எனக்கு அன்பானவர்களே, இந்த மாதத்தில் ஆண்டவர், "ஆசீர்வாதமான மழை பெய்யும்" (எசேக்கியேல் 34:26) என்று கூறுகிறார். பரிசுத்த ஆவியானவரே அந்த மழை. தெய்வீக மழை உங்கள் வாழ்வில் வறண்டுபோயிருக்கிற பகுதியை உயிர்ப்பிக்கும். பாழான நிலத்தின் மீது பெய்யும் மழை பலன் கொடுக்கும்; அதேபோன்று பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வரும்போது உங்களைக் கனிகொடுக்க வைப்பார். தேவ தூதன் மரியாளுக்குத் தோன்றி, "பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்" (லூக்கா 1:35) என்று கூறினான். மரியாள், சாதாரண பெண்ணாயிருந்தாள். ஆனால், பரிசுத்த ஆவி அவள்மேல் வந்தபோது, கிறிஸ்து அவளுக்குள் உருவானார் - கூடாத காரியம் கூடி வந்தது. அன்பானவர்களே, அதே ஆவியானவர் இன்றைக்கு உங்களை நிரப்புவார். நீங்கள் பெலவீனமாக, மறக்கப்பட்டுப்போனதாக நினைக்கலாம்; ஆனால், பரிசுத்த ஆவி உங்கள்மேல் இறங்கும்போது தெய்வீக பெலன் எழும்பும். தேவ வல்லமை உங்களை பலன் கொடுக்கிறவராக மாற்றி, உங்கள் ஆசீர்வாதங்களை ஆயிரமடங்காய் பெருகப் பண்ணி, உங்கள் வாழ்க்கையின் வாயிலாக இயேசுவை காட்டும்.
பரிசுத்த ஆவி உங்களை நிரப்பும்போது, எல்லா கட்டுகளும் உடைந்துபோகும். "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு" (2 கொரிந்தியர் 3:17). அவர் உங்களை இயேசுவின் சாயலாய் மாற்றுவார் (18ம் வசனம்). ஆவியானவர், மன்னிக்கிறதற்கு, சுகப்படுத்துவதற்கு, சமாதானத்தில் நடப்பதற்கு உங்களுக்கு வல்லமையளிப்பார். அன்பானவர்களே, அதே வல்லமை இப்போது உங்கள்மேல் வருகிறது. நீங்கள் மன்னிக்கும்போது, உங்கள் இருதயத்தில் இளைப்பாறுதல் உண்டாகும்; வியாதி பறந்துபோகும்; இழப்புகள் லாபங்களாக மாறும். இயேசுவின் சமாதானம் உங்கள் குடும்பத்தில் நிரம்பி வழியும். இந்த தெய்வீக மழையினால், புது ஜீவன், புது அன்பு, புது மகிழ்ச்சி ஆகியவை உங்கள் உள்ளத்தை நிரப்பும்.
நிறைவாக, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குச் சமாதானத்தை தருவதோடு, உங்களை ஆசாரியரும் தீர்க்கதரிசியுமாக்குகிறார். வேதம், "நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்" (அப்போஸ்தலர் 10:38) என்று கூறுகிறது. அவர் பாவங்களை மன்னிக்கிற ஆசாரியரும், இருதயங்களுக்குள் பார்க்கிற தீர்க்கதரிசியுமானார். அதே ஆவியானவர் மற்றவர்களுக்கு தேவனுடைய செய்தியை கொண்டு செல்வதற்கு உங்களைப் பெலப்படுத்துவார். நீங்கள் ஆறுதலின் வார்த்தைகளை, சுகமளிக்கும் வார்த்தைகளை, வெளிப்படுத்தலின் வார்த்தைகளைப் பேசுவீர்கள். சமாரிய பெண்ணைபோல நீங்கள் இயேசுவிடமிருந்து ஜீவத்தண்ணீரை இறைத்து அநேகர் ஆசீர்வதிக்கப்பட உதவுவீர்கள். இன்றே, "ஆண்டவரே, என்னை உம் பரிசுத்த ஆவியினால் நிறைத்து, ஆசீர்வாதமாக விளங்கப்பண்ணும்," என்று கூப்பிடுங்கள். ஆண்டவர் பாவங்களை மன்னிக்கிற ஆசாரியராகவும், வெளிப்படுத்துகிற தீர்க்கதரிசியாகவும், மேற்கொள்ளுகிற பிள்ளையாகவும் உங்களை அபிஷேகிப்பார். நவம்பர், உங்கள்மேலும் உங்கள் குடும்பத்தின்மேலும் ஆசீர்வாத மழை பொழிகிற மாதமாக விளங்கும்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, பரிசுத்த ஆவியை என்மேல் அனுப்புகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்றைக்கு, உம் ஆசீர்வாதங்கள் என்மேல் மழையாகப் பொழியட்டும். உம்முடைய தெய்வீக வல்லமையால் என்னை நிரப்பி, பெலவீனங்கள் எல்லாவற்றையும் அகற்றும். இயேசுவின் சாயலாய் என்னை மறுரூபமாக்கும். என்னைப் புண்படுத்தியவர்கள் அனைவரையும் மன்னிப்பதற்கான கிருபையை எனக்கு அருளுவீராக. உம் சமாதானம் என் இருதயத்தையும் வீட்டையும் ஆளுகை செய்வதாக. தடைகள் எல்லாவற்றையும் உடைத்து உம் ஆவியினால் விடுதலையை அருளிச்செய்வீராக. உம்முடைய மகிமையை வெளிப்படுத்தும் ஆசாரியனாக, தீர்க்கதரிசியாக என்னை மாற்றுவீராக. கிறிஸ்துவின் நம்பிக்கையினால் என் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்பாக பிரகாசிக்கும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


