எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்" (சங்கீதம் 128:1) என்ற அருமையான வசனத்தை நாம் தியானிப்போம். இந்த வசனத்தில் இரண்டு முக்கியமான குறிப்புகள் உள்ளன. முதலாவது, நாம் கர்த்தருக்குப் பயப்படவேண்டும். இரண்டாவது, நாம் கர்த்தருடைய வழிகளில் நடக்கவேண்டும். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கும், அவருடன் நெருங்கிய ஐக்கியம் கொள்வதற்கும் தேவனுக்குப் பயப்படும் பயம் மிகவும் அவசியம்.
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம், புகழ்ச்சியை தரும் என்று வேதம் கூறுகிறது (நீதிமொழிகள் 31:3). என்னுடைய வாழ்க்கையில் இது உண்மையாயிருக்கிறது. இந்த ஆழமான ஆவிக்குரிய சத்தியங்களை நான் புரிந்துகொள்ளாத காலமும் இருந்தது. ஆனாலும், ஒருநாள், ஆண்டவர் அவருடைய வசனத்தின் மூலமும் அவருடைய ஊழியர் மூலமும் என்னோடு பேசினார். "சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்" (நீதிமொழிகள் 31:30) என்ற வேத வசனத்தை நான் வாசித்தபோது, கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றும் என்பது தெளிவாக விளங்கியது. நாம் எல்லா காரியங்களையும் தேவ பயத்துடன் செய்வது தேவனுக்கு பிரியமாயிருக்கும்.
தேவனுக்குப் பயப்படும் பயத்தை வளர்த்துக்கொள்வது எப்படி? தேவன் நமக்கு தமது வழிகளைப் போதிப்பார் என்றும், அவருக்குப் பயப்படும் பயத்தை நமக்குள் வைப்பார் என்றும் வேதம் கூறுகிறது (சங்கீதம் 32:8). "நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்" (ஏசாயா 30:21) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். தேவ பயம் நமக்கு இருக்கும்போது, நம்முடைய வாழ்க்கையை ஆண்டவர் ஆசீர்வதிப்பார். "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்" (எரேமியா 17:7) என்று வேதம் கூறுகிறது. இவ்வாறே, "கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்" நீதிமொழிகள் 28:25 என்ற வசனமும் கூறுகிறது.  
அன்பானவர்களே, உங்களைக் குறித்து என்ன? தேவ பயம் உங்களுக்குள் இருக்கிறதா? நீங்கள் கர்த்தருடைய வழிகளில் நடக்கிறீர்களா? அப்படி நடந்தால் உங்கள் வாழ்வும், உங்கள் குடும்ப வாழ்வும் ஆசீர்வதிக்கப்படும்; நீங்கள் தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, வல்லமையுள்ள இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம் முன்னே வருகிறேன்; உம்முடைய வழிகாட்டுதலுக்காகவும் அன்புக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தைக் குறித்து ஏற்றவிதத்தில் அறிந்துகொண்டு, என் இருதயத்தில் ஏற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்யும். உமக்குப் பிரியமானபடி வாழ்வதற்காக, உமக்குக் கீழ்ப்படிந்து உம்முடைய வழிகளில் நடப்பதற்கு எனக்குப் போதித்தருளும். ஆண்டவரே, உமக்குப் பயந்து உம்முடைய வழிகளில் நடப்பதையே நான் தேடுவதால் உம்முடைய வசனம் கூறுகிறபடி என்னை ஆசீர்வதித்தருளும். உம்முடைய சித்தத்திற்கேற்ப என்னுடைய வாழ்க்கையை மறுரூபமாக்கும். நான் செய்கிற காரியங்கள் யாவும் உம்முடைய மகிமையை விளங்கப்பண்ணட்டும். உம்மேல் ஆழ்ந்த பயபக்தியை எனக்குள் வைத்து, உம்மை துதிக்கும் துதி என் மூலமாக பாய்ந்து வரச் செய்யும். உம்முடைய வழிகளை எனக்குப் போதித்து, நான் முழுவதுமாக உம்மை நம்புவதற்கு உதவி செய்யும். நானும் எனக்கு அன்பானோரும் உமக்குப் பயப்படும் பயத்துடன் நடந்து, உம்முடைய நாமத்தை நம்புவதால் எங்கள் வாழ்க்கையை பரிபூரணமாக ஆசீர்வதித்தருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.