எனக்கு அருமையான கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருடைய நாமத்திலே உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்றைக்கு நாம் தியானிக்கப் போகிற வேத வசனம், 1 யோவான் 4:9. "தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை (ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை) இவ்வுலகத்திலே அனுப்பினதினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது." இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே தேவனால் அனுப்பப்பட்டு, சிலுவையிலே ஆணிகளால் அடிக்கப்பட்டு, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இரத்தம் சொட்ட சொட்ட நமக்காக பாடுகளையும், வேதனைகளையும் அனுபவித்தார். சவுல் என்ற மனுஷன் கேட்டின் புத்திரனாக இருந்தான். அப்படிப்பட்ட மனுஷன் எப்படிப்பட்டவனாக மாறினான்? கிருபாபாத்திரமாக மாறினான். ஆண்டவருடைய பிள்ளைகளை துன்புறுத்தி வந்த சவுலை, ஆண்டவர் சந்தித்து, பவுலாக அவருக்கு ஊழியம் செய்கிறவனாக மாற்றினார். அவன் தேவனுடைய ஊழியனாக வல்லமையாய் எடுத்து உபயோகிக்கப்பட்டான். ஆகவேதான், "நான் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டேன். ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாமிசத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காக தம்மை தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்" என்று சொல்லுகிறான் (கலாத்தியர் 2:20). ஆம், கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுபோல, நானும் சிலுவையில் அறையப்பட்டேன். என்னுடைய பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக தேவனுடைய குமாரன் எனக்காக சிலுவையில் அடிக்கப்பட்டார். என் பாவங்களையெல்லாம் சிலுவையில் சுமந்தார். நான் இனி சுமக்கவேண்டியதில்லை. நான் விடுதலையானேன். அவருடைய இரத்தம் என்னை சுத்திகரித்தது என்று சொல்லுகிறான். இதுதான் விசுவாசம்.

இப்பொழுது யாரெல்லாம் பாவத்தில் இருக்கிறீர்களோ, இருளில் இருக்கிறீர்களோ, குடி வெறியில் இருக்கிறீர்களோ, பொய் சொல்லுகிறீர்களோ, குடும்பத்தில் சண்டை போடுகிறீர்களோ அல்லது குடும்பத்தில் சமாதானம் இல்லையோ, சிலுவையை நோக்கிப்பார்த்து, கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். பவுல் சிலுவையை நோக்கிப் பார்த்ததினால்தான் அவனுக்கு விடுதலை கிடைத்தது. கிருபா பாத்திரமாக மாறினான். தேவனுடைய அன்பு அங்கே வெளிப்பட்டது. சவுலாக இருக்கும்போது, அவன் பாவத்திலே ஊறியிருந்தான். ஆனால், பவுலாக கிருபாபாத்திராமாக மாறினபொழுதோ, "கிறிஸ்துவுடனேகூட நானும் சிலுவையில் அறையப்பட்டேன்" என்கிறான். அதைப்போலவே, நீங்களும் இந்த அன்பைப் பெற்றுக்கொண்டு, உங்கள் இருதயத்தை ஆண்டவரின் பக்கமாக திருப்புங்கள். உங்களை சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுங்கள். பாவம், அக்கிரமம் சாபம் எல்லாவற்றையும் அறிக்கையிட்டு விட்டுவிடுங்கள். அப்பொழுது, கர்த்தர் தமது இரத்தத்தினால் உங்களைக் கழுவி சுத்திகரித்து, பரிசுத்தவானாக, பரிசுத்தவாட்டியாக மாற்றுவார். உங்களை கிருபா பாத்திரமாக மாற்றுவார். உங்கள் குடும்பத்தில் காணப்படும் பிரிவினை, கசப்பு, இருள் யாவும் மாறிப்போகும்படி செய்வார். அவருடைய இரத்தம் அவ்வளவு வல்லமையுள்ளது. கிறிஸ்துவினுடைய அன்பு உங்களிடத்திலிருந்து மற்றவர்களுக்குள்ளும் பிரவாகித்து ஓடும்படி செய்வார். ஆகவே, உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஜெபம்: 
எங்கள் அருமை தகப்பனே, நீர் என்மீது வைத்துள்ள அன்பிற்காக உமக்கு நன்றிகளை ஏறெடுக்கிறேன். உம்முடைய கரத்தில் என்னை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறேன். நீர் என்னை இருளிலிருந்தும், பாவத்திலிருந்தும் விடுவித்து, கிருபாபாத்திரமாக மாற்றுவீராக. எனக்காக நீர் சிலுவையில் சிந்தின உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் என்னை கழுவி சுத்திகரியும். என் வாழ்க்கையை புதிய சிருஷ்டியாக மாற்றுவீராக. என்னுடைய பழைய வாழ்க்கையை முற்றிலுமாய் மாற்றி புதிய வாழ்க்கையைக் கொடுப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே. ஆமென்.