எனக்கு அன்பான தேவபிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்" (நீதிமொழிகள் 4:18) என்ற வசனத்தை நாம் தியானிக்கப் போகிறோம். நீதிமானுடைய பாதை நடுப்பகல் சூரியன்போல, மிகுந்த பிரகாசமாகவும் மகிமையாகவும் இருக்கும். நடுப்பகல் சூரிய வெளிச்சம் நாம் பார்க்கக்கூடாத அளவுக்கு மிகுந்த பிரகாசமாக இருக்கும். ஆனால், அதைப்போல பிரகாசிக்கும்படி நாம் எப்படி மாற்றப்பட முடியும்? நம்மில் அநேகர் பாவமும் பாவத்தின் அடிமைத்தனங்களும் சூழ்ந்திருக்க இருளுக்குள் பிடிக்கப்பட்டிருக்கிறோம்.
அன்பானவர்களே, இன்றைக்கு உங்கள் உண்மைநிலை அப்படியிருந்தால், இன்றே நீங்கள் மறுரூபமாவதற்கான நாளாகும். ஆண்டவருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். வேதத்தில் கிறிஸ்துவுக்கு எதிரான கிரியைகளை செய்த சவுல் என்று மனுஷனை குறித்துப் பார்க்கிறோம் (அப்போஸ்தலர் 9ம் அதிகாரம்). அவன் கோபாக்கினையின் பாதையில் சென்றுகொண்டிருந்தான்; கோபாக்கினையின் பாத்திரமாக இருந்தான் (ரோமர் 9:23). ஆனாலும் தேவன் தம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவனை சந்தித்தார். இயேசு, அவனை பெயர் சொல்லி அழைத்து, "எவ்வளவுநாள் நீ என்னை துக்கப்படுத்துவாய்?" என்று கேட்டார். அந்தக் கணம் சவுல் தன் இருதயத்தில் குத்தப்பட்டான். கிறிஸ்துவுடனான சந்திப்பு எல்லாவற்றையும் முற்றிலும் மாற்றியது. "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்" (கலாத்தியர் 2:20) என்ற வசனம் மறுரூபமாகுதலின் அனுபவத்தை விளக்குகிறது.
இதுதான் உண்மையான வெற்றியின் பாதையாகும். நீங்கள் இருளுக்குள் இருந்தாலும், சாத்தானின் பாதையில் நடந்தாலும், அவர், சவுலாகிய உங்களை பவுலாக மாற்றுவார். "ஆண்டவரே, நான் பாவி. என்னை மன்னியும். நான் இருளுக்குள் இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு என்னை நடத்தும்," என்று உண்மையாக உள்ளத்தில் ஜெபியுங்கள். நீங்கள் கூப்பிட்டால், அவர் உங்களுக்குச் செவிகொடுப்பார்; இருளிலிருந்து உங்களைத் தூக்கியெடுப்பார்; தமக்குள் புதிதான, பிரகாசமான வாழ்க்கையை தருவார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, தாழ்மையுள்ள இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். என்னுடைய பாவங்களை, நான் இருளில் நடப்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஆண்டவர் இயேசுவே, நீர் சவுலை அழைத்து அவன் வாழ்க்கையை மறுரூபப்படுத்தியதுபோன்று என்னையும் மாற்ற முடியும் என்று விசுவாசிக்கிறேன். உம்மிடம் மன்னிப்பையும் இரக்கத்தையும் வேண்டுகிறேன். என்னை சுத்தமாக்கியருளும்; ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்து வாரும். நான், இனி எனக்காக வாழவிரும்பவில்லை. என் வாழ்க்கையை உம்மிடம் ஒப்படைக்கிறேன். கிறிஸ்து என்னில் ஜீவிப்பாராக. நான் உம்முடைய சத்தியத்தில் நடப்பதால் என்னுடைய பாதை பிரகாசிப்பதாக. ஆண்டவரே, என்னை நேசிப்பதற்காக, உம்மை எனக்காக தந்ததற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.