எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்" (சங்கீதம் 57:2) என்ற வசனத்தை தியானிப்போம். "தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலிப்பியர் 4:19) என்றும், "நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது" (நீதிமொழிகள் 23:18) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம்.
 
தேவன் யாவற்றையும் செய்து முடிக்கிறவராயிருக்கிறார். அவர் உங்கள் தேவைகளையெல்லாம் நேர்த்தியானவிதத்தில் அருளிச்செய்வார். எனக்கு அருமையான தேவ பிள்ளையே, "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்" (சங்கீதம் 138:8) என்றும் வேதம் கூறுகிறது. "ஓ! இப்படி என் வாழ்வில் நடக்கவில்லை. எனக்கு இது வேண்டும்," என்று நீங்கள் நினைக்கலாம். உங்கள் வாழ்வில் இல்லாத அநேக காரியங்களைக் குறித்து நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ இருக்கலாம். "கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார்" (ரோமர் 9:28) என்று வேதம் கூறுகிறது. இதற்காகவே, நாம் வேதத்தை வாசிப்பது அவசியமாகிறது.

இந்த ஆசீர்வாதத்தை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது? நாம் கர்த்தரை நம்பவேண்டும் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 9:10). இயேசுவின்மேல் முழு நம்பிக்கை வைக்கவேண்டும். நாம் அவரை நம்பும்போது, அவர் நம்முடைய விருப்பங்களை நிச்சயமாகவே நிறைவேற்றுவார். தாவீதின் வாழ்க்கையைப் பாருங்கள். அவன் இளைஞனாயிருந்தபோதிலும், கோலியாத்துக்கு முன்பாக நின்றான்.

கோலியாத் யார்?
கோலியாத், பெரிய இராட்சதனாக இருந்தான்; தலை முதல் கால் வரைக்கும் ஆயுதம் தரித்திருந்தான். ஆனால், தாவீது, எந்த ஆயுதமும் இல்லாத சிறுபையனாக இருந்தான்.

அவனுடைய இருதயத்தில் இருந்த நம்பிக்கை எது?
கர்த்தருடைய நாமத்தின்மேல் அவன் முழு நம்பிக்கை வைத்திருந்தான். கர்த்தராகிய தேவனை அவன் விசுவாசித்தான். தன்னுடைய சுயபெலனை அல்ல; கர்த்தரின் நாமத்தை அவன் நம்பினான்.
அன்பானவர்களே, நீங்களும் அவ்வாறே செய்யுங்கள். உபத்திரவங்களின் வழியாக, பாடுகளின் வழியாக நீங்கள் கடந்துசெல்லும்போது, கர்த்தரின் நாமத்தை நினைத்திடுங்கள். இயேசுவின் நாமத்தில் ஆசீர்வாதத்தை கேளுங்கள். தாவீது ஆசீர்வதிக்கப்பட்டதுபோல், நீங்களும் சகல ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வீர்கள். சிறுவனாகிய தாவீதால் இராட்சதனை கொல்ல முடிந்தது. நீங்களும் அதிசயங்களை பெற்றுக்கொள்வீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்:
பரம தகப்பனே, நன்றியும் விசுவாசமும் நிறைந்த இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். நீர் எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்கிறவராகவும், என்னை பாதுகாக்கிறவராகவும், என்னை வழிநடத்துகிறவராகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய வாக்குத்தத்தங்களையும் கிருபையையும் நம்புகிறேன். எனக்காக யாவற்றையும் செய்துமுடித்தருளும்; என்னுடைய குறைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் உம்முடைய மகிமையிலே நிறைவாக்கும். என்னுடைய விசுவாசத்தை, குறிப்பாக உபத்திரவங்களின், பாடுகளின் காலத்தில் பெலப்படுத்தியருளும். தாவீதைப்போல உம்மேல் நானும் முழு நம்பிக்கை வைப்பதற்கு உதவும். என் வாழ்க்கையில் உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக. நீர் எனக்காக வைத்து வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை நான் பெற்றுகொள்ள உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.