அன்பானவர்களே, இன்றைக்கு ஆண்டவரிடமிருந்து பலத்த காரியத்தை எதிர்பாருங்கள். தேவன், உங்களை அற்புதங்களுக்குள் நடத்துவார். அவ்வாறுதான் அவர் உங்களை ஆற்றுவார்; உங்களோடு பேசுவார்; தம்மை காண்பிப்பார். "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்" (ஏசாயா 60:22) என்று வேதம் வாக்குக்கொடுக்கிறது. இன்றைக்கு நீங்கள் இருக்குமிடத்தில் சின்னவனாக உங்களை உணரலாம். வெளியே வந்து உங்களை மக்களுக்குக் காண்பிக்க கூச்சப்படலாம். நீங்கள் அனுபவித்த வெட்கத்தை எண்ணி பயப்படலாம். நம்பிக்கையை இழந்திருக்கலாம். யாராவது உங்களை கேலி செய்திருக்கலாம்; மக்கள் உங்களை அச்சுறுத்தியிருக்கலாம்; ஆகவே, நீங்கள் மறைந்திருக்கலாம். மற்றவர்கள் உங்களை குறைவாக மதிப்பிட்டு, 'உங்களுக்குக் காண்பிக்க எதுவுமேயில்லை' என்றிருக்கலாம். ஆமாம், இன்றைக்கு நீங்கள் சின்னவனாக, சிறியவனாக இருக்கலாம்; ஆனால், ஆண்டவர் உங்களை தெரிந்துகொண்டிருக்கிறார். அவர், ஆயிரமாக்குவதற்காக, தம்மால் என்ன செய்ய முடியும் என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட தம் வல்லமையை காண்பிப்பதற்காக உங்களை தெரிந்துகொண்டிருக்கலாம்.
தேவன், ஏற்கனவே ஆயிரங்களாக இருப்பவரை ஆசீர்வதிக்க தெரிந்துகொண்டால் உலகம் ஆச்சரியப்படாது. ஆனால், அவர் சிறியவனாக, கவனிக்கப்படாத நிலையில், குறைவாக மதிப்பிட்டப்பட்ட ஒருவரை எழுப்பினால்தான் உலகம் அவரது மகிமையை காணும். ஒரு சிறுபையன், இயேசு என்ன பேசுகிறாரென்று கேட்பதற்காக மலைக்கு வந்திருந்தான். இயேசு, "இங்கே என் பிரசங்கத்தை கேட்பதற்காக வந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கொடுக்க உணவு ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டபோது, இந்த சிறுபையன் தான் கொண்டு வந்திருந்த சில அப்பங்களையும் மீன்களையும் கொடுத்தான். அன்றைக்கு என்ன நடந்தது? இயேசு அவற்றைப் பெற்றுக்கொண்டு, ஆசீர்வதித்தார்; அவர் மூலமாக ஒரு அற்புதம் நடந்தது. அவன் கொடுத்த சிறுகாணிக்கை அவனை மட்டுமல்ல; ஆயிரக்கணக்கானோரை போஷிக்கும்படி இயேசு அவற்றை பெருகப்பண்ணினார். அன்றைக்கு, இயேசு அந்தப் பையனை பயன்படுத்தியதை அறிந்து மக்கள் அவனை பாராட்டியிருப்பார்கள்.
ஆண்டவர், இப்படித்தான் நம் வாழ்க்கையிலும் கிரியை செய்கிறார். ஆகவே, சின்னவனாக இருப்பதை எண்ணி இன்றைக்கு வருத்தப்படாதீர்கள். ஆண்டவர் உங்கள் வாழ்க்கை மூலமாக அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்யும்போது, நீங்கள் ஆயிரமாகக் காணப்படுவீர்கள். இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரிப்பீர்களா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்றைக்கு நான் இருக்கிறவிதமாகவே, சின்னவனாக, உடைக்கப்பட்டவனாக, பயந்தவனாக உம் முன்னே வருகிறேன். ஆனால், உம் வார்த்தை, 'சின்னவன் ஆயிரமாவான்' என்று சொல்லுகிறது. இந்த வாக்குத்தத்தம் எனக்கானது என்று நம்புகிறேன். இப்போது நான் மறைந்திருப்பதாக உணர்ந்தாலும், ஆண்டவரே நீர் என்னை காண்கிறீர். நான் தகுதியற்றவனா(ளா)க உணர்ந்தாலும், நீர் என்னை தெரிந்துகொண்டிருக்கிறீர். ஆண்டவரே, என்னிடம் இருக்கும் கொஞ்சமானதை, என் தாலந்துகளை, என் குரலை, என் இருதயத்தை உம்முடைய மகிமைக்காக பன்மடங்காய் பெருகப்பண்ணும். அந்தச் சிறுபையன் கொண்டு வந்திருந்த உணவை ஆயிரக்கணக்கானோரை போஷிக்க பயன்படுத்தியதுபோல, என்னையும் அற்புதத்தின் பாத்திரமாக பயன்படுத்தும். அவமானத்தால் அல்லது பயத்தால் சுருங்கிப்போகாமல், உம்முடைய அன்பினால், உயர்ந்த அழைப்பினால் தைரியமாக நடக்க எனக்கு உதவி செய்யும். இன்றைக்கு அற்புதங்களின் நாளாக, சின்னவனாகிய என்னை பரிபூரணனாக மாற்றும் நாளாக அமையட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.