அன்பானவர்களே, இன்றைக்கு வேதத்திலிருந்து, "தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்" (சங்கீதம் 46:1) என்ற அருமையான வசனத்தை நாம் தியானிக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்த வசனம் சந்ததி சந்ததியாய் கணக்கற்றோருக்கு ஆறுதலை அளிக்கும். பலவேளைகளில் மக்கள் நம்பிக்கையற்ற நிலையில் தன்னை அழைக்கும்போது, என் கணவர் இந்த வசனத்தைக் கூறுவார். அவர் மிகுந்த அன்புடன், "ஆண்டவர் ஆபத்துக்காலத்தில் உங்களுக்கு அநுகூலமான துணையாக இருப்பார்," என்று சொல்லுவார். நமக்குப் போராட்டங்கள் வரும்போது, முதலாவது தேவனிடம் செல்லவேண்டும். தனக்கு எதிர்ப்போ, ஆபத்தோ நேரிடும்போதெல்லாம் தாவீது ராஜா அப்படியே செய்தான். தேவனுடைய பலிபீடத்துக்கு ஓடினான்; "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்" (சங்கீதம் 18:2) என்று அறிக்கையிட்டான். தாவீது கர்த்தரை இடைவிடாமல் தேடிக்கொண்டிருந்தான். அவன் போகுமிடமெல்லாம் தேவன் அவனுடன் இருந்தார். வேதம், "தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்" (2 சாமுவேல் 8:14) என்று கூறுகிறது. அன்பானவரே, இன்றும் அதே தேவன் உங்களோடு இருக்கிறார். உங்கள் பயணத்தில், எல்லா சவாலின் மத்தியிலும், கண்ணுக்குத் தெரியாத யுத்தத்திலும் அவர் உங்களுக்குச் சகாயராயிருப்பார்.

குடும்பமாக பெரிய உபத்திரவத்தை நாங்கள் எதிர்கொண்டோம். அந்த வேதனையின் வேளையில் கர்த்தர் என் கணவர் மூலம் தீர்க்கதரிசனமாக, "என் பிள்ளைகளே, கலங்காதிருங்கள். பொறுமையாயிருங்கள். ஜெபத்தில் தரித்திருங்கள். நான் உங்களோடு இருப்பேன். மேகத்தைப் போல உங்களை மூடுவேன். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களோடு வருவேன். என் கிருபை உங்களுக்குப் போதும்," என்று கூறினார். எவ்வளவு ஆறுதலான நிச்சயம்! ஆண்டவர், "என் கிருபை உனக்குப்போதும்" (2 கொரிந்தியர் 12:9) என்ற வசனத்தை எங்களுக்கு நினைவுப்படுத்தினார். ஆம், அன்பு தேவ பிள்ளையே, உபத்திரவங்கள் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்போது பதற்றப்படாதீர்கள்; மனமுடைந்து போகாதீர்கள். வேதம், "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்" (ரோமர் 12:12) என்று கூறுகிறது. தேவனுடைய வாக்குத்தத்தங்களை பற்றிக்கொள்ளுங்கள். "கர்த்தர் என் கன்மலை. என் அடைக்கலம், என்னை விடுவிக்கிறவர், என் பலத்த துருகம்," என்று தைரியமாக அறிக்கை செய்யுங்கள். அடிக்கப்பட்டபோதும், சிறைப்பட்டபோதும், கப்பற்சேதத்தில் இருந்தபோதும், புறக்கணிக்கப்பட்டபோதும் பவுல், மிகுந்த நம்பிக்கையுடன், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:13) என்று கூறினான். இன்றைக்கும் அதே பெலன் கிடைக்கிறது. தேவனே உங்கள் பெலனாயிருக்கிறபடியால் பாதையில் எது வந்தாலும் நீங்கள் அசைக்கப்படமாட்டீர்கள்.

வேதம், "தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்" (சங்கீதம் 46:5) என்று அழகாகக் கூறுகிறது. எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம்! ஒவ்வொரு நாள் காலையும், நீங்கள் எழுந்தவுடன், முதலிடத்தில் தேவனை வைத்திடுங்கள். உங்கள் திட்டங்களுக்குள், உங்களை வேலைக்குள், உங்கள் குடும்ப வாழ்க்கைக்குள் அவரை அழைத்திடுங்கள். அவரோடு நாளை ஆரம்பித்தால், அவரது சமுகம் மேகத்தைப்போல உங்களுக்கு முன்னே செல்லும்; அவரது கரம் உங்களை வழிநடத்தும். சகாயம் வந்துகொண்டிருக்கிறது என்பதை மறவாதிருங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்து உங்களுக்கு சமாதானத்தையும் வெற்றியையும் தருவார். இப்போது நீங்கள் கண்ணீர் விடலாம். ஆனால், சீக்கிரமே கர்த்தர் உங்கள் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணுவார். நீங்கள் அவரையே முழுவதும் சார்ந்திருப்பதால், அவரது பலத்த கரம் உங்களை தூக்கியெடுப்பதை உணர்வீர்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நான் சந்திக்கிற எல்லா போராட்டத்திலும் என்னுடன் இருந்தருளும். நீரே என் கன்மலையாய், அசைக்கமுடியாத அடைக்கலமாக இருக்கிறீர். உம்முடைய மகிமையின், பாதுகாப்பின் மேகம் என் வீட்டை சூழ்ந்துகொள்ளும்படி செய்யும். எல்லா பெலவீனத்தின் மத்தியிலும், வேதனையின் மத்தியிலும் உம்முடைய கிருபையே எனக்கு போதுமானதாக இருப்பதாக. எல்லா உபத்திரவங்களின்போதும் எனக்கு பெலனை, பொறுமையை விசுவாசத்தை தந்தருளும். சமாதானத்தை, வெற்றியை, தெய்வீக தயையை தந்து என்னை ஆசீர்வதித்தருளும். மூடிய கதவுகள் எல்லாவற்றையும் திறந்து, என் குடும்பத்தில் அற்புதங்களைச் செய்தருளும். காலைப்பொழுது உம்முடைய சமுகத்தாலும் சந்தோஷத்தாலும் நிறைந்திருக்கட்டும் என்று இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.