"ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்" (1 பேதுரு 5:6). எனக்கு அருமையானவர்களே, மேற்கண்ட வேத வசனத்தின்படி, ஆண்டவர் உங்களை உயர்த்த விரும்புகிறார். நீங்கள் தாழ்த்தப்பட்ட நிலைமையில் இருக்கலாம். அவருக்காக நீங்கள் காத்திருக்கும்பொழுது, உங்களுக்கு புது பெலனைக் கொடுத்து, கழுகுகளைப்போல செட்டைகளை அடித்து உயரே எழும்பும்படியாக தமது கிருபையைக் கொடுக்கிறார். அவரே நம்மை பெலப்படுத்துகிற தேவன். "என் கிருபை உனக்குப் போதும் உன் பெலவீனத்தில் என் பெலன் பூரணமாய் விளங்கும்" என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஒரு பட்டம் உயரே பறக்க வேண்டுமென்றால் காற்று இருக்க வேண்டும். அதுபோல, நீங்கள் உயரே எழும்புவதற்கு கிறிஸ்துவின் பெலன் வேண்டும். உங்களைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய உங்களுக்கு பெலனுண்டு. நம்மை பெலப்படுத்துவதற்காக கிறிஸ்து சிலுவையிலே நம்முடைய பெலவீனங்களை தம்மீது ஏற்றுக்கொண்டார். ஆம், நாம் பெலத்தின்மேல் பெலனடையும்படி நம்மை தம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்புகிறார். ஆகவே, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியானவரால் நிரம்பி ஜெபியுங்கள். நம் சுயத்தினால் ஜெபம் பண்ணினால், அழுகை, துக்கம், இழப்பு, சஞ்சலம், திகில், கோபம் தான் வரும். ஆனால், வேதத்தை கருத்தாய் வாசித்து, பரிசுத்த ஆவியினால் நிறைந்து ஜெபிக்கும்பொழுது, அவருடைய பலத்த கரம் நம்மை உயர்த்துகிறது.

என் தந்தை ஆண்டவருடைய வல்லமையினால் நிரம்பி, லட்சக்கணக்கான மக்களுக்கு சுகமளிக்கும் வல்லமையைக் கொண்டு வருவார் என்று ஆண்டவர் தீர்க்கதரிசனமாக சொன்னபொழுது, அவருடைய இரண்டு நுரையீரல்களும் செயலிழந்தது. பயங்கரமான துக்கம், வலி வேதனை என் தந்தையின் உள்ளத்தை உடைத்தது. அப்பொழுது ஒரு தரிசனத்தை ஆண்டவர் என் தந்தைக்கு காண்பித்தார். ஒரு உயர்ந்த மலையில் சிறிய பாதையில் அவர் நடந்துகொண்டிருந்தார். கீழே எட்டிப் பார்த்தால் பயங்கரமான குழி. பிசாசு அவரை கொன்றுவிட வேண்டும் என்று குதித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது தந்தையின் அருகில் ஒரு கரம் வந்து, "மகனே, இதில் ஏறிக்கொள்" என்று ஒரு சத்தம் கேட்டது. அவ்வாறே அவர் அதில் ஏறி, அடுத்த பக்கத்திற்கு போனார். அது ஆணிபாய்ந்த இயேசுவின் கரம். என் தந்தை விழித்துக்கொண்டார். சுகமடைந்தார். அதன்பின்பு கோடிக்கணக்கான மக்களுக்கு சுகத்தைக் கொண்டு வரும்படியாக அவருடைய ஜெபங்கள் இருந்தது.

அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். ஆண்டவர் உங்களை ஏற்ற காலத்தில் உயர்த்துவார். அவருடைய கரம் உங்களுக்காக இன்றைக்கும் ஆணி கடாவப்பட்ட கரமாக இருக்கிறது. உங்களுடைய காயங்களை ஆற்றி உங்களை உயர்த்துவார். அப்படி பாக்கியம் பெற்ற ஒருவருடைய சாட்சி.

வசந்த் பிலிப் என்பவர், 2022-ம் ஆண்டு, பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்தார். இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற, தகுதி தேர்வு எழுதினார். ஆனால் எல்லாவற்றிலும் குறைந்த மதிப்பெண்களே எடுத்தார். ஆகவே, ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். அதன் அருகில் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரம் அமைந்துள்ளது. ஒருநாள் அவர், ஜெப கோபுரத்திற்கு போய் வரலாம் என்று நினைத்து, அங்கு வந்தார். அப்பொழுது நானும் அங்கே இருந்தேன். நான் அவருக்காக ஜெபித்தேன். அதன்பின்பு அவர் தேர்வு எழுதினார். தேர்வு முடிவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றார். அதோடுகூட மற்ற சலுகைகளும் அவருக்கு வந்தது. இன்றைக்கு அவர் ஒரு மருத்துவராக இருக்கிறார். உங்களுக்கும் அப்படியே செய்வார்.

ஜெபம்: 
அன்புள்ள இயேசு சுவாமி, உம்முடைய பிள்ளையாகிய எனக்கு உதவி செய்வதற்காக உமக்கு ஸ்தோத்திரம். உமது கரம் என்மீது இறங்கி, என்னை பெலப்படுத்துவதாக. நிறைவானது வரும்பொழுது குறைவானது ஒழிந்துபோகும் என்ற உம்முடைய வாக்கு என் வாழ்வில் நிறைவேறட்டும். சகலமும் என் வாழ்வில் நன்மைக்கேதுவாகவே நடக்கட்டும். என் வாழ்வை ஆசீர்வதித்து செழிக்கச்செய்து, உயர்த்தி வைப்பீராக. உம்முடைய தீர்மானம் என் வாழ்வில் சம்பூரணமாய் நிறைவேறுவதாக. என்னை உயர்ந்த ஸ்தானங்களுக்கு ஏறிவரப்பண்ணும். இந்த நாளில் இந்த ஆசீர்வாதத்தை எனக்கு தருவதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!