வேதம், "மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன்" (ஓசியா 11:4) என்றும், "தேவன் அன்பாகவே இருக்கிறார்" என்றும் கூறுகிறது (1 யோவான் 4:8). அவரில் அன்பு, அன்பு, இன்னும் அன்பு என்பதை தவிர எந்த மாறுதலுமில்லை. முதலாவதாக, அவர் மகா அன்பினால் உங்கள் தம்மோடு கட்டுகிறார். நாம் அவரது சரீரத்தின் அவயவங்களாக இருக்கும்படி, அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம் (எபேசியர் 5:23-30). அவர் நம்மை தம்மோடு ஒன்றாய் இணைக்கிறார். உலகத்தின் எந்த அருவருப்பும் உங்கள் தொட அவர் விரும்பவில்லை. இயேசு உங்களை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை அறிந்துகொள்வது பெரிய சந்தோஷம். நீங்கள் ஒருபோதும் அதைரியப்படாமல், எப்போதும் அவருடைய அன்புக்காக, அவரோடு உங்களை இணைப்பதற்காக துதியுங்கள். எந்த அருவருப்புக்கும் வஞ்சகத்திற்கும் இடங்கொடுக்காமல் தேவ கிருபையை கேளுங்கள்.

இரண்டாவதாக, "முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது" (பிரசங்கி 4:12) என்று வேதம் கூறுகிறது. கணவர், மனைவி மூன்றாவதாக இயேசு. அவர் குடும்பத்தை இணைக்கிறார். அவர் கணவரையும் மனைவியையும் அன்பின் கயிற்றால் தன்னோடு இணைக்கிறார். கணவரும் மனைவியும் தாங்களாகவே அழியாத அன்பு பாராட்ட முடியாது. ஆகவேதான், மெய்யான அன்பாகிய, தேவனாகிய இயேசுதாமே உள்ளே வருகிறார். அவர் கணவரையும் மனைவியையும் தம்முடைய அன்பினால் இணைந்து, குடும்பத்தையும் தன்னுடன் இணைத்துக்கொள்கிறார். ஆகவே, தேவன்தாமே குடும்பமாய் உங்களுக்கு அந்த கிருபையை தருவாராக. கணவர் - மனைவி உறவில் இயேசுவின் அன்பை அங்கீகரியுங்கள். இந்த கிருபை உங்கள்மேல் வரும்படி கரங்களை கோர்த்து இணைந்து ஜெபியுங்கள். நீங்கள் குடும்பமாக இயேசுவுடன் இணைந்திருப்பீர்கள்; அருவருப்புகள் எதுவும் உங்கள் குடும்ப வாழ்க்கைக்குள் வராது.

மூன்றாவதாக, "இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்" (சங்கீதம் 133:1,3) என்று வேதம் கூறுகிறது. அன்பானவர்களே, தேவன், உங்களையும் தம்முடைய மற்ற ஊழியர்களையும் மக்களுக்காக ஜெபிக்கும்படி இணைக்கிறார். தேவன், உங்கள் இருதயத்தை ஜெபத்தில் இணைக்கும்போது, உங்கள்மேலும் நீங்கள் ஜெபிக்கிற எல்லா காரியங்கள்மேலும் ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார். அதற்காகவே நாங்கள் ஜெப கோபுரத்திற்கு வந்து எஸ்தர் ஜெபக் குழுவில் இணைந்து மற்றவர்களுக்காக ஜெபிக்கும்படி உங்களை அழைக்கிறோம். தேவனுடைய மற்ற ஊழியர்களுடன் இணைந்து 15 நாட்கள் தேசத்திற்காக ஜெபிக்கும்படி டெல்லியிலுள்ள தேசிய ஜெப கோபுரத்திற்கு வாருங்கள். உலகமெங்குமுள்ள தேவனுடைய ஊழியர்களோடு இணைந்து உலக நாடுகளுக்காக ஜெபிக்கும்படி இஸ்ரேல் ஜெப கோபுரத்திற்கு வாருங்கள் அல்லது வீட்டிலிருந்தே இயேசு அழைக்கிறாரின் கணினி அமைப்புடன் உங்கள் லேப்டாப் அல்லது மேசை கணினியை இணைத்து ஜெபிக்கலாம். நீங்கள் ஜெப வீரர்களுடன் இணைந்து மற்றவர்களுக்காக, தேசத்திற்காக, உலகத்திற்காக ஜெபிக்கும்போது, தேவன் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய நித்திய அன்பின் கயிறுகளால் என்னை கட்டுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னை இயேசுவின் எலும்போடு எலும்பாக, மாம்சத்தோடு மாம்சமாக, ஆவியோடு ஆவியாக இணைப்பதற்காக நன்றி. ஆண்டவரே, உலகத்தின் எந்த அருவருப்பும் என்னையும் என் குடும்பத்தையும் தொடாதிருப்பதாக. ஆண்டவரே, உம்மை என் குடும்ப வாழ்வின் மையமாகக் கொண்ட, ஒருபோதும் அறுபடாத அன்பின் முப்புரி நூலால் ஆசீர்வதித்தருளும். மற்ற விசுவாசிகளோடு இணைந்து ஜெபிக்கும் கிருபையை, கிறிஸ்துவின் சரீரத்தின் ஐக்கியத்திற்காக வேண்டுகிறேன். மற்றவர்களுக்காக, எங்கள் தேசத்திற்காக பரிந்துபேச, கைகளை இணைக்கும்போது உம்முடைய சமுகத்திலிருந்து ஆசீர்வாதங்கள் என் வாழ்க்கைக்குள் பாய்ந்து வருவதாக. உம்மோடு என்னை சேர்த்திடும்; நான் செய்கிற எல்லாவற்றிலும் உம்முடைய ஆசீர்வாதத்தை கட்டளையிடவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.