட்டிச்சேர்ப்பதாகவும் அமையட்டும். என் வாழ்க்கையும், வேலையும், என் இருதயமும் எப்போதும் உமக்குப் பிரியமானவையாக அமைவதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.