"இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6)'எனக்கு எந்த வழியுமே இல்லை' என்று நாம் சொல்லும்போது, இயேசு, நானே வழி என்று கூறுகிறார். ஒருநாள், பெரிய கூட்டமாக மக்கள் புதிய நாட்டுக்குள் உள்ள காட்டுக்குள் சென்றனர். அப்போது ஜிபிஎஸ் அறிமுகமாகவில்லை. ஒரு சிறுபையனை கண்டுபிடித்தனர். அவனுக்கு அந்த இடம் நன்கு தெரிந்திருந்தது. அந்தக் கிராம மக்கள், "இவனை அழைத்துச் செல்லுங்கள். இவன் பாதை காட்டுவான்," என்றனர். அவன், பள்ளத்தாக்குகள், மலைகள், காடுகள் வழியாகவும் இங்கே பாதை இருக்காது என்று தோன்றும் இடங்கள் வழியாகவும் அழைத்துச் சென்றான். வெகுதொலைவு அவர்கள் பயணித்த பிறகு, அந்தக் கூட்டத்தின் தலைவர், "ஏய், குட்டிப் பயலே, உண்மையிலேயே உனக்கு வழி தெரியுமா? பாதை எங்கே இருக்கிறது? நாம் பல மைல் தூரம் வந்துவிட்டோம். ஆனாலும், செல்லவேண்டிய இடத்தை அடையவில்லையே?" என்று கேட்டார். அந்தச் சிறுவன், உடனடியாக, "என்னைப் பாருங்கள். நானே உங்களுக்கு வழி. என்னைப் பின்பற்றி வாருங்கள்," என்று கூறினான்.

ஆனால், நமக்கு வழியான இறைவன் நம்மோடு இருக்கிறார். அவர், தம்மைத்தாமே சிலுவையில் அறையப்பட, பலியாக ஒப்படைத்தார். இன்றைக்கு நீங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கும்போது, உங்கள் பிரார்த்தனைகள் பரலோகத்தை எட்டுகின்றன; பதில் கிடைக்கிறது. பயப்படாதிருங்கள். தம் நாமத்தினால் நீங்கள் எதைக்கேட்டாலும் தாம் அதைச் செய்வதாக அவர் கூறியிருக்கிறார். நீங்கள் இதுவரையிலும் எதையும் கேட்கவில்லை. நீங்கள் பெற்றுக்கொள்ளும்படியும் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படியும் கேளுங்கள். தேவன், உங்களுக்குப் பரிபூரண சந்தோஷத்தை கொடுக்க விரும்புகிறார். அவர், நானே வழி. வேறு வழியில்லை என்று கூறுகிறார். இயேசு உங்களுடன் இருக்கிறார். அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரை ஸ்தோத்திரியுங்கள். அவருடைய தியாகத்திற்காக நன்றி செலுத்துங்கள். உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய அவரை கனம்பண்ணுங்கள். அப்போது நீங்கள் பிழைப்பீர்கள். அவர், நானே ஜீவனாயிருக்கிறேன் என்கிறார். நீங்கள் இயேசுவினால் பிழைப்பீர்கள்.

ஓர் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். சகோதரி தனபாக்கியமும் சகோதரர் ராஜரத்தினம் தம்பதியருக்கு இரண்டு பையன்கள். அவர்கள் புத்தாண்டு ஆராதனைக்குப் புறப்பட்டனர். மனைவியும் இரண்டு மகன்களும் ஆராதனைக்கு சென்றனர். சகோதரர் ராஜரத்தினம் பின்னரும் தங்கியிருந்தார். அப்போது ஆண்டவர் அவருடன் பேசினார். "நீ எனக்காக எதைச் செய்தாய்? இயேசுவாகிய நான் உனக்காக எல்லாவற்றையும் செய்திருக்கிறேன்." அப்போதுதான் அவர் பேசுவது தேவன் என்பதை உணர்ந்துகொண்டார். அவர் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஆண்டவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பணக்கஷ்டங்கள் தொடர்ந்தன. வருமானம் இல்லாததால் அவருடைய பெற்றோர், அவர்களை வீட்டைவிட்டு துரத்தினர். அப்போது அவர்கள் பெதஸ்தாவுக்கு வந்தனர். கூட்டத்தில், நான் அவரை பெயர் கூறி அழைத்தேன். "தேவ ஊழியர் ரத்தினம் என்பது யார்? ஆண்டவர் உங்கள் பெயரை அழைக்கிறார் என்பதை நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் தேவனை நம்பினீர்கள். நீங்கள் செய்யும் எல்லாம் வாய்க்கும்." பெரிய சமாதானம் அந்தக் குடும்பத்தை நிறைத்தது. இன்றைக்கு அவரும் அவர் மனைவியும் நான்கு திருச்சபைகளை ஸ்தாபித்துள்ளனர். அவர்கள் பிள்ளைகள் இளம்பங்காளர்களாக ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறார்கள். ஆம், இயேசுவே வழியாயிருக்கிறார். அவர் உங்களுக்கும் வழியாவார்.

ஜெபம்:
பரம பிதாவே, வழியாகவும், சத்தியமாகவும், ஜீவனாகவும் இருக்கும் இயேசுவின் நாமத்தினால் உம்மிடத்தில் வருகிறேன். நான் செல்லவேண்டிய திசையை தவறவிட்டதுபோல் உணருகின்ற நேரத்தில், நீரே ஒரே வழி என்பதை நினைவுப்படுத்தும். என் இருதயத்தை சந்தேக மேகம் சூழ்கின்றபோது நீரே சத்தியமாயிருக்கிறீர் என்பதையும், வாழ்க்கை பாரமாய் தோன்றும்போது நீரே ஜீவனாயிருக்கிறீர் என்பதையும் நினைவுப்படுத்தும். ஆண்டவராகிய இயேசுவே நீர் சிலுவையில் செய்த தியாகத்தின் மூலம் பிதாவை அடைவதற்கு ஏற்ற வழியை உண்டாக்கியமைக்காக ஸ்தோத்திரம். என் இரட்சகரும், மேய்ப்பரும், ராஜாவுமாகிய உம்மையே இன்றைக்குப் பற்றிக்கொள்கிறேன். உம்முடைய நாமத்தினாலே கேட்பதற்கு உரிய தைரியத்தை எனக்கு தந்தருளும். உம் கரம் என் வாழ்வில் செயல்படுவதைக் கண்டு என் இருதயம் மகிழ்ச்சியினால் நிரம்பி வழிய கிருபை செய்யும். உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய உம்மை கனம்பண்ணுகிறேன். நான் உம்முடன் உலாவுகிறேன்; உம்மால் ஜீவிக்கிறேன்; உம்முடைய பிரசன்னத்தில் பரிபூரண ஆனந்தம் அடைகிறேன் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.