"அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்" (யோவான் 1:16). இது உங்களுக்கு தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தம். இயேசு, தேவனுடைய ஆசீர்வாதங்களை பூரணமாக பெற்றிருந்தார்; பரிசுத்தத்தில் பூரணராக இருந்தார்; தேவ வல்லமையும் அவருக்கு பூரணமாக இருந்தது; தெய்வீகதன்மையை பூரணமாக கொண்டிருந்தார். அவர் மாம்சத்தில் வந்த தேவனாயிருந்தார். நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, "ஆண்டவரே, நான் பாவத்தை விட்டுவிட்டேன். பிசாசுடனான தொடர்பை விட்டுவிட்டேன். உலகத்தின் தீய மக்களுடனான தொடர்பை விட்டுவிட்டேன். பரிசுத்தத்தை உடையவராகிய கர்த்தராகிய இயேசுவுடன் மாத்திரமே தொடர்பு கொண்டிருக்கிறேன்," என்று சொல்லுங்கள். அப்போது கிருபையின்மேல் கிருபையை பெறுவீர்கள். இயேசுவின் சாயலுக்கு கிருபை உங்களை மறுரூபமாக்கும். இயேசுவில் பொதிந்திருக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் பெறத்தக்க கிருபை. பரலோகத்தில் பிரவேசிக்கத்தக்க கிருபை. கிருபையின்மேல் கிருபை.
கிருபையின்மேல் கிருபை என்பதற்கு எந்தப் பாவத்தையும் செய்யலாம்; கிருபை வந்து உங்களை மன்னிக்கும் என்று அர்த்தமல்ல. தேவன், பாவங்களை தாராளமாக செய்யும் எந்த மனுஷனையும் சகித்துக்கொள்ளுகிறவரல்ல. ஆம், நாம் பலவீனத்தால் பாவம் செய்யும்போது பரிசுத்த ஆவியானவர் நமக்காக பரிந்துபேசுகிறார். பரிசுத்த ஆவியானவர், "நீ பாவம் செய்துவிட்டாய்," என்று கூறுகிறார். நாம் மெய்யாக மனந்திரும்பி, இனிமேலும் பாவஞ்செய்யாதிருக்க தேவனிடம் கிருபையை கேட்கும்போது, பாவங்களை விட்டுவிட்டு மன்னிப்பு கேட்கும்போது, தேவ கிருபை கிடைக்கிறது. நாம் ஏழு முறை விழுந்தாலும், நாம் உண்மையாய் மனந்திரும்பி, விசுவாசிக்கும்போது தேவ கிருபை வரும். தேவ கிருபை நம்மை பாதுகாக்கும்; இயேசுவின் பரிபூரணத்தை தரும். நாம் பாவஞ்செய்துவிட்டு, இயேசுவின் பாவமற்ற சாயலுக்கு மறுரூபமாக்கும்படி கேட்காமல், "ஆண்டவரே, என்னை மன்னியும்," என்று கேட்டால் கிருபைக்கு எந்த அர்த்தமுமிருக்காது.
ஆகவே, மெய்யாய் மனந்திரும்புவோம். இயேசுவை சுமந்து செல்லும் பரிபூரணத்தை தேவன் தருவார். கிருபை வந்து நம்மை மறுரூபப்படுத்தும். ஒரு மொழிபெயர்ப்பிலே இயேசுவின் பரிபூரணத்தினாலே ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதத்தை அடைகிறோம் என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவுக்குள் எல்லா ஆசீர்வாதமும் அடங்கியிருக்கிறது. ஆகவே, உங்கள் இருதயத்தை திறந்திடுங்கள். உங்களுக்கு என்ன ஆசீர்வாதம் இப்போது தேவையோ, இயேசுவின் பரிபூரணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதத்தைக் கேட்பதற்கு பதிலாக, இயேசுவையே கேளுங்கள். என் தந்தை ஜெபிக்கும்போது, "ஆண்டவரே, பரிசுத்த ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்," என்று கேட்டபோது, தேவனாகிய கர்த்தர், "தினகரன், உனக்கு நான் வேண்டுமா அல்லது பரிசுத்த ஆவியின் வரங்கள் வேண்டுமா?" என்று கேட்டார். பரிசுத்த ஆவியானவர், "கர்த்தாவே, எனக்கு நீர் வேண்டும்." என்று ஜெபிக்கும்படி என் தந்தையை வழிநடத்தினார். ஆண்டவர், அவருக்கு எல்லாவற்றையும் கொடுத்தார். இயேசுவின் பரிபூரணத்தினாலே நீங்கள் கிருபையின்மேல் கிருபையை பெறுவீர்கள். ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் இப்போதே உங்கள்மீது வருகிறது.
ஜெபம்:
அன்புள்ள இயேசுவே, தேவனுடைய பரிபூரணமாக, பரிசுத்தத்திலும் வல்லமையிலும் இரக்கத்திலும் நிரம்பி வழிகிறவராக நீர் இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்று என் பாவங்கள், அடிமைத்தனத்துடன் எனக்குள்ள பிணைப்புகள், உம்மிடமிருந்து என்னை பிரிக்கும் காரியங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். உம்மோடு மட்டுமே, பரிசுத்தராகிய உம்மோடு மட்டுமே நான் இணைக்கப்பட்டிருக்க விரும்புகிறேன். மன்னிக்கப்படுவதற்கு மட்டுமல்ல, உம்முடைய சாயலுக்கு மறுரூபமாவதற்கும் உம்முடைய கிருபையினால் என்னை நிரப்பும். ஆண்டவரே, நான் உம்முடைய ஆசீர்வாதங்களை மட்டும் தேடவில்லை; எனக்கு தேவையான எல்லா ஆசீர்வாதங்களும் உமக்குள் இருப்பதால் இன்னும் அதிகமதிகமாய் உம்மை தேடுகிறேன். தயவுசெய்து வந்து எனக்குள் வாசம்பண்ணும். உம்முடைய பரிபூரணம் என்னில் விளங்கட்டும். இப்போதும் எப்போதும் உம்முடைய கிருபை என் வாழ்வில் விளங்குவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன், ஆமென்.